Header Ads



450 இலட்சம் பெறுமதியான BMW கார் குறித்து ஹரீனும், சாமரவும் மோதல்


அமைச்சர் ஹரீன் பெனாண்டோ, தான் ஊவா மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வேளையில் ரூபா 450 இலட்சம் பெறுமதியான BMW வகை கார் ஒன்றை கொள்வனவு செய்து பயன்படுத்தினார் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டை, தற்போது ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சாமர சம்பத்தினால் முன்வைக்கப்பட்டிருந்ததோடு, இவ்விடயம் குறித்து ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து மறுப்புத் தெரிவித்து, ஐ.தே.க எம்.பியும், தொலைத் தொடர்பு மற்றும் டிஜிற்றல் அடிப்படை வசதிகள் அமைச்சருமான ஹரீன் பெனாண்டோ ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,

'ஐ.ம.சு.மு காலப்பகுதியில் ஊவா மாகாண சபை இருந்த போது, குறித்த மாகாண சபைக்கு கார் ஒன்றை வாங்க தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய மாகாண சபை விளையாட்டு அமைச்சருமான சாமர தஸநாயக்க, அமைச்சரவையில் கையுயர்த்தி அனுமதியைப் பெற்றுக் கொண்டார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், '05 மாதங்கள் மாத்திரம் முதலமைச்சராக இருந்த ஹரீன் பெனாண்டோவிற்கு இவ்வாறான வாகனமொன்றைப் பெறுவதற்கு எவ்வித தேவையுமில்லை. முன்னர் பெற்ற அனுமதியின் அடிப்படையிலேயே இவ்வாகனம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

'குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று இவ்வாகனத்திற்கு ரூபா 450 இலட்சம் செலவிடப்படவில்லை என்பதோடு, வரிச்சலுகை அற்ற வகையில் ரூபா 94 இலட்சத்திற்கே குறித்த வாகனம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. தற்போதைய சந்தையில் குறித்த வாகனத்திற்கு மூன்று மடங்கு விலை காணப்படுகின்றது. எனவே இவ்வாகனம் மாகாண சபைக்கு பாரிய சொத்தாகும். ஆனால் வாகனம் பற்றி தெரியாதோர், கிராமத்தில் பாக்கு விற்பவரைப் போன்று சிந்திப்பர். குறித்த வாகனத்தை கொள்வனவு செய்ததன் மூலம் மாகாண சபையின் சொத்து பட்டியலில் புதிய சொத்து ஒன்று இணைக்கப்பட்டுள்ளது பற்றி புதிய முதலமைச்சர் அறிந்திருக்காமையானது கவலைக்குரிய விடயமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'இவ்வாகனத்தை ஹரீன் பெனாண்டோ ஏப்ரல் மாதத்தின் இறுதிப் பகுதியிலிருந்தே பயன்படுத்தினார் என்பதோடு, தேர்தல் காலத்தின் போது, தேர்தல் ஆணையாளரால் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தியே பயன்படுத்தினார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் 'பதுளை, மொணராகலை ஆகியவற்றின் அபிவிருத்திக்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை தனிநபர் ஒருவர் பயன்படுத்தியமை முறையற்றது என இன்று தெரிவிக்கும் அவர், அன்று அமைச்சரவையில் அமைச்சு பதவியில் இருக்கும் போது, குறித்த காரை கொள்வனவு செய்வது குறித்து கைகளை உயர்த்தி அனுமதி வழங்கியதை மறந்தமை, அறிவு குறைந்த நிலைமை எனக் கூறலாம். இன்று, பதுளை, மொணராகலை மாவட்ட மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கும் தற்போதைய முதலமைச்சர் அன்று, இது குறித்தான அனுமதிக்கு சம்மதம் தெரிவிக்கையில் பதுளை, மொணராகலை மாவட்ட மக்களின் அபிவிருத்தியை மறந்தது நகைப்புக்குரியது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 'குறித்த வாகனம், தேர்தலின் பின்னர் மீண்டும ஒப்படைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுப்பதோடு, அவ்வாகனம் தற்போது ஊவா மகாண சபையில் கையளிக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்து முதலமைச்சர் அறிந்திராமையானது கவலைக்குரிய விடயமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உண்மை எதுவென உணராமல், ஒருவர் குறித்து குற்றச்சாட்டை முன்வைக்கும் முன், தான் அது பற்றி இரு முறை சிந்திக்க வேண்டும். வாசகர்களை மகிழ்சிச்ப்படுத்தும் நோக்கில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.