ஒழுங்குபடுத்த வேண்டிய முஸ்லிம் அரசியல் நகர்வும், முஸ்லிம் MP களுக்கான மன்றமும்..!
-அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)-
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு அம்சங்களை எமக்கு உணர்த்தினாலும் அவற்றுக்கு மத்தியில் பின்வரும் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுக்காட்ட முடியும்
ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய முஸ்லிம்களின் அரசியல் நகர்வு
தேர்தலின் மூலம் நாம் பெற்ற மற்றுமொரு படிப்பினை முஸ்லிம்கள் பிளவுபட்டிருப்பதனால் முஸ்லிம்களிடையே சண்டை சச்சரவுகள் மென்மேலும் அதிகரிக்கும் என்பதாகும். தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டனர். ஓர் அரசியல்வாதியின் ஊழல்களை மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதி பகிரங்கமாகவே மீடியாக்களில் வெளிப்படுத்தினார். அது பொதுபலக்காரர்களுக்கே தூண்டுதலாகவும் தைரியமாகவும் அமைந்தது. ஊழலில் சம்பந்தப்படுவது தவறுதான். அதேபோல் எமது தவறை எமது தனிப்பட்ட நலன்களுக்காக எமது பொது எதிரிக்குக் கூட தெரியப்படுத்துவதும் தவறுதான். எம்மை எள்ளி நகையாடுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த எதிரிக்கு ‘வாய்க்கு அவல்” கிடைத்த கதையாகிவிட்டது.
தேர்தலுக்கு முன்னால் எம்மில் பலரும் வாக்களிப்பது என்பது அமானத், ஷஹாதத், ஷபாஅத் என்ற வகையில் சாரும் என்று பேசி வாக்காளர்களை அறிவூட்டி வந்தோம். அதுபோல் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் பல தகைமைகள் இருக்க வேண்டும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இறையச்சம் சமூக உணர்ச்சி, அறிவு திறமை, ஆற்றல், பரந்த மனப்பான்மை தைரியம் போன்ற பண்புகளைப் பெற்றவர்களை மட்டுமே நாம் தெரிவு செய்ய வேண்டும். இல்லாதபோது அது ‘கவ்லுஸ் சூர்” என இஸ்லாத்தில் கூறப்பட்ட பொய்ச் சாட்சியம் கூறும் குற்றமாகக் கருதப்படும் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்படியாயின் தற்போது பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்றத்துக்கான முஸ்லிம் பிரதிநிதிகளிடம் இப்பண்புகள் எந்தளவுக்கு இருக்கின்றன. முழுமையாக இல்லாவிட்டாலும் உயர்ந்த பட்சம் இருக்கின்றனவா? இவை சிந்தனைக்குரிய அம்சங்கள்.
பாராளுமன்றம் செல்லும் இவர்களை தனி மனிதர்களாகப் பார்க்க முடியாது. அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள்; பிரதிநிதிகள். சமூகத்தில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதிலும் அவர்களது பங்கு மகத்தானது. அவர்களது ஒவ்வொரு அசைவுக்கும் வார்த்தைக்கும் பெறுமதியுண்டு. நிலைப்பாடுகளை எடுக்க முன்னர் கருத்துக்களை வெளியிட முன்னர் அவர்கள் வெகு தூரம் சிந்தித்துக் கொள்ள வேண்டும்.
எனது ஒவ்வொரு வார்த்தையும் நாட்டின் நலனைப் பாதுகாக்குமா? அல்லது பாதிக்குமா? நான் பிரநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுமா? அல்லது இன்னும் அதனைக் குட்டிச் சுவராக்கிவிடுமா என அவர்கள் சிந்திக்க வேண்டும். சமூகமும் அவர்களைத் தனிமைப்படுத்திவிடாமல் அவர்களை நெறிப்படுத்தவும் தேவைப்படும்போது அவர்களைப் பாதுகாக்கவும் முயற்சிகளையெடுக்க வேண்டும். குறிப்பாக சமூகத்திலுள்ள உலமாக்கள் புத்திஜீவிகள் இதற்காக முன்வர வேண்டும்.
பாராளுமன்றத்தில் உள்ள ஒரு பிரதிநிதியின் உரை பயனுள்ளதாகவும் தாக்கம்மிக்கதாவும் அமைவதற்கு அதில் நம்பகரமான தகவல்கள் புள்ளி விபரங்கள் உள்ளடங்கியிருப்பது அவசியமாகும். அப்படியாயின் அத்தகைய தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஒரு தகவல் களஞ்சியம் இயங்க வேண்டும். அதி நவீன தொழில்நுட்பங்கள் ஆய்வு முறைகள் தகுதியான ஆய்வாளர்கள் அதில் உள்வாங்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தேவை.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மன்றம்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது மன்றம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் கட்சி பேதமின்றி சகல பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான கிரமமான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் பயிற்சித் திட்டங்கள், ஆத்மீக ரீதியான வழிகாட்டல்கள் இடம்பெற வேண்டும். இந்த மன்றத்தை தேசிய சூரா சபை போன்ற ஒரு பொதுவான அமைப்பு ஒழுங்கு செய்யலாமே என ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். அது சிறந்த ஓர் அபிப்பிராயமாக இருந்தாலும் அதனை எந்த அளவு சாத்தியப்படுத்தலாம் என்பது பற்றி சிந்திப்பது அவசியமாகும். ஆனால் அது மிகவும் அவசியமான காலத்தின் தேவை என்பதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
முஸ்லிம் சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய பிரதானமாக ஏழு துறைகள் உள்னள.
1) ஆத்மீகமும் பண்பாடும் 2) அரசியல் 3) கல்வி 4) வெகுஜன தொடர்பு சாதனத் துறை 5) சுகாதாரம் 6) குடும்ப உறவுகள் 7) பிற சமூகங்களுடனான சமாதான சக வாழ்வு.
இவற்றில் ஒரு துறையாக மட்டுமே அரசியல் இருந்தாலும் ஏனைய ஆறு துறைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அது இருப்பது கண்கூடு. எனவே அரசியல் துறையையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் பற்றிய சரியான நிலைப்பாடுகளை நாம் எடுப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலுக்குப் பிந்திய சூழலை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக.
Reactive ஆக அதாவது பிரச்சினைகள் தோன்றியதற்குப் பின்னர் தீர்வுகளைத் தேடுவது பற்றி சிந்திப்பதனை விட Proactive எனப்படும் பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் அதிக முயற்சிகளை எடுப்போமாக.
வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!

எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பொருத்தவரை மாற்றுமத சகோதரர்களுடன் நல்ல உறவை பேணி வருகின்றார்கள் .எனவே இவ்வாறான மன்றம் ஆரம்பிக்கப்பட்டால் அதன் மூலம் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தி வைப்பதனால் நல்ல பல மாற்றங்களை நாம் காண முடியும் .
ReplyDeleteஇது தான் மாற்றத்திகான இலகுவான வழிமுறையாகும் .