"ரணிலின் ஜப்பான் பயணம் வெற்றி" - ஜப்பானிருந்து என்.எம்.அமீன்
ஜப்பான் நாட்டிற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்ட 5 நாள் பயணம் இலங்கைக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது.
வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த ரணிலின் இந்தப் பயணமானது இலங்கைக்கு பொருளாதார உதவிகள் கிட்டவும் இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுவடையவும் வழிவகுத்துள்ளது. அத்துடன் அபிவிருத்திக்கு உதவவும், கடல்சார் கண்காணிப்பு ஆற்றலை வலுப்படுத்தவும், ஜப்பான் உதவ முன்வந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேக்கு இடையில் நடந்த இரண்டாவது சந்திப்பின் போது இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டில், அதிகாரிகள் மட்டத்திலான, பொருளாதார கொள்கை கலந்துரையாடல் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதாகவும், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஊடகங்களுக்கு கூறினார்.
வரலாற்றில் இலங்கை அரச தலைவர் ஒருவர் அல்லது பிரதமர் ஒருவர் ஜப்பானுக்கு மேற்கொண்ட மிக வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயமாக இது கருதப்படுகிறது.
இதேவேளை பிரதமர் ரணில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றியியுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடகங்கள் கூறியிருந்த போதிலும்கூட ஜப்பானில் வைத்து இவ்வாறான முரண்பாட்டை இருவரிடத்திலும் அவதானிக்க முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment