Header Ads



பேராளர் மாநாடு போகும், ராஜாக்களுக்கு ஒர் சங்கதி..!

-நஜீப் பின் கபூர்-

கட்சியின் 26 வது பேராளர் மாநாட்டை முன்னிட்டு சில குறிப்புக்களை மு.கா.உறவுகளுக்குச் சொல்லலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு. மாநாடு தொடர்பாக பலர் பத்திரிகை விளம்பரங்களைக் கொடுத்து தலைவருக்குப் புகழ்பாடுகின்ற  இந்த நேரத்தில் நாங்கள் சற்று வித்தியாசமான ஒரு செய்தியைச் சொல்ல முனைகின்றோம்.

நமது  இந்த கருத்துக்கள் சிலருக்கு ஏன் பலருக்கு வலிக்கும் என்பதும் எமக்குத் தெரியும்.

மு.கா. தலைவர் வாக்குறுதிகள் எதுவும் பெருமானமற்றவை என்பது முஸ்லிம் சமூகத்தை விட மு.கா.வினருக்கு சற்று அதிகமாக தெரியும். இதனை நாம் அவரது தாராள மனசு என்று சொல்வதா அல்லது ஏமாளிகளுக்குக் கொடுக்கும் மிட்டாய் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியாது?

ஆங்காங்கே போய் அதைத் தருகின்றேன் இதைத் தருகின்றேன் என்று அவர் வழங்கிய வாக்குறுதிகளைப் பற்றி நாம் இங்கு பேசவரவில்லை. மு.கா.தலைவர் ஊர் ஊராக போய் கொடுத்த தேசிய பட்டியல் பற்றித்தான் இங்கு பேச நினைக்கின்றோம். இது மு.கா.வின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்ற ஒரு விவகாரம் என்பதனால் தான் நாம் அது பற்றிப் சற்றுப் பேச எண்ணுகின்றோம். மு.கா. பற்றி இவனுக்கு என்ன அக்கரை இவன் யார் இது பற்றிப் பேச என்று சிலர் கேட்கலாம். அதற்கு சில நியாயங்கள் இருக்கின்றது!
விசுவாசம்

இன்று தலைவர் பின்னால் சுற்றி வட்டம் போட்டு  நிற்பவர்கள் மு.கா. பக்தர்கள் தொண்டர்கள் என்பதனை விட அவர் கையாட்கள் எடுபிடிகள் அடியாட்கள்! இவர்களுக்கு கட்சி, கொள்கை, கோட்பாடு எதுவும் கிடையாது-தெரியது. குறிப்பாகச் சொன்னால் இவர்கள் ஹக்கீம் வாதிகள். தலைவர் என்றோ ஒரு நாள் ஐ.தே.க.வுக்கு உத்தியோகபூர்வமாக தாவுகின்றார் என்றால் இவர்கள் அனைவரும் கூண்டோடு அவருடன் வெளியேறி விடுவார்கள். ஆனால் உண்மையான மு.கா. போராளி-தொண்டன் அப்படிப் பண்ண மாட்டான் பண்ணவும் முடியாது.

எனவே மு.கா. நலன்கள் பற்றி ஹக்கீம் வாதிகள் ஒரு போதும் யோசிக்க மாட்டார்கள்! அது பற்றிய தேவைகளும் அவர்களுக்குக் கிடையாது. இது பற்றி மு.கா. போராளிகள்தான் சிந்திப்பான் கவலைப்படுவான். அவனுக்குத்தான். அதன் வலி தெரியும். இலட்சக் கணக்கான ஆதரவாளர்களுள்ள கட்சி மு.கா. அதில் தேசியப் பட்டியலுக்கு தற்காலிகமாக ஒருவரைத் தெரிவு செய்ய ஆள் இல்லை என்பதும் பெரும் வேடிக்கை.

தனது உடன் பிறப்பும், சகாவும்தான் அந்தப் பதவியை அலங்கரிக்க மிகவும் பொறுத்தமானவர்கள் என்ற தலைவர் தீர்மானம் பற்றி மு.கா.வினர் என்ன நினைக்கின்றார்கள்? இவர்கள் எப்படி மு.காவானார்கள்? இது பற்றிய கேள்விகளை எவரும் கேட்காத வரைக்கும் தலைவர் தீர்மானங்கள் இப்படித்தான் தொடரும்.

கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் சாபக்கேடாக இருக்கின்ற பிரதேச வாதமும் அரசியல் மயப்படுத்தப்படாத நமது சமூகமும் மு.கா. தலைவருக்கு இது விடயத்தில் நல்ல காவலரண்கள். இதற்கு முன்னரும் தன்னிடம் எடுபிடி வேலை பார்த்த ஒருவருக்குத்  தலைவர் தேசியப் பட்டியல் வழங்கி அலங்கரித்திருந்தார்.

அந்த ஆள் ஒரு சந்தர்ப்பத்தில் மருதானை சாஹிராக் கல்லூரி பள்ளிவாயிலில் தொழுகையின் பின்னர் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது, முஸ்லிம்களுக்கும் பொலிசாருக்குமிடையில் முறுகல் நிலை தோன்ற, பாதைக்கு எதிர்ப்புறமாக நின்ற அவர் பொலிசார் பக்கத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு கல்லெறிந்த கதையை எத்தனை பேர் அறிந்து வைத்திருந்தார் என்று கேட்கத் தோன்றுகின்றது.

தேசியப் பட்டியல்

நாம் முன்பு சொன்னது போன்று மு.கா.தலைவருடைய வாக்குறுதிகளுக்கு எந்தப் பெருமானங்களும் கிடையாது. எனவே தேசியப் பட்டியல் விவகாரத்தில் இவர் நாடு பூராவும் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகளை நிறை வேற்ற நமது மொத்தப் (225) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொடுத்தாலும் மு.கா.தலைவருக்கு அதுவும் போதாது.

எனவே தலைவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளை வழக்கம் போல் குப்பையில் தள்ளிவிட்டு. மு.கா. கடைசி அடையாளச் சின்னம் என்று இருக்கின்ற ஹசனலிக்கு இந்தத் தேசியப்பட்டியலில் ஒரு இடம் இந்த முறையும் நிச்சயம் வழங்க வேண்டியது மு.கா. மற்றும் சமூக நலன்சார்ந்த விவகாரம் என்பது எமது கணிப்பு. ஊருக்கு மத்திரி என்ற முக்காட்டுக்குள் நின்று தனக்கு பதவி என்று அடம் பிடிக்கின்ற எல்லோருக்கும் தேசியப்பட்டியல் என்றால் இது நடக்கின்ற காரியமா?

அஷ்ரஃபுக்கு பின்னால் நடந்த மு.கா. பேராளர் மா நாடுகள் எதையாவது பண்ணி -சாதித்து இருக்கின்றதா? உணர்வு பூர்வமாக நடந்திருக்கின்றதா? ஆயிரம் தீர்மானங்களை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மீண்டும் ஒரு அஷ்ரஃப் கண்ணுக் கெட்டிய தூரத்தில் இல்லாத நிலையில் கட்சியைத் தனி மனித வழிபாட்டிலிருந்து விடுவிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

பேராளர் கூட்டத்துக்குப் போகும் ராஜாக்களே
கூஜாதூக்கும் ஆட்களாக நீங்கள்
அங்கு போய் நிற்காதீர்கள்!
தர்க்கம் பண்ணுங்கள்!
நியாயம் கேளுங்கள்!
தலைவரை சுற்றி நிற்கின்ற
சுயநலமிகளைத் துரத்தியடியுங்கள்!
அந்தவேலியைத் தகர்த் தெரியுங்கள்.!

2 comments:

  1. வாக்குறிதியை எவன் தான் காப்பாத்திறான் :(மு.க.தலைர்கள்) எல்லோரும் ஒரேகூட்டையில் ஊறிய மட்டைகள்

    ReplyDelete
  2. Well said and well written.

    ReplyDelete

Powered by Blogger.