Header Ads



என்ன செய்யப் போகிறோம்...?

-எஸ். ஹமீத்-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும்.

இலங்கைப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து விட்டது. கல்குடாத் தொகுதியில் ஒரு முஸ்லிம் மகனின் உயிர் காவு கொள்ளப்பட்டமையானது நம் எல்லோரதும் மனங்களில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. 'அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அந்த அல்லாஹ்வே மரணிக்கச் செய்கிறான்.' என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் நாம் என்பதினால், அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நமது அடுத்த கடமைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டோம். இதற்கும் மேலதிகமாக சட்டம் அதன் கடமைகளைச் சரிவரச் செய்யும் என்றும் நம்புவோம்.

அந்த உயிரழப்பையும் ஆங்காங்கே நடைபெற்ற சில சண்டைகளின் போது காயத்திற்குள்ளானவர்களையும் தவிர , நமது முஸ்லிம் சமூகத்திற்குப் பாரிய உயிரிழப்புகளோ, உடமைச் சேதங்களோ இத்தேர்தற் காலத்தில்  ஏற்படவில்லை என்பது சற்றே ஆறுதலான செய்தி. அல்ஹம்து லில்லாஹ்!

நமது தெரிவாக அமைந்த கட்சிகளையும் வேட்பாளர்களையும் வெல்ல வைப்பதற்காகத் தேர்தற் களத்தில் வரிந்துகட்டிக் கொண்டு நம்மிற் பலர் செயற்பட்டோம். வீட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து சமூக ஊடகங்களினூடாக மேலும் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டோம்; நம்  சொந்தங்களையெல்லாம் வாக்களிக்கும்படித் தூண்டினோம். இன்னும் நம்மிற் பலர் தமது விருப்பத்திற்குரிய கட்சியும் வேட்பாளரும் வெல்ல வேண்டுமென்று மானசீகமாகப் பிரார்த்தனை செய்ததோடு, தவறாது குறிப்பிட்ட தேதியில் போய் வாக்களித்து விட்டுத் திரும்பினோம்.
தேர்தல் முடிவும் வந்தது. முஸ்லிம் சமூகம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேண்டாமென்று தீர்மானித்த மகிந்தவின் கட்சி தோற்றும் ரணில் பிரதமராகும் வகையில் அவரது கட்சி வென்றும் விட்டது. எனினும் நமது சமூகத்திற்குள்ளேயே நாம் பிரிந்து நின்று ஆதரவு வழங்கியோரிற் பலர் வென்றும் பலர் தோற்றும் போயிருக்கிறார்கள்.

யாருக்கு வெற்றியைக் கொடுக்க வேண்டும், யாருக்குத் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் தீர்மானத்தில் உள்ள விடயம். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்  எல்லாம் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் , தோற்றுப் போனவர்கள் எல்லாம் அல்லாஹ்வின்  சாபத்திற்கு ஆளானவர்கள் என்பதெல்லாம் கிடையாது. எதற்கு வெற்றியைக் கொடுத்தான், ஏன் தோல்வியைக் கொடுத்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இதில், நாமே காரணங்களைக் கற்பனை பண்ணிச் சொல்வது நம்மை 'ஷிர்க்' என்னும் இணை வைத்தலுக்கு இட்டுச் சென்று விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக;

சரி, தேர்தலும் முடிந்து பிரதமரும் பதவியேற்று அமைச்சரவையும் நியமிக்கப்படுகிறது. இனி முஸ்லிம் சமூகமாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்ட நமது முஸ்லிம்  சகோதரர்களும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நம்மவர்களும் நமது சமூகம் சார்ந்த அனைத்தையும் கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டுவிட்டு முஸ்லிம் சமூகம் அடுத்த தேர்தல் வரை அரசியற் களத்தில்  உறங்கப் போகிறதா...? பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து கடந்த தேர்தலை எதிர் கொண்ட நாம் அவ்வாறேதான் அடுத்த தேர்தலையும் சந்திக்கப் போகின்றோமா...? இடைப்பட்ட காலத்திற்குள் நமக்குள்ள கட்சி சார் பிளவுகளுக்குத் தீர்வெதனையும் காணாது, அதனால் பல கூறுகளாகப் பிரிந்து நமக்குரிய சக்தியைத் தாரை வார்க்கப் போகிறோமா...? ஏற்கனவே பல்வேறு ஜமாஅத்களாகப் பிளவுண்டு கிடக்கும் நாம் அரசியற் கட்சிகள் என்ற ரீதியிலும் பிளவுபட்டு எமது பலத்தை இழந்துவிடப் போகிறோமா...?

அதிகார மோகம், அமோக வருமானம், பதவி வெறி, படாடோப வாழ்க்கை என்பன அரசியலுக்குள் பலர் பிரவேசிப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் என்றாலும், தான் சார்ந்த சமூகத்திற்குத் தன்னாலியன்ற சேவைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிய்யத்தும் பலருக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.  மறுமையில் அல்லாஹ்வுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டுமென்பதில் அச்சமில்லாதவர்கள் பலர் இருக்கும் அரசியலில், அல்லாஹ்வுக்குப் பயந்த சிலராவது இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இவர்களைப் பிரித்தறிவதுதான் கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது.

அரசியலுக்குள் பிரவேசித்து விட்டவர்களைத் தவிர,வெளியே சமூகத்திற்காகக் குரல் கொடுக்கும் ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள்  நிறைந்திருக்கிறார்கள். எண்ணங்களிலும் செயல்களிலும் அல்லாஹ்வைப் பயந்தவர்களாக சமூகத்துக்கு உதவி செய்து வாழும் ஏராளம் செல்வந்தர்கள் இருக்கிறார்கள். நேர்மையும் துணிவும் மிக்க படித்த பட்டதாரிகள் இருக்கிறார்கள். மார்க்கத்தை அணுவளவும் பிசகாது பின்பற்றி வாழும் உலமாக்கள் இருக்கிறார்கள். சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட, போராட்ட குணம் வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். தியாகமும் துணிச்சலும் நிறைந்த அரச உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். பண்பாடும் கண்ணியமும் பேணி வாழும் தாய்மார்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் ஒன்று திரட்டி, ஓரணியில், ஒரே குடையின் கீழ்க் கொண்டு வந்து நமக்கான அரசியலை நாம் முன் கொண்டு செல்ல முடியாதா? சமூக அபிவிருத்தியையும் சமூகத்துக்கான உரிமைகளையும் வென்றெடுக்கும் போராட்டத்தில் நாம் எல்லோரும் ஒன்றுபட  முடியாதா? சிறுபான்மையிலும் சிறுபான்மை என்றாலும் கூட, ஒற்றுமைப்பட்ட சிங்கங்கள் என்று நம்மை இந்த உலகின் முன்  பிரகடனப்படுத்த முடியாதா...? 'அல்லாஹ்வின் முன்னே அல்லாது எம் தலைகள், என்னாளும் பணியாது இன்னொருவர் முன்னாலே' என்று அறை கூவி முழங்குகின்ற சமூகமாக நம்மால் ஆக முடியாதா?

முடியும். விடா முயற்சியும் இலக்கை அடையும் விவேகம் நிறைந்த வியூகங்களும் வல்ல அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நமது செயற்பாடுகளுமிருந்தால் நிச்சயம் முடியும்.  அர்ப்பணிப்பும் விட்டுக்கொடுப்பும் அல்லாஹ்வின் மீது பயமும் நம்மிடம் இருக்குமாயின் நமது ஒன்று பட்ட அரசியற் பயணம் சத்தியமாகச் சாத்தியமாகும்.

'நாம் தனித்தவர்களல்ல; அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்.' என்ற நம்பிக்கைதான் பத்ர் உட்படப் பல யுத்தங்களை நமக்கு வென்று தந்தது. இந்த நாட்டின் சனத்தொகையில் மிகக் குறைந்தவர்களான நாமும் அரசியல் ரீதியான ஒரு 'பத்ர்' யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எனவே, அனைத்து முஸ்லிம்களையும் ஒரே கொடியின் கீழ் இணைத்துச் செல்லும்  அரசியற் பயணத்திற்கான  முன்னைய  பல பாத அடிகளில் இக்கட்டுரையும் ஓர் அடியாக இருக்கட்டும். இன்ஷா அல்லாஹ்...இலங்கை முஸ்லிம்  உம்மத் அனைவரும் ஒற்றுமைப்பட்டு,  நமக்கே நமக்கேயான நமது சொந்தக் கட்சியில், ஒரே அணியில், ஒரே சின்னத்தில் அடுத்த தேர்தலைச் சந்திப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக; ஆமீன்!         

2 comments:

  1. We agreed in your statement...
    However, Can youask rishad or hisbullah or athavullah to through away their parties what they cracked & devided the muslim community for chilly reasons..?

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் அடுத்த தேர்தலில் நம்மினத்தின் அனைத்துக்கட்சிகளும் ஒரே கட்சியில் வாக்கு கேட்டு வர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகஆமீன் .கட்டுரையாளருக்கு நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.