இனவாதத்தை ஓரங்கட்டுவது, மைத்திரியின் அடுத்தகட்ட காய் நகர்த்தல்களிலே தங்கியிருக்கிறது..
-இப்னு ஷம்ஸ்-
யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்று முழு நாட்டினதும் எதிர்பார்ப்பிற்கு விடை கிடைத்துவிட்டது. ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியை தோற்கடித்து ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் ஆட்சி பீடமேற்றியிருக்கிறார்கள் 1994 முதல் 2015 வரையான (2002 முதல் 2 வருட ஐ.தே.க. ஆட்சி) சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஐ.தே.க. ஆட்சியை கைப்பற்றி நீண்ட பயணமொன்று தயாராகியிருக்கிறது.
ஐ.தே.க.வின் வெற்றியை பற்றி பேசப்படும் அதே அளவிற்கு இன்று ஐ.ம.சு.முவின் தோல்வி குறித்தும் பரவலாக பேசப்படுகிறது. யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டை முன்னேற்றிய தலைவரின் தலைமையில் ஐ.ம.சு.மு. போட்டியிட்ட போதும் அதற்கு 95 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 22 மாவட்டங்களில் 8 மாவட்டங்களை மட்டுமே ஐ.ம.சு.மு.வினால் வெல்ல முடிந்ததோடு பல ஐ.ம.சு.மு. கோட்டைகள் ஐ.தே.க. விற்கு தாரை வார்க்கப்பட்டதை தேர்தல் முடிவுகள் படம்பிடித்துக் காட்டுகிறது.
ஐ.ம.சு.முவுக்கு என்ன நடந்தது? இதற்கு பல்வேறு காரணங்கள் நியாயங்கள் தெரிவிக்கப்படுகிறது. இனவாதத்தை நம்பி ஐ.ம.சு.மு. தோற்றதாக ஒரு தரப்பினர் கூறினாலும் வேறு சிலரோ கட்சி தலைவரின் அண்மைக் கால செயற்பாடுகளை விமர்சிக்கின்றனர். எது எவ்வாறாக இருந்தாலும் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சுதந்திரக் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதம் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு தெளிவான பதிலை தருகிறது எனலாம்.
64 வருட வரலாற்றை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 35 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி புரிந்திருக்கிறது. அதிலும் 1994 முதல் இன்று வரையான காலப்பகுதியிலே அந்தக் கட்சி தொடர்ச்சியாக நீண்ட காலம் ஆட்சி பீடத்தில் நீடித்தது. சகல இன மத குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முற்போக்கான சுதந்திரக் கட்சி தனி சிங்கள பெளத்த கட்சியாக மாற்றம் பெற்றிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில் ஜனாதிபதி ஆதங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை கட்சிகள், மக்கள் மட்டுமன்றி சிவில் அமைப்புகள், தொழில்சார் வல்லுநர்கள், இளம் தலைமுறையினர் என பல்வேறு தரப்பினரும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார்கள். ஆனால் தனிச் சிங்கள மற்றும் இனவாத சக்திகளை மட்டும் நம்பியே மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் இறங்கியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தூண்டி விட்ட இனவாத தீயினால் தான் ஜனவரி 8ம் திகதி அவருக்கு தோல்வி ஏற்பட்டதாக ஜனாதிபதி கூட பின்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி தேர்த லில் கிடைத்த தோல்வியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பாடம் கற்றதாக தெரியவில்லை. பொதுத் தேர்தலிலும் ஐ.ம.சு.முவை வழிநடத்திய அவர், அதே பாணியிலே பிரதான துரும்புச் சீட் டாக இனவாதத்தையும் யுத்த வெற்றியையும் பயன்படுத்தி மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் தனக்குக் கிடைத்த 58 இலட்சம் வாக்குகள் இம்முறையும் ஐ.ம.சு.மு.வுக்கு கிடைத்தால் இலகுவாக ஆட்சியமைக்கலாம் என்ற அவரின் கனவில் மக்கள் மண் அள்ளிப்போட்டு விட்டார்கள்.
கடந்த 7 மாத காலத்தில் அதன் வாக்கு வங்கி 11 இலட்சம் வாக்குகளினால் சரிந்திருக்கிறது. தமிழ் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் மட்டுமன்றி சிங்கள பிரதேசங்களிலும் ஐ.ம.சு.முவுக்கு தோல்வியையே சந்திக்க நேரிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரங்கள் கூட சிங்கள மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை மையமாக வைத்தே இடம் பெற்றதை மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகள் ஓரங்கட்டப்பட்டன. கிடைக்காத வாக்குகளுக்காக ஏன் கஷ்டப்பட வேண்டுமென்று நினைத்திருக்கலாம். இல்லாவிட்டால் தமிழ் முஸ்லிம் வாக்குகளின்றி வெற்றி பெறலாம் என்று கருதியிருக்கலாம்.
எது எப்படியோ ஜனாதிபதி தேர்தலில் மட்டுமன்றி பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைப்பதற்கு சிறுபான்மை வாக்குகள் அவசியம் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டியுள்ளன. இனவாதத்தை பெரும்பான்மை சமூகம் நிராகரித்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சியில் இனவாதத்தை தூண்டி நஞ்சை பரப்பிய பொதுபலசேன எனும் நாகப்பாம்பின் விஷப்பல்லையும் கூட மக்கள் பிடுங்கியிருக்கிறார்கள்.
சுதந்திரக் கட்சியனதும் ஐ.ம.சு.மு. வினதும் தலைவராக இருந்தும் இம்முறை தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி நடவடிக்கைகளில் தலையீடு செய்யாமல் ஒதுங்கியே இருந்தார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வந்த போதும் அவரை பிரதமராக முன்னிறுத்தியே ஐ.ம.சு.மு. பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு எதிராக வாக்களித்த மக்கள் இம்முறையும் அவரை பிரதமராக வருவதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
ஐ.ம.சு.மு.வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதான கட்சியாக உள்ள நிலையில் அதன் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற சிக்கலுக்கான விடை தெரியத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதியின் அண்மைக் கால நகர்வுகள் அதனை உறுதிப்பட மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பானவர்களை ஓரங்கட்டி கட்சியில் களை பிடுங்கும் நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருக்கிறார். முதலில் சு.க. மற்றும் ஐ.ம.சு.மு. செயலாளர்கள் நீக்கப்பட்டதோடு சு.க. மத்திய குழுவில் இருந்து பலர் அகற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஐ.ம.சு.முவில் உள்ள சிறிய கட்சிகளின் பிடியிலிருந்து சுதந்திரக் கட்சியை மீட்பதற்காக ஐ.ம.சு.மு.வை கலைக்கவும் முன்னெடுப்புகள் ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறன.
ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கூட சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள். சுதந்திர கட்சி அமைப்பாளராக இருந்த துரையப்பா யாழ். மேயராக செயற்பட்டுள்ளதோடு அருளம்பலம், தியாகராஜா போன்றோர் பாராளுமன்றத்தை அலங்கரித்திருக்கிறார்கள். கிழக்கில் தம்பிராஜா, எம்.சி. அஹமட், எம்.ஏ.மஜீத், நஜீப் ஏ மஜீத் என பலரும் சுதந்திரக் கட்சியினூடாக பாராளுமன்றம் சென்ற வரலாறு இன்று மாறிவிட்டது. டீ.பி. ஜயா, பதியுதீன் மஹ்மூத் என பல முஸ்லிம் தலைவர்கள் சுதந்திரக் கட்சியை வளர்த் திருக்கிறார்கள்.
ஆனால் 2015 தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் எந்த ஒரு தமிழரோ முஸ்லிமோ பாரா ளுமன்றம் தெரிவாகாத கசப்பான உண்மையை ஏற்கத்தான் வேண்டும். வன்னியில் இருந்து மட் டும் ஒரு முஸ்லிம் தெரிவாகியிருக்கிறார். அதுமட்டுமன்றி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிரேஷ்ட சுதந்திரக் கட்சி தலைவர்கள் பலரும் இம்முறை தோல்வியடைந்து மஹிந்த ராஜபக்ஷ வுக்கு சார்பானவர்களே கூடுதலாக பாராளுமன்றம் தெரிவாகியிருக்கிறார்கள்.
கட்சி மூத்த தலைவர்கள் திட்டமிட்டு ஓரங் கட்டப்பட்டிருப்பது சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்ற ஆதங்கம் நடுநிலையான கட்சி ஆதரவாளர்களிடையே இருக்கவே செய்கிறது.
சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சி பீடமேற வேண்டுமானால் மீண்டும் தமது கொள்கைகளை முறையாக கடைப்பிடித்து இனவாதத்தை ஓரங்கட்டி சகல இனத்தினரையும் இணைத்து முற்போக்கு சிந்தனையுடன் செயற்பட்டாலே சாத்தியமாகும். அது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த கட்ட காய் நகர்த்தல்களிலேயே தங்கியிருக்கிறது.

Better not expect too much from My3.
ReplyDeleteYesss true. ....
ReplyDeleteMashaallah Nice article.
ReplyDeleteThis is a good opportunity for Maithri and Ranil to settle the Tamil and Muslim issues. A referendum for merging North and East should be carried out. Both are Tamils speaking areas. Curtail the power of the army in both provinces. Appoint only experienced CAS officers as secretaries to the Ministries.. No political appointments as done by Mahinda
ReplyDelete