Header Ads



"நீரிழிவையும் எதிர்த்துப் போரிடுவதைத் தவிர, வேறு வழியில்லை"

நீரிழிவையும் பருமனையும் எதிர்த்துப் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில்தான், நாம் எவ்வளவு ஆற்றல் மிக்கவர்கள் என்பதை உணர்கிறோம். இனி எந்தக் கவலையும் இல்லை!

அன்றாட வாழ்க்கையில் சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே, நம் எடை குறைப்பு முயற்சிகளும் எளிதாகி விடும். நம் ஆதர்ஷ  எடை இலக்கை எட்டுவதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியல் இடுங்கள். குறிப்பாக - உடல்நலப் பயன்கள்... ரத்த சர்க்கரை  அளவு கட்டுக்குள் வரும்... கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்த முடியும். இது மட்டுமா? எடை குறைந்து லேசாக உணரும்போது  எத்தனையோ காரியங்கள் சுலபமாகி விடுமே... இதுவரை சில நிமிட தாமதத்தில் மிஸ் பண்ணிய பஸ்ஸையோ, ரயிலையோ,  விரைவாக நடப்பதன் வாயிலாக ரிலாக்ஸாக பிடிக்க முடியும். 

ஓரிடத்தில் அமர்வதும் எழுவதும் கூட சட்டென செய்யக்கூடிய செயலாகி விடும். படிகளில் மூச்சு வாங்காமல் ஏறி இறங்க  முடியும். குழந்தைகளுடன்/  பேரக்குழந்தைகளுடன் பார்க்கிலோ, பீச்சிலோ ஓடியாடி விளையாட முடியும். பல ஆண்டுகளாக  அணியாமல் வைத்திருந்த கனவு உடைகளை மீண்டும் அணிய முடியும். இப்படி பலவித சந்தோஷங்கள் அடங்கிய பட்டியல்  நிச்சயம் பயனளிக்கும்தானே?

நம்முடைய பழைய போட்டோ (ஒல்லி போட்டோதான்!) ஒன்றை ஃப்ரிட்ஜ் கதவு அல்லது அடிக்கடி பார்வையில் படுகிற இடத்தில்  ஒட்டி வைக்கலாம். அது அவ்வப்போது நாம் அடைய வேண்டிய இலக்கை நினைவூட்டும்!

இலக்கு எட்டப்பட்டவுடன் (குறுகிய கால இலக்கு எட்டலாக இருப்பினும் கூட), நமக்கு நாமே ஒரு பரிசு அளித்துக் கொள்வோம்.  இது வெற்றிப்பாதையில் தொடர் நடை போட ஊக்கம் அளிக்கும். நண்பர்களுடன் அமர்க்களமான ஒரு திரைப்படம் அல்லது மினி  டூர்  செல்வதாகவோ, ஒரு புத்தகம் அல்லது டிவிடி வாங்கு வதாகவோ அப்பரிசு அமையலாம். 

வாரத்துக்கு ஒருமுறை மட்டும் எடையை பார்க்கலாம். ஒவ்வொரு நாளுமே எடையில் மாறுபாடு இருக்கக்கூடும் என்பதால்,  தினம் தினம் எடை பார்த்துக்கொண்டே இருந்தால், எரிச்சல் மட்டுமே எஞ்சும். பொறுமை முக்கியம். எப்படி ஒரே நாளில் எடை  அதிரடியாக அதிகரித்து விடாதோ, அதே போல, எடை குறைவதும் ஒரே இரவில் நிகழ்ந்து விடாது. படிப்படியாகக் குறைவதுதான்  நிலைக்கும்.

பசித்திருக்கும் போது ஷாப்பிங் செல்ல வேண்டாம். அப்போது பசி மயக்கத்தில் கண்ணில் படும் நொறுக்ஸ் எல்லாம் உள்ளே  போகும். பின்னர் வருத்தமும் ஏற்படும். ஷாப்பிங் செல்வதானால், முதலிலேயே லிஸ்ட் தயாரித்துக் கொண்டு, அதைத் தாண்டி  எதையும் வாங்கக்கூடாது. பர்ஸுக்கும் இது நல்லது!

ஒரு கடினமான வேலைநாளின் முடிவில், வழக்கமான நடைமுறைகள் எதையேனும் பின்பற்ற முடியாவிட்டால் வருந்தத்  தேவையில்லை. நாமும் மனிதர்கள்தானே... அடுத்த நாள் நமக்காகப் பிறக்கும். நம் முயற்சியை மீண்டும் தொடங்கலாம்.  (பி.கு: இப்படி தள்ளிப் போடுதல் ‘நாளை மற்றுமொரு நாளே’ என்பதாக தொடர்கதை ஆகக்கூடாது. எப்போதாவது என்றால்தான்  விதிவிலக்கு. அடிக்கடி என்பது அனுமதிக்கப்படக்கூடாது!)

அதிக எடை கொண்ட டைப் 2 நீரிழிவாளர்களுக்கு எடை குறைப்பே முதன்மையான சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது. இதன்  மூலம் ரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு இல்லாது பருமன் மட்டும் இருக்கிற  நபர்களுக்கும் இதனால் பயன் உண்டு. அவர்கள்  இப்போதைய எடையில் 10 சதவிகிதம் குறைத்தால் கூட, நீரிழிவு தாக்குதலை  தள்ளிப்போட முடியும்... தவிர்க்கவும் முடியும்!

(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)

No comments

Powered by Blogger.