கைசிவக்க வாரிவழங்கிய, காதர் ஹாஜியார்
-ஏ.எச்.எம்.அஸ்வர்-
முல்லைக்கும் தேர் ஈந்த ஒரு பாரிவள்ளல் இருந்தார். தென்னிந்திய சிவகங்கை மாவட்டத்தில் பரம்பு மலை கிராமத்தில், எமது தாய் நாட்டின் பாரிய வள்ளல் காதர் ஹாஜியார் ஏனைய தனவந்தர்களை முந்திக் கொண்டு கைநிறைய - கைசிவக்க கொடை வழங்கிய பாரிய வள்ளல் இவர் அன்றோ!
அவரும் எம்மை விட்டு விடைபெற்று விட்டார். 79 வயது நிறைவாழ்வை எட்டுவதற்கு இன்னும் 06 நாட்கள் தான் இருந்தன. ஒக்டோபர் 04ம் திகதி அவர் மறைவு தினமென ஏட்டில் குறிக்கப்பட்டுவிட்டது.
அவர் வாழ்ந்த எழில் மிக்க கம்பளையைச் சூழ எழுந்திருந்த மலைச்சாரலின் முகட்டை தொட்டவாறு சோக மேகங்கள் அன்று கருநிறமாக மாறி பூமியில் படர்ந்தது. முழுப் பிரதேசமும் சோகமயமாக மாறியது. வெள்ளம் வெள்ளமாக அவர் இல்லத்திற்கு வந்த இலட்சக்கணக்கான மக்கள் பெரும் துக்கத்தால் அவர்கள் மனம் கனத்தது. கண்களில் நீர்த்துளி வடியாத ஒருவரும் அங்கு காணவில்லை.
‘மொஹிதீன் அப்துல் காதர்’ என்று அனைவர் மத்தியிலும் தன்னை இனம் காட்டிக்கொண்ட அப்துல் ரஹீம் மொஹிதீன் அப்துல் காதர் பிறந்த ஊர் வலப்பனை. ரோகண விஜயவீரவின் பிறப்பிடமும் இதே. காதர் ஹாஜியாரும் ஒரு புரட்சிக்கு வித்திட்டவர். அது இரத்தப் புரட்சியல்ல இறந்தும் இறவா கொடை வழங்கிய அற்புத புரட்சியாகும்.
கண்டி மாவட்டத்தில் அவர் கால் பதியாத கல்லும் மண்ணும் இருக்க முடியாது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து புகழ்பூத்த மனிதராக திகழ்ந்த காதர் ஹாஜியாரின் கொடுத்துச் சிவந்த கரங்கள் நீட்டப்படாத ஒரு பள்ளிவாசலே, பாடசாலையோ, மருத்துவமனையோ இருந்ததான வரலாறு கண்டியில் தேடிப்படிப்பது இயலாத காரியமாகும். அவர் எல்லைக்கோடு போட்டு உதவி செய்யவில்லை.
நாட்டில் எந்த பாகத்திற்கு சென்றாலும் காதர் ஹாஜியார் வாரி வாரி வழங்கிய நன்கொடைகளின் அடையாளங்கள் ஏட்டில் அடக்கவொண்ணானது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நாடு பூராகவும் சுற்றித்திரிந்த காதர் ஹாஜியாரின் கண்களுக்கு குறைபாடுகள் பளிச்செனப்பட்டன. அங்கெல்லாம் அவருடைய கொடைத்தன்மை கட்டுக்கடங்காமல் விரிந்தன.
நான் புத்தளம் தொகுதிக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தபோது அவர் நகர அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டார். தனது அமைச்சின் முதல் பணியாக அங்கே கங்காணிக்குளம் பள்ளிவாசலுக்கு சேரவேண்டிய கடைத்தொகுதிகளை மீட்டெடுத்து பள்ளிவாசலுக்கு உரித்தான சொத்தாக பிரகடனம் செய்ததை புத்தளம் வாழ் மக்கள் என்றும் மறந்திடார்.
வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது ஒருநாளும் தனியாகச் செல்ல மாட்டார். தன் மனைவியை கையோடு கூட்டிச் செல்வது அவர் வழக்கம். ஏனைய அரசியல்வாதிகளிடமில்லா ஒரு அசாதாரண குணம் இது. தூதுக்குழுவில் தன் மனைவி இடம்பெறாவிட்டாலும் சொந்த செலவில் மனைவியை அழைத்துச் செல்வார். அன்பின் மேலீட்டால் மனைவியையும் பெண் குழந்தைகளையும் “உம்மா, உம்மா” என்று அழைப்பது அவர் வழக்கம். தம் பெண் குழந்தைகளின் கணவர்களை பெயர் சொல்லி அழைக்கமாட்டார். ‘மருமகன்’ என்றே அழைப்பார்.
அவர்கள் மத்தியில் கட்டுக்கோப்பான ஒற்றுமையைக் கட்டிவளர்த்தார். ‘ஒரு காதர் ஹாஜியார் மறைந்தாலும் அவர் மூன்று காதர் ஹாஜியார்களை வளர்த்துவிட்டு சென்றுள்ளார்’ என ஜனாஸா நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர், எனது நண்பர் ஸெய்யத் அலிஸாஹிர் மெளலானா உதிர்ந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானதென நான் நினைத்துப் பார்க்கிறேன். ஏனைய வர்த்தகர்கள், அரசியல்வாதிகளிடத்து காணவியலாத மிகவும் பலமான பண்புகளை தன்னகத்தே கொண்டு வாழ்ந்தவர் காதார் ஹாஜியார்.
அவரோடு எனக்கு 40 ஆண்டு காலமாக நெருக்கமான தொடர்பு இருந்தது. அவர் பாராளுமன்றத்திலே உரைநிகழ்த்தும் போதெல்லாம் என்னை அவர் பக்கத்திலே அமரச் செய்வார். என் இணைவு அவருக்கு நல்ல தெம்பை ஊட்டியது.
கண்டி மல்வத்த, அஸ்கிரிய நாயக்கத்தேரர்களோடு மிகவும் நெருங்கியப் பழகினார். அதன் காரணமாக சிங்கள சகோதரர்களுக்கும் குறையாது உதவி செய்து வந்தார். மலைநாட்டிலும் அவருடைய சிவந்த கரத்தைக் காணாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. 30க்கு மேற்பட்ட புனித ஹஜ் யாத்திரைகளை நிறைவேற்றினார். மனைவி குடும்பத்தவர்கள் மாத்திரமல்ல அவருடைய குடும்ப உறுப்பினர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதை அவர் வழமையாக்கிக் கொண்டார். இதனால் அவர் பெரும் மன அமைதியை அடைந்தார். வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் முடித்து வைப்பதில் எமது நாட்டில் முதல் தர வள்ளலாகத் திகழ்ந்தார்.
அவருடன் நான் கொண்டிருந்த உறவில் ஒரு மயிர்கூச்செறியும் நிகழ்ச்சி என் ஞாபகத்தில் எழுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் காமினி திஸநாயக்க போட்டியிடுகின்றார். இறுதி நாள் கூட்டம் கொழும்பு கிராண்பாஸ்ஸில். பிங்கிரியாவில் கூட்டத்தை முடித்துவிட்டு ‘ஹெலி’யில் திரும்பினோம். “நான் வீட்டுக்குச் சென்று ஷர்ட்டை மாற்றிக் கொண்டு வருகின்றேன் நீங்கள் காதர் ஹாஜியாருடன் நேராகக் கூட்டத்துக்குச் செல்லுங்கள்” என்று எமக்கு அவர் கூறினார். போகும் வழியில் டீ சாப்பிடவென காதர் ஹாஜியார் என்னை அவர் Ward Place வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
சோனாமரியாக மழை பெய்யத் தொடங்கியது. அதனால் கிராண்பாஸ் செல்ல தாமதமாகியது. வானில் இடிமுழக்கம், பூமியில் பேரிடி முழக்கம், புலிகளுடைய குண்டு தாக்குதலில் காமினி காலஞ்சென்று விட்டார் உடம்பெல்லாம் நடு நடுக்கியது. காதர் ஹாஜியாரும் நானும் தப்பிவிட்டோம். தெய்வீக அருள், என்ன!
அன்னாரின் மண் அறையை பூரண வெளிச்ச வீடாக பிரகாசிக்கச் செய்து, எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னதுல் பிர்தெளஸ் சுவனபதியில் மேலான இடத்தை வழங்குவானாகவும். இவரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், குடும்பத்தவர்கள், உற்றத்தார், சுற்றத்தார், வாக்காள பெருமக்கள் ஆகியோருக்கு பஸ்பிர் ஸம்ரன் எனும் அழகான பொறுமையை வழங்குவானாகவும்!

Aswer haji, this is one of your good qualities
ReplyDeleteAllah thaan puhaluku uriyavan
ReplyDeleteAswer haji ungal mouthin pin ungalaium ivaru makal pesa vandum enne pirathikinran
ReplyDeleteahhha good person
ReplyDelete