Header Ads



வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா..?

1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி வட மாகாண முஸ்லிம்கள் தமது பூர்வீக பூமியில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டனர். அந்நாள் அவர்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத கரி நாளாகும். இவ்வாறு  வெளியேற்றப்பட்ட எமது முஸ்லிம்கள் 2015 ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் கால் நூற்றாண்டுக்கு சொந்தக்காரர்களாகின்றனர். இருந்தும் அவர்கள் இன்னும் தமது வாழ்விடங்களுக்கு உரிய முறையில் சென்று வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே உள்ளமை வேதனைத் தருகின்றது. 

மாறி மாறி ஆட்சி செய்த அரசுகள் அம்முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த எடுத்துக் கொண்ட அக்கறை எந்த வகையிலும் போதுமானதாக இருக்கவில்லை. அவை சாண் ஏற முழம் சருக்கினாற் போலவே அமைந்தன. அம்மக்கள் மறக்கடிக்கப்பட்டவர்களாகவே தொடர்ந்தும் பார்க்கப்படுகின்றனர். 

தற்போது நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ளதாக கூறிக் கொள்ளும் இந்த அரசின் காலத்திலாவது அம்மக்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்புக் கூட அம்மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்து வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இது விடயத்தில் தொடர்ந்தும் பார்வையாளர்களாகவா இருக்கப் போகின்றனர். 

அம்முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் போது அங்கும் அவர்களுக்கு பல்வேறு தடைகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு  வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. இது விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனது தார்மீக பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் நிலவும் அதிகாரப் போட்டி அம்மக்களை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போல இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  

எனவே வட மாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தும் விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவதே அம்மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு நீங்கள் செய்யும் கைமாறாகும். 

எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி  
சமூக ஆர்வலர்.
புத்தளம்  

No comments

Powered by Blogger.