தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசாங்கத்துடன், கைகோர்க்க உலமாசபை தயார் - ரிஸ்வி முப்தி
-ARA.Fareel-
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இஸ்லாம் எந்த ஒரு இனத்தினரையும் வெறுத்தொதுக்குவதை அனுமதிக்கவில்லை. இந்நாட்டு முஸ்லிம்கள் சகோதர உறவுடன் ஏனைய இனத்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறார்கள். எனவே எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக உலமாசபை தெரிவித்துள்ளது.
நேற்று 11- மதியம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அக்கலந்துரையாடலின் போதே இவ்வாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கலந்துரையாடலில் உலமாசபையின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக், பிரதிச் செயலாளர் எம்.எஸ்.எம் தாஸிம் உட்பட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சின் சார்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸியும் அமைச்சின் மேலதிக செயலாளரும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி உலமா சபையின் இன நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைபாட்டிற்குமான செயற்திட்டங்களை விளக்கினார்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளை பெரும்பான்மை சமூகத்தினருக்கு விளக்குவதற்காகவும் தெளிவுபடுத்துவதற்காகவும் சிங்கள மொழியில் நூல்கள் வெளியிட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான நூல்கள் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெரும்பான்மை சமூகம் எம்மீது கொண்டுள்ள சந்தேகங்களை, தவறான கருத்துக்களை களைவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கங்கள், இன நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு என்பவற்றினை வலியுறுத்தி நிகழ்த்தப்படுகின்றன என்றார்.
நாட்டில் இன நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் வளர்ப்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்க உலமா சபை தயாராக இருக்கிறது. முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை சமூகம் கொண்டுள்ள தவறான கருத்துக்களை அகற்றுவதற்கு உலமா சபை என்றும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு உலமா சபைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இனங்களுக்கிடையில் உறவுகளை வளர்ப்பதற்கும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கும் 25 பேர் கொண்ட சர்வ மதத்தலைவர்கள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதியின் கருத்துப்படி 5 முஸ்லிம் மதத்தலைவர்கள், 5 இந்து மதத்தலைவர்கள், 5 கிறிஸ்தவத் தலைவர்கள், 10 பௌத்த மதத்தலைவர்கள் இதில் அங்கம் வகிக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்தக் குழு நியமிக்கப்படவில்லை. அமைச்சர் பௌஸியை ஜனாதிபதி தொடர்பு கொண்டு இக்குழுவை தாமதியாது நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பௌஸி அதற்கான ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இது குறித்து அமைச்சர் பௌஸி கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சு இன நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்குமான ஒரு தேசிய திட்டத்தை வடிவமைக்கவுள்ளது. இதில் உலமாசபையின் பரிந்துரைகளும் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும்.
பாடசாலை மட்டத்திலும் இன நல்லிணக்கம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் இனத்தினையும் பாடசாலை மட்டத்திலே மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஏற்படும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
தேசிய அரசாங்கம் நல்லாட்சியை மேற்கொண்டுவரும் நிலையில் இச்சந்தர்ப்பம் இன நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒற்றுமைக்கும் சிறந்த சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார். ARA.Fareel

Post a Comment