Header Ads



பொதுபல சேனாவுக்கு, மீண்டும் உயிர் கொடுக்கும் செயல் - மனோ கணேசன்

மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகாவித்தியாலய வீதியின் 36ம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் பூஜைகள் மற்றும் தேர் திருவிழா எந்தவித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்திற்கும் இடம் கொடுக்க முடியாது.

கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது.

அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக்கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பெளத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது.

இந்த தோட்டத்து ஆலய பணிகளுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது. இதற்கு நான் ஒருபோதும் இடம்கொடுக்க போவதில்லை. நான் நேரடியாக இந்த பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றேன்.

இந்த ஆலயத்துக்கு பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

இன்று தலைநகரில் இத்தகைய மத அடிப்படைவாதத்தை முன்னெடுத்து, இந்து கோவில் பணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள், அன்று பொதுபல சேனா முன்னெடுத்த கொள்கைகளையே, தாம் இன்று முன்னெடுக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.

சிங்கள மக்களே தேர்தலில் வாக்களிக்காமல் தோல்வியுற செய்த பொதுபல சேனாவுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் செயல் என்பதையும் உணர வேண்டும்.

இன்றைய இந்த அடிப்படைவாதிகளின் செயல்கள், அன்று பொதுபல சேனாவுக்கு எதிராக நேர்மையுடன் போராடிய எனது மனதை மிகவும் வருந்த செய்துள்ளது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.

இந்த விவகாரத்திற்கு சமூக மட்டத்திலேயே தீர்வு காணும் நோக்கம் எனக்கு இருக்கின்றது. இந்த காரணமாக இந்த விவகாரத்தை நான் ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனங்களுக்கு கொண்டு வந்துளேன்.

அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் பெளசி, முஜிபூர் ரஹ்மான் எம்பி, மாகாணசபை உறுப்பினர் ஆசாத் சாலி, தேசிய நல்லாட்சி இயக்க தலைவர் நாஜா முஹம்மத் ஆகியோருடனும் உரையாடி உள்ளேன்.

அடிப்படைவாதத்திற்கு இடம்தரப் போவதில்லை என அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார்கள்.

No comments

Powered by Blogger.