அமைச்சரவை கூட்டத்தில், மைத்திரிக்கு எதிராக விமர்சனம்..!
ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து முன்னெடுக்கும் தேசிய அரசுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன எனவும், இதனால் இரு கட்சிக்காரர்களும் முரண்படும் நிலை உருவாகியுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஊழல் மோசடி குற்றச்சாட்டு மற்றும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதியை பல கோடி ரூபாய் விரயம் செய்து வரவேற்றமை ஆகிய விடயங்கள் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையில் தற்போது கருத்து முரண்பாடு வலுப்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 70ஆவது மாநாட்டில் பங்குபற்றிவிட்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது கட்சி உறுப்பினர்கள் ஆரவாரமாக வரவேற்றிருந்தனர்.
இதன்போது மக்கள் கூட்டம் சேர்க்கப்பட்டமை, ஜனாதிபதியை வரவேற்று சுவரொட்டி, பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
இது நல்லாட்சி அரசின் கொள்கைகளுக்கு முரணான செயலாகும் எனவும் ஐ.தே.க. சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், சுவரொட்டி மற்றும் பதாகைகள் கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே காட்சிப்படுத்தப்பட்டன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்சித் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை எனவும் சு.க. குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த அமைச்சரவையில், பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் முடக்கப்படுவதற்கு அமைச்சர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டவர்களே பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் முடக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

Post a Comment