25 வருட அவல (அகதி) வாழ்வின் சாட்சியம்..!
-பி.எம். முஜீபுர் ரஹ்மான்-
இனப்பிரச்சினை வரலாற்றில் எந்தப் பக்கமும் சாராது, பிரச்சினையற்று வாழ்ந்தவர்களுக்கு அகதி என்ற வார்த்தை பொறிக்கப்பட்டு இம்மாதத்துடன் 25 வருடங்களாகின்றன. அது தந்த, தருகின்ற இரத்தத்தோடு கலந்த வாழ்க்கையும் அது தந்த, தருகின்ற வலிகளையும் யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?
புலிகளின் ஆதிக்க வெறியினால், 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதிவாரத்தில் உள்நாட்டிலேயே அகதி வாழ்வுக்குள் தள்ளப்பட்ட கொடுமை இன்னும் எம்மைத் தொடருகிறது.
அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் நான் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருக்கிறேன். இது குறித்த சில விடயங்களை படிப்படியாக எழுத முயற்சிக்கிறேன்.
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என சி.புஸ்பராஜா அவர்கள் எழுதியதன் மறுவடிவமாக, ஈழப் போராட்டத்தில் வடமாகாண முஸ்லிம்களின் மறு சாட்சியம் என தொடர்ந்து எழுதலாம் எனத் தோன்றுகிறது.
எனெனில், புலிகள் இயக்கம் தமது கொள்கைகளை வகுக்கும்போதும் சரி, அதை நடைமுறைப்படுத்தும்போதும் சரி எந்த மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களின் ஒரு பகுதியினரைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆயுதங்களை முன்னிலைப்படுத்தியும் தலைமையை வழிபட்டும் வாழும் மக்களை வளர்க்கும் போக்கு தலைதூக்கியதும் போராளிகள் கதாநாயகர்கள் ஆனார்கள். ஆயுதத்தை வெறுத்த முஸ்லிம்கள் ஈழப் போராட்டத்தின் தீண்டத்தகாதவர்களாக்கப்பட்டார்கள்.
ஈழத் தோசத்தில் வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களையும் ஏனைய மக்களையும் எதிரியைவிட மோசமாக அடக்கி ஒடுக்க கொன்றுவீச அவர்கள் தயங்கவில்லை. புலிகள் இயக்கத்தைக் கண்டு மக்கள் பயம்கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
தாங்கள் இழைக்கும் தவறுகள் எதுவாகினும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே வளர்த்தார்கள். இதனால், முஸ்லிம்கள் உட்பட புத்திஜீவிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் ஈழத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள், அல்லது கொன்று குவிக்கப்பட்டார்கள்.
முடிவு பாசிசத்தை நோக்கி புலிகள் இயக்கம் செல்ல, உண்மையானவர்கள், கல்வியலாளர்கள், ஏனைய சமூகத்தவர்களின் தாய் மண்மீதிருந்த உறவு அறுக்கப்பட்து. அம்மண்ணிலிருந்து அவர்கள் பிடுங்கி எறியப்பட்டார்கள். மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டார்கள். இறுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி போராட்டம் முற்றுப் புள்ளி இல்லாமல் முடிவுற்றது.
25, 30 வருடங்களாக தவியாய் தவித்த மக்களின் வாழ்வு ஆழ்கடலில் கரையைத் தேடும் ஓடமாய் இன்னும் தொடர்கிறது. இவைகளுக்கு யார் பொறுப்பு. 25 வருடங்களாக கல்வியை இழந்த, அபிவிருத்தியை இழந்த, மொத்த வாழ்வை இழந்த ஒரு இளைஞனின் அல்லது ஒரு யுவதியின் நிலையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
25 வருட வாழ்வு என்பது கொஞ்சக் காலமா? 1990 ஆம் ஆண்டு பிறந்த ஒருவன் அகதி முகாமில் சீரிய சிந்தனை இன்றி, வாழ்வின் தெளிவின்றி 25 வருடங்களாக கையேந்தி வாழ்வது என்பது எவ்வளவு கொடுமை. இவர்கள் இழந்த வாழ்வை யார் மீட்டுக் கொடுப்பது. 25 வருட பழக்கத்தை யார் திருத்துவது? எப்படித் திருத்துவது?
நான் அரசியல் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எங்கள் வாழ்வு எப்படி போர் என்ற சகதியில் சிக்கி சின்னாபின்னப்பட்டது என்ற சமூகவியல் நோக்கிலேயே பேசப் போகிறேன். நான் கண்ட, நான் அனுபவித்த என் அனுபவங்களைத்தான் சொல்லப் போகிறேன். இவை என் மனக்குமுறல்கள் மட்டுமே. நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. இவை குறித்த விடயங்களையே இங்கு குறிப்பிடலாம் என நினைத்துள்ளேன்.

Post a Comment