IS பயங்கரவாதிகளின் ஆயுட்காலம் ஊசலாடுகிறது
இராக்கில் "இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கோட்டை' என்று கூறப்படும் ஃபலூஜா நகருக்குள் அரசுப் படையினர் திங்கள்கிழமை நுழைந்ததாக ராணுவம் தெரிவித்தது.
இதுகுறித்து ஃபலூஜா நகர மீட்பு நடவடிக்கைக்கான படைத்தளபதி அப்துல் வஹாப் அல்-சாடி கூறியதாவது:
அமெரிக்கக் கூட்டுப் படை, இராக் விமானப் படை மற்றும் ராணுவ விமானங்களின் தாக்குதல்களை பக்கபலமாகக் கொண்டு, ஃபலூஜா நகருக்குள் ராணுவம் நுழைந்தது.
பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படையினர், அன்பார் மாகாண காவல் படையினர், ராணுவத்தினர் ஆகியோர் மூன்று திசைகளிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 6.30 மணி) நகருக்குள் நுழைந்து முன்னேறி வருகின்றனர்.
அவர்களை முன்னேற விடாமல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர் என்றார் அவர்.
இதுகுறித்து பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படை செய்தித் தொடர்பாளர் சபாஹ் அல்-நார்மன் கூறுகையில், ஃபலூஜா நகரை மீட்பதற்கான போரின் அடுத்த கட்டமாக, நகருக்குள் நுழையும் நடவடிக்கை திங்கள்கிழமை அதிகாலை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நகர்ப்புறப் போர்க் களத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படையினர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபலூஜா நகரை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக அமெரிக்க ராணுவம் கடந்த 2004-ஆம் ஆண்டு மிகக் கடுமையாகப் போரிட வேண்டியிருந்தது.
வியத்நாம் போருக்குப் பிறகு, இந்த நகரில் நடைபெற்ற சண்டைதான் அமெரிக்கர்களுக்கு மிகச் சவாலானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
பாக்தாதுக்கு 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஃபலூஜா நகரிலும், அதனைச் சுற்றியும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கையை இராக் ராணுவம் கடந்த வாரம் தொடங்கியது.
முதலில் ஃபலூஜாவைச் சுற்றியுள்ள கிராமங்களை மீட்பதில் கவனம் செலுத்தி வந்த ராணுவம், தற்போது நகருக்குள் நுழைந்து முன்னேறி வருகிறது.
இதையடுத்து, விரைவில் அந்த நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நம்பப்படுகிறது.
ஃபலூஜாவை மீட்பதற்கான ராணுவ நடவடிக்கைக்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே அந்த நகரிலிருந்து வெளியேறின.
இந்த நிலையில், இன்னும் 50,000 அப்பாவிப் பொதுமக்கள் நகருக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, பொதுமக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பெரிய நகரங்களில் ஃபலூஜாவும் ஒன்று.
அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மொசூல், தொடர்ந்து பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வணிக மையங்களில் ஐ.எஸ். தாக்குதல்: இராக்கில் 24 பேர் பலி
பாக்தாத், மே 30: இராக் தலைநகர் பாக்தாதிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் 24 பேர் உயிரிழந்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபலூஜா நகருக்குள் நுழைந்து ராணுவம் முன்னேறி வரும் நிலையில், ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பாக்தாதின் வடக்கே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் ஷாப் பகுதியில் வணிக மையத்தையொட்டி அமைந்துள்ள சோதனைச் சாவடியில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இதில் 3 வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை அந்த சோதனைச் சாவடியில் மோதி வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், தார்மியா என்ற நகரின் திறந்தவெளி சந்தைப் பகுதிக்குள் வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்தார். இதில் 3 போலீஸார் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
பாக்தாதின் கிழக்குப் பகுதியில் ஷியாக்கள் நிறைந்த சதர் பகுதியின் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இணையதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷியா பிரிவினரையும், அரசு அதிகாரிகளையும் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

Post a Comment