உலகின் முதல் மருத்துவ குணமுள்ள சாக்லேட்டை உருவாக்கிய அமெரிக்கா
உலகின் முதல் மருத்துவ குணமுள்ள சாக்லேட்டை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தது.
சாக்லேட்டில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான "கக்காவோ', உயிரணுக்களின் அழிவைத் தாமதப்படுத்தும் குணம் கொண்டது. மேலும் அதில் உள்ள பல தாதுப் பொருள்கள், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி "நல்ல கொலஸ்ட்ரால்' அளவை சீராக வைக்கும் தன்மை கொண்டது.
பெரும்பாலான சாக்லேட்டுகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரை 70 சதவீத அளவு உள்ளது. இதனால் "கக்காவோ'வின் மருத்துவ குணங்களின் முழுப் பயனும் கிடைக்காமல் போய்விடுகிறது.
ஆனால் கொழுப்பையும் சர்க்கரையையும் குறைத்தால் சாக்லேட்டில் உள்ள கோக்கோவின் கடுமையான கசப்புத் தன்மை வெளிப்பட்டுவிடும். அத்துடன் சாக்லேட் என்றாலே இனிப்பு என்பது பொய்த்துவிடும். இந்த நிலையில், சாக்லெட்டில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவைக் குறைத்து, "கக்காவோ'வின் முழு மருத்துவப் பயனையும் கிடைக்கச் செய்யும் முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. கோக்கோ செடியின் தண்டின் பகுதி மிகச் சிறிய அளவில் சேர்க்கப்படுவதன் மூலம் "கக்காவோ'வின் கசப்புத் தன்மையைக் குறைக்க முடியும் என்று அந்த நிறுவனம் கண்டுபிடித்தது. இதன் மூலம் சாக்லேட்டில் சேர்க்க வேண்டியுள்ள சர்க்கரை, கொழுப்பின் அளவைப் பாதியாகக் குறைக்க முடியும். இதையடுத்து, இனிப்புச் சுவை சற்றும் குறையாமல், "கக்காவோ'வின் மருத்துவ குணங்கள் முழுமையாக சாக்லேட் தின்பவருக்கு கிடைக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், முதல் கட்டமாக உருவாக்கப்பட்டுள்ள மாதிரி சாக்லேட்டுகளில் கொழுப்பும் சர்க்கரையும் பாதி அளவாகக் குறைந்துள்ளது. அவற்றை மேலும் குறைத்து, இனிமை குறையாத, மருத்துவ குணமுள்ள சாக்லேட்டுகளை உருவாக்க அந்த நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்தத் தகவலை "மெட்ரோ' மருத்துவ ஆய்வேடு தெரிவித்துள்ளது.

Post a Comment