Header Ads



குர்திஷ் படையினரும் அமெரிக்காவுடன் இணைந்து IS பயங்கரவாதிகளை நெருங்குகிறார்கள்..!


ஈராக்கில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் முக்கிய மையமாக இயங்கும் மொசூல் நகரின் கிழக்கு பகுதியை மீட்கும் படை நடவடிக்கை ஒன்றை அந்நாட்டு குர்திஷ் பஷ்மார்க் படையினர் ஞாயிறன்று ஆரம்பித்துள்ளனர்.

“சர்வதேச கூட்டுப்படை போர் விமானங்களின் உதவியோடு பஷ்மார்க் தலைமையிலான படை தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது” என்று குர்திஷ்தான் பிராந்திய பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது. சூரியோதயத்திற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மொசூலின் காசிர் நகருக்கு அருகாமையில் இருக்கும் ஐ.எஸ். கட்டுப்பாட்டு பல கிராமங்களையும் மீட்கும் இலக்குடன் சுமார் 5,500 பஷ்மார்க் படையினர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

“ஐ.எஸ். மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் பல முயற்சிகளில் ஒன்றாக இந்த படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. மொசூல் நகர் மீதான தாக்குதல் ஏற்பாடாகவும் இது இருக்கும்” என்று குர்திஷ் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த பத்து மணிநேரம் இடம்பெற்றிருக்கும் படை நடவடிக்கை மூலம் பஷ்மார்க் படையினர் மூன்று கிராமங்களை முழுமையாக மீட்டுள்ளனர். இதன்போது ஐந்து தற்கொலை கார் குண்டுகள் பஷ்மார்க் படையினர் மற்றும் கூட்டுப்படை வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோதலில் முன்னரங்கு பகுதிகளில் பஷ்மார்க் படையினருடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை இராணுவ ஆலோசகர்களும் இருப்பதை காண முடிந்ததாக ஏ.எப்.பி. செய்திச் சேவையின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் யுத்த களத்தில் நிலை கொண்டிருப்பது குறித்து படங்கள் பிடிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது உறுதியாகபோதும் ஒருவரது உடையில் அமெரிக்க கொடி இருந்துள்ளது.

ஐ.எஸ்ஸுடனான யுத்த நடவடிக்கையில் உதவி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான அமெரிக்க தலைமை கூட்டுப்படையினர் ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் குர்திஷ் படையினருக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனர்.

மொசூலுக்கு அருகில் கடந்த சனிக்கிழமை ஐ.எஸ்ஸை இலக்கு வைத்து 12 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஈராக்கின் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு முக்கிய நகரான பலூஜாவை மீட்க ஈராக் படையினர் பாரியதொரு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.