நரேந்திர மோடி நிச்சயம், அனுமதி தருவார் - வசிம் அக்ரம்
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக, இத்தொடரில் விளையாட இந்தியா மறுத்து வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐயிடம் விடாப்பிடியாக வற்புறுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முயற்சிகளுக்கு இதுவரை எந்த பலனும் கிட்டவில்லை. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பாகிஸ்தானின் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த பேட்டி: இந்த தொடர் நடக்க அனுமதி தர வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை வைத்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என தனது அமைச்சரவையில் மோடி கூறியதாக நான் கேள்விப்பட்டேன்.
இதனால் நிச்சயம் மோடி அனுமதி தருவார் என என்னால் உறுதியாக கூற முடியும். மோடி இந்தியாவை சூப்பர் பவர் நாடாக மாற்ற முயற்சிக்கிறார். முன்னதாக கிரிக்கெட்டில் இந்தியா, சூப்பர் பவர் பொருந்திய நாடாகவே உள்ளது. இந்தியா மற்றவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் அழிவில்லாதது. இந்த தொடர் நடக்காவிட்டால், அது கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றார். பேட்டியின் போது, 1999ம் ஆண்டு தனது தலைமையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் வாசிம் அக்ரம் நினைவு கூர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில், கடுமையான அச்சுறுத்தல்களுக்கு இடையேதான் அப்போது பாகிஸ்தான் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
ஆனால் எங்களுக்கு என்ன நடந்தது என்பது வரலாற்றில் உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த அன்பும், பாசமும் நம்ப முடியாத வகையில் இருந்தது. இதே விஷயம்தான் கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் நடந்தது. இப்போதும் கூட ஒரு வர்ணனையாளராக நான் இந்தியாவிற்கு வரும்போது, மக்கள் அன்புடன் என்னை சந்திக்கின்றனர். நாம் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்றும் என்னை அவர்கள் கேட்கின்றனர். பில்லியன் கணக்கான மக்கள் இந்தியா-பாகிஸ்தான் தொடரை விரும்புகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு தடையின்றி செல்லும் என நம்புகிறேன்.

Post a Comment