Header Ads



சிறையிலுள்ள பொலிஸ் அதிகாரிக்கு, நவீன போன்களை சாப்பாட்டு பார்சல் மூலம் கடத்தியவர் கைது

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியின் சிறைக்குள் போன் தருவித்துக்கொள்ளும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலையாளிக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மண் குரே தற்போது மெகசின் சிறைச்சாலைக்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை இவரைப் பார்வையிட வந்த நபரொருவர் சாப்பாட்டுப் பார்சல் ஒன்றையும் எடுத்து வந்துள்ளார். சிறைச்சாலைக் காவலர்கள் அதனைப் பரிசோதித்தபோது பார்சலுக்குள் நவீன 3டி மொபைல் போன் உள்ளிட்ட ஐந்து மொபைல்போன்கள் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெகசின் சிறைச்சாலையிலிருந்து அண்மையில் விடுதலையான நபர் ஒருவரே லக்ஷ்மண் குரேவின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த போன்களை மறைத்து எடுத்து வந்துள்ளார்.

அத்துடன் போன்களுக்குத் தேவையான சார்ஜர் மற்றும் ரூபா ஆறாயிரம் பணம் என்பனவும் குறித்த சாப்பாட்டுப் பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போன் மற்றும் சாப்பாட்டுப் பார்சலுக்குள் இருந்த அனைத்துப் பொருட்களும் சிறைச்சாலைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,அதனை எடுத்து வந்தவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.