ஜெனீவா கதவில் தட்டிய கோமாளிகளும், ராஜபக்ஸ காவலுக்கு வரும் காவிகளும்...!!
-நஜீப் பின் கபூர்-
வரலாற்றில் வருகின்ற அபூ நவாஷ் கதைகளை நாம் கேட்டிருக்கின்றோம் படித்திருக்கின்றோம். தென்னாலி ராமனின் கதைகளை இன்றும் நமது குழந்தைகள் ஆவர்வத்துடன் படித்து சுவைப்பதை பார்த்து வருகின்றோம். சிங்கள மக்களும் அரச சபையில் இருந்தாகச் சொல்லப்படுகின்ற அந்தரே என்ற பாத்திரத்தின் நகைச்சுவை பற்றி பேசுவதை நாம் கேட்டு வருகின்றோம்.
அந்தக் கதைகள் எல்லாம் அர்த்தபுஷ்டியுள்ள கதைகளாக அமைந்திருந்தன. அவர்களால் குடிகள் எவருக்கும் பாதகம் ஏற்பட்டதாக நாம் அறிந்தவரை பதிவுகள் இல்லை. ஆனால் இன்று நமது நாட்டு அரசியல்வாதிகள் பண்ணுகின்ற கோமாளித்தனங்களும் அட்டகாசங்களும் மக்களுக்கு பெரும் நெருக்கடிகளையும் அழிவுகளையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
தமது ஆட்சி காலத்திலும் அண்மைய நாட்கள் வரையும் ஜெனீவாவை புலிகளின் ஏஜெண்டுகளின் கூடாரம் ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனமும் அதன் அதிகாரிகளும் பக்கச்சார்பானவை என்று திட்டித் தீர்த்த முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களது கையாட்களும் என்பது இன்னும் நமது மக்களுக்;கு மறந்து போக நியாயமில்லை. விமல் வீரவன்ச இந்த அமைப்புக்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியபோது அதற்குப் பின்னால் நின்று ஊக்குவித்தவரும் வீரவன்சவுக்கு தாக சாந்தி கொடுத்து உற்சாகப்படுத்தியவரும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ என்பதும் நமது அரசியல் பதிவுகள்.
தலைவலியும் காய்ச்சலும் சின்னச் சின்ன நோய்களாக இருந்தாலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற வார்த்தைக்கு ஏற்ப, அவர்கள் இன்று யாரைத் திட்டித் தீர்த்தார்களோ அவர்களின் கதவையே இன்று தட்டி உதவி கேட்டு நிற்கின்றார்கள், நமது நாட்டு அரசியல் கோமாளிகள் சிலர். சரி இப்போதாவது இந்த அமைப்புக்கள் நீதி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் என்று அவர்களுக்குப் புரிந்திருப்பதையிட்டு எமக்கும் ஒரு சின்னத் திருப்தி.
இவர்கள் போன இடத்தில் ஆடையின்றி நின்ற கதை ஒன்று இன்று பரவலாக நமது அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வருகின்றது. போன இடத்தில் இவர்கள் தங்களது ஆடைகளைப்பறி கொடுத்து மாற்று ஆடைகளுக்கு வழியின்றி வீதிவழியே ஆடை தேடி கடை கடையாக இவர்கள் ஊர்வலம் போய் இருக்கின்றார்கள்.
வேடிக்கை என்னவென்றால் டலஸ் அலகப்பெரும, பந்துல குனவர்தன, உதய கம்மன்பில ஒரு நோக்கத்திற்காக ஜெனிவா நோக்கிப் பறந்தாலும் அவர்கள் மூவரும் வௌ;வேறு விமானங்களிலேயே அங்கு போய் இறங்க வேண்டி இருந்தது. அப்படி வேறு வேறு விமானங்களில் போனாலும் பந்துல குனவர்தன, உதய கம்மன்பிலவும் விமான நிலையத்தில் தங்களது ஆடைகள் அடங்கிய பெட்டிகளைப் பறிகொடுத்திருந்தனர். ஆடைகளைப்பறி கொடுத்தது மட்டுமல்லாது சர்வதேச பாராளுமன்றத்தில் கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற கடிதங்களைக்கூட கம்மன்பில் அங்கு தவறவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு பற்றி ஜேவிபி செயலாளர் டில்வின் சில்வா இப்படி ஒரு கதையை சொல்லி இருக்கின்றார். 'கள்வர்களுக்கு வக்காளத்து வாங்குகின்ற கூட்டமொன்று ஜெனீவாவில் வந்து இறங்கி இருக்கின்றது. இவர்களை ஆடைகளுடன் அங்கு போக அனுமதிக்கக் கூடாது என்றுதான் கடவுள் அவர்களுக்கு நல்லதொரு தண்டனையைக் கொடுத்திருக்கின்றார்' என்று நையாண்டியாக பேசி இருக்கின்றார்.
ஐ.தே.கட்சி சீனாவின் கொழும்புத் துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டத்தை அன்று கடுமையாக விமர்சித்தது. பதவிக்கு வந்ததும் அந்தத் திட்டத்தை முடக்கிப் போட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ, மீண்டும் அந்த திட்டத்தை மேற் கொள்ளுமாறு சீனாவிடம் போய் மண்டியிடுவது மட்டுமல்ல பெரும் மேற்கத்திய ஆதரவாளராக நின்று பேசும் ரணில் தனது அரசாங்கத்தை நகர்த்துவதற்காக வேறு வழியின்றி இன்று சீனாவிடம் கைநீட்டி வருகின்றார்.
அந்தக் கதை அப்படி இருக்க இந்த முறை ரணிலுக்கு சீனா கொடுத்த பணத் தொகைக்குச் சமமான ஒரு தொகைப் பணத்தை இந்தத் திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்காக லஞ்சமான ஒரு ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர் பெற்றிருக்கின்றார் என்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் முன்னாள் விளையாட்டுக்காரர். அவரது இந்தக் கதை உண்மையானால் இதை என்னவென்று கூறுவது.
இன்று ஊடகங்களின் முக்கிய பேசு பொருளாக மாறி இருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாபஸ் வாங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்ற விவகாரம். இந்த நடவடிக்கையினால் அவருக்கு பெரும் உயிர் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது புலிகள் அவர்களைக் கொல்வதற்கான கதவை அரசு திறந்து கொடுத்திருக்கின்றது என்று மஹிந்த விசுவாவிகள் ஒப்பாறி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் யதார்த்தத்தை மக்கள் மயப்படுத்துவதில் அரசு தோற்றுப்போய் இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார் பிரபல அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான விக்டர் ஐவன். ஏன் ஆட்சியாளர்கள் இதற்கு உரிய பதிலை வழங்க முடியாது தவிக்கின்றார்கள் என்பது எமக்குப் புரிய வில்லை என்பது விக்டர் அங்கலாய்ப்பு.
நாங்கள் தேடிப் பார்த்ததில் எந்த வகையிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் எந்தக் குறைப்புக்களும் நிகழவில்லை. தற்போது பொலிஸ் அதிகாரிகள் 103 பேர் இராணுவத்தைச் சேர்ந்த 103 பேர், என்று மொத்தம் 206 பேர் மஹிந்த ராஜபக்ஷாவுக்குக் காவலுக்கு இருக்கின்றார்கள். ஆனால் பாதுகாப்புத் துறை ஒரு வேலையைச் செய்திருக்கின்றது. இந்தப் மஹிந்த பாதுகாப்புப் பிரிவில் இருக்கின்ற 103 இராணுவ அதிகாரிகளையும் முகாங்களுக்கு திருப்பி அழைத்து அவர்களுக்கு பதிலாக எஸ்ரிஎப் படை அணியினரை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
இதன் முதல் கட்டமாக 50 இராணுவத்தினர் முகாங்களுக்கு திருப்பி அழைக்கப்பட்டு அந்த இடத்திற்கு 50 விஷேட அதிரடிப்படையினர் (எஸ்ரிஎப்) வழங்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் அடுத்த 53 பேரும் இராணுவ முகாங்களுக்கு திருப்பி அழைக்கப்பட்டு அந்த இடத்திற்கு 53 விஷேட அதிரடிப்படையினரை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்திருக்கின்றது. எனவே எந்த வகையிலும் இங்கு ஆட்குறைப்புக்கள் நடைபெறவில்லை என்பது தெளிவு. இதனை துறைக்குப் பொறுப்பானவர்கள் உரிய இடங்களில் முறையாக எத்திவைக்க வில்லை என்பதுதான் இந்த ஒப்பாறிக்கு - குழப்பத்திற்கு அடிப்படை.
இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நடவடிக்கை பற்றியும் சமூகத்திற்குச் சில தகவல்களைச் சொல்ல வேண்டி இருக்கின்றது.
2015.01.08ம் திகதி தேர்தலில் தோற்றுப் போன போது ரணிலைத் தொடர்பு கொண்டு ஹெலியைப் பெற்று ராஜபக்ஷ நேரடியாக ஹம்பாந்தோட்டை - மெதமூலனையில் போய் இறங்கினார். அப்படி அவர் அங்கு போகின்ற போது தன்னிடம் அப்போது பாதுகாப்புக்கு இருந்த 113 பொலிஸார் மற்றும் 115 இராணுவத்தினர் பெருந் தொகையான வெடி பொருட்கள் ஜனாதிபதியாகத் தான் இருந்த நேரத்தில் பாவித்த குண்டு துழைக்காத வாகானங்கள் மற்றும் பெருந் தொகையான இதர வாகானங்கள் உபகரணங்கள் என்பவற்றையும் அவர் தன்னுடன் எடுத்துச் சென்று விட்டார்.
இதில் எதையும் அவர் திருப்பிக் கையளிக்கவில்லை. இப்படி எடுத்துச் சென்ற குண்டு துழைக்காத ஒரு வாகனம் தனது மகன்மார் ஒருவர் எடுத்துச் சென்ற இடத்தில் விபத்துக்கு இலக்காகியது. அந்த வாகனத்தை மட்டும் திருத்தும் பணிக்காக அரச கராஜில் கொண்டு போய் ஒப்படைத்திருக்கின்றார்கள். எனவே மஹிந்தாவுக்காக இன்று கண்ணீர் வடிக்கின்றவர்கள் இவை பற்றி அறிந்திருக்க வில்லை. அல்லது மக்கள் மத்தியில் ஒரு பிழையான செய்தியை கட்டவிழ்த்து விடுவதற்காக அவர்கள் இதனை அரசியல் நோக்கிற்காக பயன் படுத்துகின்றார்கள்.
இது பற்றி பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டபோது மஹிந்தவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என்று குறிப்பிடுகின்றார். எனவே அந்தத் தவறு தற்போது சரி செய்யப்படுகின்றது. எனவேதான் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள். பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களுக்கும் இந்த விவகாரத்தில் தெளிவு கிடையாது. அத்துடன் விஐபி தொடர்பான பாதுகாப்பு விவகாரம் என்பதால் அவர்கள் இது பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது என்று நாம் கருதுகின்றோம்.
இதிலுள்ள அடுத்த வேடிக்கை என்னவென்றால் ஜனாதிபதி மைத்திரிக்கே இன்று இராணுவப் பாதுகாப்பு கிடையாது. அப்படி இருக்க முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டத்திற்கு முரணான இந்த இராணுவப் பாதுபாப்பு எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. உண்மையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு கடுமையான பாதுகாப்புத் தேவை என்ற விடயத்தில் மற்றுக் கருத்துக்கள் கிடையாது ஆனால் அது தற்போது இருக்கின்ற ஜனாதிபதியை விஞ்சிய பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பெரும் சந்தேகத்திற்கிடமான விவகாரமாக பார்க்க இடமிருக்கின்றது.
அடுத்து முன்னாள் ஜனாதிபதி தற்போது நடந்து கொள்கின்ற முறை, அவர் போய்வருகின்ற இடங்கள் செய்கின்ற வேலைகளைப் பார்க்கின்ற போது அவர் பாதுகாப்பே தனக்குத் தேவையில்லை என்ற விதத்தில் நடந்து கொள்வதை அனைவருக்கும் தற்போது பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
கடும் அவதானமாக இருக்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஒரு கூட்டம் தமது அரசியல் இருப்புக்காக சந்திவழியே இழுத்துக் கொண்டு திரிகின்றது. அவரும் அதிகார ஆசையில் விகாரை, கோயில், பள்ளி என்று அவர்கள் பின்னால் ஓடித்திரிகின்றார். அதற்காக அவரது அரசியல் பயணங்களை நிறுத்த வேண்டும் என்று நாம் கேட்கவில்லை. ஒரு வேலை விரைவில் பதவிக்கு வரவாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றது என்று சுமனதாச செய்தி சொல்லி இருக்கின்றாரோ என்னவோ!
தாதிகள் சங்கம் நடாத்தும் ஆனந்த முருத்தெட்டுவே தேரர் தாம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பாதுகாப்பிற்கு 1000 பேர் கொண்ட படை அணி ஒன்றை தயார் செய்ய இருப்பதாகவும், அதனை 100 கொண்ட காவிகள் படை வழிநடத்தும் என்று ஜெனரல் பாணியில் கூறுகின்றார். உலகில் அகிம்சையை வழியுறுத்திய மதவாதிகளில் முன்னிலையில் இருப்பவர் புத்த பெருமான்! அவர் போதித்த பௌத்தத்திற்கு இன்று நமது நாட்டில் இந்த நிலை! ராஜபக்ஷாக்களைப் பாதுகாக்கப் போகின்றவர்கள் துப்பாக்கி தூக்கித்தானே ஆகவேண்டும்.!
இதற்கிடையில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட சிங்கள நாளிதலொன்றினால் சுற்றப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பாக ஊடக சந்திப்பில்; தகவல் சொன்னார். அவர் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் தருமாறு பொலிசுக்கு பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அழைக்கப்பட்ட போது, அவர் அங்கு நடந்து கொண்ட முறை, கொடுத்த வாக்கு மூலம் ஒரு நல்ல நகைச்சுவை நாடகமாகி இருக்கின்றது.
எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது இந்த ஊடகச் சந்திப்பில் தினேஷ் குனவர்தன கலந்து கொள்வதாக இருந்து. அவர் அங்குவர முடியாத நிலையில்தான் நான் அங்கு பேச நேர்ந்தது. அவர்தான் என்னை இப்படிப் சொல்லச் சொன்னார். அங்கு அதைத்தான் நான் கூறினேன். எனக்கு இது பற்றி வேறு ஒன்றும் தெரியது என்பது அவர் வாக்கு மூலம். ஒரு பேராசிரியருக்கு அரசியல் பிழைப்புக்காக இப்படி ஒரு நிலை! அவமானம்!
நல்லாட்சி அரசாங்கத்தில் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் மேர்வின் நடந்து கொண்டதற்கு சற்றும் மாற்றமில்லாதவகையில் நடந்து கொள்கின்றார்கள். அந்தக் காலத்தில் இவ்வாறான விடயங்களில் பொலிஸ் எப்படி நடந்து கொண்டதோ அதற்கு எந்த வகையிலும் இரண்டாம் தரம் கொண்டதாக இல்லை என்ற வகையில் பொலிஸ் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றது.
வத்தளையில் அமைச்சர் ஜோன் அவர்கள் நள்ளிரவில் நடைபாதை அகற்றிய ஒழுங்கு அதற்கு அவர் வழங்குகின்ற விளக்கம். அந்த விவகாரத்தில் பொலிஸ் நடந்து கொள்கின்ற முறை, அதிகாரிகள் கூறுகின்ற காரணங்கள் - நடந்து கொள்கின்ற ஒழுங்கு, மீண்டும் ஓடு பாதையை திருத்த செலவு செய்கின்ற 80 இலட்சம் ரூபாய்! இவற்றை யார் கொடுப்பது என்ற விவகாரம் எல்லாம் இந்த நல்லாட்சி மீது மக்களுக்கு கடும் வெறுப்பை உண்டு பண்ணி இருக்கின்றது.
இதற்கிடையில் தன்னை அனுராதபுரத்தில் சந்தித்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மஹிந்ந ராஜபக்ஷ புதிய கட்சி அமைப்பது உறுதி என்று அங்கு பேசியதுடன் இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறி இருக்கின்றார். அதே போன்று இந்த முறை நடக்கின்ற மே தினத்தில் சுதந்திரக் கட்சியின் அந்தரங்கங்கள் அரங்கிற்கு வரும்.

Post a Comment