Header Ads



ஜே.ஆர்.வகுத்த அரசியல் தந்திரத்தை, விஞ்சிய மைத்திரியின் அரசியல் தந்திரம்

-சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்- 

உலகில் எங்குமில்லாத ஆட்சி இலங்கையில் மீண்டும் அமையப்போகின்றது.  ஆளும் கட்சியில் அமைச்சு பொறுப்புக்களை பெற்று தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஒரு தரப்பினர் பிரதமருக்கு ஆதரவளிக்க மற்றொரு தரப்பினர் எதிர்க்கட்சியில் அமரப்போகின்றனராம்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக இயங்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி அனுமதித்துள்ளார், இதனால் எதிர்தரப்பில் அமரப்போகும் குழுவினர் தமக்கு எதிர்க்கட்சி தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து உள்ளனர். அதற்கு ஜனாதிபதியும் உடன்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சுதந்திரக்கட்சி ஆளும் தரப்பிலா எதிர்தரப்பிலா என்ற கேள்விக்கு விடை கிடைக்காத ஒரு நிலையை தோற்றுவித்துள்ளது..

கடந்த வாரம் பிரதமர் ரணில் பதவி ஏற்ற நிகழ்விற்குப்பின்னர் UNP-SLFP உடன்படிக்கை ஓன்று கைச்சாத்திடப்பட்டது. அதன்படி இரண்டு கட்சியில் இருப்பவர்களும் ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு தாவுதலை தடுப்பதற்கும் உடன்பட்டனர். ஆனால் ஒரே கட்சியின் உறுப்பினர்கள் தலைமையின் விருப்புக்கு மாற்றமாக இரண்டு பக்கம் பாராளுமன்றத்தில் பிரிந்து நிற்பது 'மறைமுகமான கட்சி தாவல் என்று தான் 'பலதரப்பட்ட அரசியல் விமர்சகர்களினதும் கருத்து. ஆகவே உடன்படிக்கை முளையிலேயே மீறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கட்சிக்குள்ளே பிளவு ஏற்பட்டு உள்ளது என்பதை தெளிவாக காட்டுகின்றது.

எதிர்க்கட்சிதலைமை தமக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியும் கோரிக்கை விடுத்து இருந்த வேளையிலேயே ஜனாதிபதியின் இத்தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவாக்கப்பட்டு உள்ளது.

1977 பொதுத் தேர்தலில் சுதந்திரக்கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியின் காரணமாக அன்று எதிர்க் கட்சித்தலைமை பொறுப்பு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு சென்றது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்ததன பிரதான காரணம் UNP இன் ஆட்சி இந்நாட்டில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுவும் எதிர்க்கட்சித் பொறுப்பு சிறுபான்மைக் கட்சிகளுக்கு செல்லுவதைத் தடுப்பதற்குமாகாகவே என்று அன்று கூறப்பட்டது. அது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிவதற்கு ஜே.ஆர் இன்று உயிருடனில்லை.

ஆனால் UNP இன் ஆட்சியை தொடர்ந்தும் வைத்து இருக்க வேண்டும் என்ற வியூகம் 1994 தேர்தலில் தோல்வியடைந்தாலும் எதிர்க்கட்சி தலைமைப் பொறுப்பு இன்று வரை பெரும்பான்மை இனத்திடமே இருந்து வந்து உள்ளது. 

பிரதமர் ரணிலின் தேசிய அரசாங்கத் திட்டத்துக்கு ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியும் ஆதரவு அளிப்பதால் எதிர்க்கட்சியில் கூடுதலான ஆசனங்களை கொண்டுள்ள தமிழரசுக் கட்சிக்கே எதிர்க் கட்சித் தலைமை பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ள இவ் வேளையிலேயே சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக செயற்படலாம் என்று கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரி கூறியிருப்பது அன்று எதிர்க்கட்சிதலைமைப் பொறுப்பு சிறு பான்மைகட்சிகளிடம் செல்லக் கூடாது என்று ஜே.ஆர்.வகுத்த அரசியல் தந்திரத்தையும் விஞ்சிய மைத்திரி ஜனாதிபதியின் அரசியல் தந்திரமா என்றும் நமக்கு எண்ணத் தோன்றுகிறது..?

2 comments:

  1. இது 1978ல் ஜே ஆர் ஜெயவர்த்தனவால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட சதி

    ReplyDelete

Powered by Blogger.