Header Ads



ஒரே இரவில் பெரிய பணக்காரர்களை எல்லாம், தெருவுக்கு கொண்டுவந்த மள்வானை வெள்ளம்

-பர்வீன்-

கடந்த சில நாட்கள் சீரற்ற காலநிலையின் காரணமாக இலங்கையின் பல பிரதேசங்கள் வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் உயிர் இழப்புக்களையும்,பாரிய சொத்திழப்புக்களையும் சந்தித்துள்ளனர்.அந்த வகையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெள்ளப்பெருக்கிறால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள மல்வானையும் ஒன்று.

மல்வானை கிராமம் களனி கங்கையின் அருகாமையில் அமைந்துள்ள மிக அழகான ரம்மியமான பிரதேசமாகும், ரம்புட்டானுக்கு பேர்போன பிரதேசமான மல்வானை முஸ்லிம்களையும்,சிங்களவர்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய கிராமம்மாகும். இங்குள்ளவர்களின் பிரதான ஜீவனோபாயத்தொழில் வியாபாரம் ஆகும் கொழும்புக்கு அன்மையில் அமைந்திருப்பதால் அனேகமான வியாபாரிகள் கொழும்பை மையமாக வைத்தே தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுதவிரவும் மல்வானை நகரப்புறமானது பெரும்பாலும் மல்வானை வியாபாரிகளின் வியாபார ஸ்தலங்களைக் கொண்டதாகும். இலங்கையின் வரலாற்றிலேயே இரண்டாவது பள்ளிவாயில் இங்குள்ள ரக்‌ஷபான பிரதேசத்தில் அமைந்துள்ள பெரிய பள்ளியாகும். சுமார் ஐந்து நூற்றாண்டிற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வரலாற்றைக் கொண்ட இந்தப்பிரதேசமானது, போர்த்துக்கீசரின் காலத்தில் கோட்டை மன்னனினால் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதும் இந்த ரக்‌ஷபான பள்ளிவாயில் பிரதேசத்தில் தான் எனவே தான் அந்த ஒப்பந்தம் "மல்வானை ஒப்பந்தம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

களனி கங்கையின் கரையோரத்தில் அமைந்துள்ளபடியால் வருடாவருடம் மல்வானையின் சில பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதுண்டு,குறிப்பாக ரக்‌ஷபான,காந்திவளவ,ஆட்டா மாவத்த,கந்தவத்த,உலகிட்டிவல, விதானகொட போன்ற பிரதேசங்கள் பகுதியளவில் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால் இம்முறை வந்த வெள்ளமானது யாரும் எதிர்பாராத வண்ணம் மேற்சொன்ன ஊர்களில் ரக்‌ஷபான,காந்திவளவ,ஆட்டா மாவத்த போன்ற பிரதேசங்களில் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தப்பிரதேசத்திற்கு வந்த மிகப்பெரிய வெள்ளம் இதுவாகும். சுமார் 4500 முஸ்லிம் குடும்பங்களை கொண்ட மல்வானைக்கு இம்முறை வந்த வெள்ளம் பேரழிவை உண்டு பண்ணிவிட்டே ஓய்ந்துள்ளது. மல்வானை பாஸார் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதோடு சுமார் 13 அடிக்கு நீர் ஓடியது. 

அவ்வாறே ஆட்டா மாவத்த போன்ற பிரதேசங்களில் முற்றுமுழுதாக நீரினால் மூழ்கடிக்கப்பட்டு, 100 விகிதம் இடப்பெயர்வும்,சொத்துக்கள் அழிவும் ஏற்பட்ட பிரதேசமாகும். 

ஒரே இரவில் பெரிய பணக்காரர்களை எல்லாம் தெருவுக்கு கொண்டுவந்து சாதனை புரிந்துள்ளது இந்த வெள்ளம். கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமதியான சொத்துக்கள், அன்றாட பாவனைப்பொருட்கள், மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள், புத்தகம்,கொப்பி,பேக் இப்படி எல்லாத்தரப்பினரையும் துக்கத்தில் ஆழ்த்தி பெரும்சோகத்தினுள் தள்ளிவிட்டது இந்த பெரும் வெள்ளம். 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மிகவும் சோகமானவை,கவலை தோய்ந்தவை,மனிதபிமானமுள்ள ஒரு சராசரி மனிதனால் ஜீரணிக்க முடியாதவை.


1 comment:

  1. Vandiyum oru naal oadathil erum; odamum oru naal vandiyil erum.

    ReplyDelete

Powered by Blogger.