Header Ads



தமிழ் - முஸ்லிம் சமூக முரண்பாடுகளை, பூதாகரமாக்க பாரிய சூழ்ச்சி - நிஸாம் காரியப்பர்


(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் இனங்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நல்லாட்சி அரசாங்கம் திடமான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நிலவும் சில முரண்பாடுகளை, பூதாகரமாக மாற்றுவதற்கு சில சக்திகள் பாரிய சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகிறது என கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்த அமர்வின் ஆரம்பத்தில் விசேட உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பட்டார். அங்கு அவர் மேலும் பேசுகையில்;

"கடந்த சில நாட்களாக எனக்கு கிடைக்கும் தகவல்களை பார்க்கின்றபோது, எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே ஏற்படக்கூடிய நல்லுறவை மிகவும் இலகுவாக உடைக்கக் கூடிய காரணிகளை அறிந்து கொண்டுள்ள தீய சக்திகள், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனவா என்கின்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த சூழ்ச்சிகளை இரண்டு சமூகத்தினரும் இணைந்து முறியடிக்க வேண்டிய தருணத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். எமது மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் இருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எம்மைப் பொறுத்தவரை எந்தவொரு சமூகத்திற்கும் அநியாயம் இழைக்காத வகையில் மிகவும் பக்குவத்துடன் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கின்றோம். அந்த அடிப்படையில் நானும் பிரதி முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரான ஏகாம்பரம் ஐயாவும் சில விடயங்களை பிரத்தியேகமாகப் பேசி, சில இணக்கப்பாடுகளைக் கண்டுள்ளோம். அதன் மூலம் எவர் எந்த ரூபத்தில் வந்தாலும் எம்மை உடைக்க முடியாது என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.   

No comments

Powered by Blogger.