Header Ads



நீர்கொழும்பு நீதிமன்ற நீதிபதிக்கும், சட்டத்தரணிகளுக்கும் இடையே குழப்பம்..!

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் வழக்குகளுக்கு ஆஜராகாமல் வெளிநடப்பு செய்தனர். கடந்த வியாழக்கிழமை நீதிமன்றில் பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே, வழக்கு விசாரணையொன்றின்போது சட்டதரணிகள் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தவேளை, எனக்கு எதிராக பெட்டிஷன் அனுப்பியதற்குப் பரவாயில்லை, நான் சளைக்கப்போவதில்லை. நான் நீதிமன்றின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளேன் என நீதிமன்றில் பகிரங்கமாகக் கூறியதுடன், என்னுடன் சிரித்துப் பேசுபவர்களுக்கும் நட்பு உள்ளவர்களுக்கும் பிணை வழங்குவதாகவும் முறையிட்டுள்ளனர். நான் நீதிமன்றத் தீர்ப்பின்போது எந்தவொரு தனிப்பட்ட நல்லுறவையும் கவனிப்பதில்லை. சட்டத்தரணிகள் எனக்கெதிராக பல்வேறு முறைப்பாடுகளை அனுப்பியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார். 

இவ்வாறு கூறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.  மேலதிக நீதிபதி திலகரத்ன பண்டாரவைச் சந்தித்து இது தொடர்பாக அவர்கள் விளக்கமளித்தனர். இதனையடுத்து மேலதிக நீதிபதி இதில் தலையிட்டு சுமுகமாக முடிப்பதற்காக பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமவைச் சந்தித்து பேச்சுவார்த்தைக்கு அவகாசம் பெற்றுத்தருவதாக சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளார். மேலதிக நீதிபதி திலகரத்ன பண்டார, பிரதான நீதிபதி பூர்ணிமா பரணகமகேயை சந்தித்துப் பேசியபோதும் அவர் சட்டத்தரணிகளைச் சந்திக்க மறுத்துள்ளார். 


மீண்டும் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், நீதிபதியின் இந்த நடவடிக்கையையடுத்து. இல. 1, இல. 2 ஆகிய இரண்டு நீதிமன்றங்களிலும் வழக்குகளில் வாதி, பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகாமல் வெளிநடப்புச் செய்துள்ளனர். ஆனால் நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதனால் வழக்குக்கு வந்த பொதுமக்கள் சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்குப் பெரும் சிரமப்பட்டனர். சட்டத்தரணிகள் இது தொடர்பாக நேற்று மாலை 3.30 மணிக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவைச் சந்திக்கச் செல்லத் தீர்மானித்திருந்தனர். நீதிமன்றுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.