Header Ads



மைத்திரியுடன் நல்ல உறவைப் பேணி வந்தேன், ஒற்றுமையாக இருப்பதையே விரும்புகிறேன் - மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தான் நல்ல உறவை பேணி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவதனால், அவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது.

அந்த வகையில், 2005ஆம் ஆண்டு நான் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன் என்பதற்காக நான் , அவரை ஒருபோதும் எதிரியாகப் பார்த்தது கிடையாது.

அதேபோல தான் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி நல்ல உறவைப் பேணி வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியும், தானும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக பல தசாப்தங்களாக இருப்பதாகவும். இனிவரும் காலங்களிலும் இவ்வாறே கட்சிக்குள் ஒற்றுமையாக இருவரும் இருப்பதை தான் விரும்புவதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.

இதேவேளை “நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது, உங்களுக்கு கீழ் அமைச்சராகப் பணியாற்றியவரிடம், நீங்கள் பிரதமராகப் பணிபுரிவது கடினமாக இருக்காதா?” என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி, முன்னர் காணப்பட்ட பிரதமர் பதவிக்கும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்குப் பின்னரான பிரதமர் பதவிக்குமிடையில் வித்தியாசம் காணப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பிரதமர் பதவியில் செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் இருப்பதாக தன்னால் காணமுடியவில்லை என அவர் பதில் வழங்கியுள்ளார்.


1 comment:

  1. வெட்கம், மானம், சூடு, சுரணை என்பவை இருந்தால்தானே இதிலுள்ள மானப் பிரச்சினை தெரியும்.

    ReplyDelete

Powered by Blogger.