வலியால் துடித்த தாய்க்கு, பிரசவம் பார்த்த சிறுவன்
பிரசவ வலியால் கதறித்துடித்த தாயின் அருகில் இருந்து, அவருக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து தனது தம்பி இந்த பூமியில் பிறப்பதற்கு உதவியாக இருந்த 11 வயது சிறுவனை அமெரிக்க ஊடகங்கள் வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றன.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியேட்டா பகுதியை சேர்ந்தவர் கென்யார்டா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டபோது, துணைக்கு யாரும் இல்லையே என்ற வேதனையால் துடிதுடித்துப் போனார்.
பிரசவ வலியால் தாய் கதறிக்கொண்டிருப்பது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஜேம்ஸ் டியூக்ஸ் என்ற பதினொரு வயது சிறுவனின் காதில் ஒலித்ததும், உடனடியாக ஓடிச்சென்ற அவன், கென்யார்ட்டாவின் சுகப்பிரசவத்துக்கு உதவியதோடு மட்டுமின்றி, அவசர சிகிச்சை மையத்துக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் அங்கு வந்துவிடுவோம். அதுவரை பிறந்த பாப்பாவை பத்திரமாக கதகதப்பாக பாதுகாத்து வைத்திரு என்று டாக்டர்கள் கூறிய அறிவுரையை ஏற்று, வீட்டில் கிடந்த டவல்களை எடுத்து அதில் தனது தம்பியை கிடத்தி, மூடி கதகதப்பூட்டி வைத்திருந்தான்.
பின்னர், விரைந்துவந்த அவசர உதவி மருத்துவர்கள், தாயையும், பிறந்த குழந்தையையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் என்ற குறளின் இரண்டாம் சொல்லை சற்றே மாற்றி தாய்க்கு ஜேம்ஸ் டியூக்ஸ் ஆற்றிய உதவியை அறிந்த அமெரிக்க ஊடகங்கள் அவனை வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றன.
என் மகன் தைரியமானவன், வலியாலும், வேதனையாலும் நான் துடித்தபோது அவன் சற்றும் மனம்தளராமல் அந்த சூழ்நிலையை மிக சரியாக கையாண்டான். அவனை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் என கென்யார்டா கூறுகிறார்.
அவருக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டாக்டர் எரிக் பிரவுன், ‘நான் இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தை கேள்விப்பட்டதில்லை. அந்த வகையில் ஜேம்ஸ் சிறப்பானவன் என்றே கருதுகிறேன். குழந்தை நன்றாக இருக்கிறது. குட்டி டாக்டர் தனது தம்பியை மிகவும் அக்கறையாக பார்த்து கொள்கிறார்’ என கூறுகிறார்.
எதிர்காலத்தில் பெரிய கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்ற தனது எதிர்கால திட்டத்தை தற்போது மாற்றிக்கொண்டுள்ளதாக கூறும் ஜேம்ஸ் டியூக்ஸ், நன்றாக படித்து, பெரிய டாக்டராக வர விரும்புவதாக தெரிவித்துள்ளான்.

Post a Comment