ஜனாதிபதி + அலரி மாளிகைகளில் இன்று 2 முக்கிய சந்திப்புகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அக்கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இன்று புதன்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இச்சந்திப்புக்கான காரணம் யாதென தெரியவில்லை என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சகல மாகாண சபைகளிலும் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில், இன்று 20ஆம் திகதி புதன்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருக்கின்றது. ஜனாதிபதி செயலகத்திலேயே இச்சந்திப்பு, இன்றிரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலைவரம், மேதினக் கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கூட்டு எதிரணியினர், கொழும்பு-05, கிருலப்பனையில் நடத்தவிருக்கின்ற மே தினக் கூட்டம் தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்றது. பத்தரமுல்லையில் உள்ள அவரது காரியாலயத்திலேயே, இந்த விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது. இதேவேளை, காலியில் நடத்தப்படவிருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டத்தில் பங்கேற்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவினால், இக்கடிதம் 18ஆம் திகதி திங்கட்கிழமையன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment