சவூதி அரேபியாவில் உள்ள "சிலோன் ஹவுஸ்" மீட்கப்படும் - அமைச்சர் ஹலீம் சபதம்
-விடிவெள்ளி ARA.Fareel-
தற்போது இலங்கையைச் சேர்ந்த தனியார் ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சவூதி அரேபியாவிலுள்ள “சிலோன் ஹவுஸ்” முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கையேற்கப்பட்டு அடுத்த வருடம் முதல் இலங்கை ஹஜ்ஜாஜிகளின் நலன்களுக்குப் பயன்படுத்தப்படும் என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
சிலோன் ஹவுஸை நிர்வகித்து வரும் மௌலவி சாதிக் தற்போது சுகயீனமுற்றுள்ள நிலையில் நிர்வாகத்தை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார். இது முஸ்லிம்களின் பொதுச் சொத்து என்பதால் இதற்கென நம்பிக்கை பொறுப்பாளர் குழுவொன்று நியமிக்கப்பட்டு நிர்வாகம் அந்தக் குழுவிடம் கையளிக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.
இலங்கை ஹஜ் பயணிகளின் நலன் கருதி 1963 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட சிலோன் ஹவுஸ் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக வினவிய போதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சவூதி அரேபியாவில் “சிலோன் ஹவுஸ்” கட்டடத்துக்கு பல சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம் அவற்றை எதிர்கொண்டு சிலோன் ஹவுஸைப் பாதுகாத்தவர் சாதிக் ஹாஜியார். சிலோன் ஹவுஸ் தொடர்பாக நிதி விபரங்கள் வங்கிக் கணக்கில் இருப்பதாகவும் தான் சுகயீனமாக இருப்பதால் அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் மௌலவி சாதீக் என்போருக்கிடையில் இது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும். சிலோன் ஹவுஸை இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வசதி குறைந்தவர்களின் தங்குமிடமாகப் பயன்படுத்த முடியும். இதனால் மிகக் குறைவான கட்டணத்தில் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியுமாக இருக்கும்.
அடுத்த வருடம் முதல் புதிய நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் கீழ் ஹஜ்ஜாஜிகளுக்கு சிலோன் ஹவுஸ் பயன்படுத்தப்படும் என்றார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் சிலோன் ஹவுஸைப் பொறுப்பேற்றால் இலங்கையிலிருந்து ஹஜ் கடமைக்காகச் செல்லும் சுமார் 200 பேர் அளவில் அங்கு தங்கவைக்க இயலும் என்றும் இந்த வாய்ப்பினை வசதி குறைந்த ஹஜ்ஜாஜிகளுக்கு வழங்கினால் 2 ½ இலட்சம் ரூபா கட்டணத்தில் அவர்களது ஹஜ் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜார் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் உம்ரா கடமையை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சவூதி ‘அரப் நியூஸ்’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
சிலோன் ஹவுஸ் தற்போது தனிப்பட்ட ஒருவர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் அது புதிய பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட வேண்டும். இந்நியமனம் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, சிலோன் ஹவுஸைப் பரிபாலித்து வந்த நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் அனைவரும் காலமாகிவிட்ட நிலையில் தற்போது அது தனிப்பட்ட ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
மக்கா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சவூதி அரசாங்கம் பழைய சிலோன் ஹவுஸ் கட்டடத்தை உடைத்து விட்டு அதற்கு மாற்றீடாக புதிய கட்டடமொன்றினைக் கையளித்துள்ளது. இலங்கையிலிருந்து ஹஜ், உம்ரா கடமையினை நிறைவேற்றச் செல்லும் யாத்திரிகர்களின் பயன்கருதியே சிலோன் ஹவுஸ் சவூதி அரேபியாவினால் வழங்கப்பட்டது.
இலங்கையிலிருந்து ஹஜ் கடமைகளுக்காகச் செல்லும் ஏழை யாத்திரிகர்களின் பாவனைக்காகவும் வைத்திய குழுவினரின் பாவனைக்காகவுமே இது ஒதுக்கப்பட்டது.
தற்போதுள்ள சிலோன் ஹவுஸ் 4 மாடிகளுடன் 63 அறைகளைக் கொண்டதாகும். இந்தக் கட்டடத்தில் 261 யாத்திரிகர்களை தங்க வைக்க முடியும். இது ஹரீரி பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்துள்ளது.
ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் சிலோன் ஹவுஸ் தொடர்பான விடயங்களை சவூதி அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு ஒரு நபருக்கு அட்ரோனி அதிகாரத்தை வழங்கியிருந்தது. இந்நிலையில் அவர் சிலோன் ஹவுஸின் உரிமையைத் தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டார்.
சிலோன் ஹவுஸ் கட்டடம் 1963 ஆம் ஆண்டு கொழும்பு இலங்கை ஹஜ் நலன்புரி நிதியத்தினால் 115000 சவூதி ரியாலுக்கு வாங்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு சவூதி மன்னர் சவூத் இலங்கை ஹஜ்யாத்திரிகர்களின் நலன் கருதி கட்டடமொன்றினை நிர்மாணித்துக் கொள்ள அனுமதி வழங்கியதையடுத்து சிலோன் ஹவுஸ் வாங்கப்பட்டது என்றார்.
மேலும் இவ்விவகாரத்தை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
இதேவேளை தற்போது சிலோன் ஹவுஸ் ஹஜ் மாதத்தில் பாகிஸ்தானிய ஹஜ்யாத்திகர்களுக்கு சுமார் 2 மில்லியன் சவூதி ரியாலுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும் அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.

Post a Comment