Header Ads



பிறந்த தினத்தில் தூக்கில் போடப்பட்ட, இந்த யாகூப் மேனன் யார்..?

1993–ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக நள்ளிரவு திறக்கப்பட்டது.  அதிகாலையில் விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, யாக்கூப்பின் தூக்கு தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். 

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி 13 இடங்களில் இடைவிடாமல் பிற்பகல் 3.40 மணி வரை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் மொத்தம் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். மற்றொரு குற்றவாளியும், டைகர் மேமனின் சகோதரருமான யாகூப் மேமன் உள்பட 189 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு சதி செய்தல், பண உதவி மற்றும் பல்வேறு வழிகளில் உதவியதாக யாகூப் மேமன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை மும்பை தடா கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை தடா கோர்ட்டில் கடந்த 1995–ம் ஆண்டு தொடங்கியது. 12 ஆண்டுகள் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2007–ம் ஆண்டு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து தடா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த ஐகோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமன் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். சுப்ரீம் கோர்ட்டிலும் அவரது தூக்கு தண்டனைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இறுதியில் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

யாகூப் மேமன் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு கடந்த 21–ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மேற்படி தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். 

அதன்மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் ஜோசப் குரியன் ஆகியோரின் மாறுபட்ட நிலைபாட்டினால், 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் முன்னிலையான அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில், யாகூப் மேமன் தரப்பில், அவருக்கு பிறப்பித்த மரண வாரண்டு சட்ட விரோதமானதாகும். சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளும் முடிவுக்கு வருவதற்கு முன்பே அவருக்கு இந்த வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

ஏப்ரல் 30–ந் தேதியே மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் வெறும் 17 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவருடைய திருத்தம் கோரும் மனுவின் மீது முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது,. தள்ளுபடி இதற்கு நீதிபதிகள், யாகூப் மேமன் தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவின் மீதான விசாரணையில் உரிய நடைமுறைகளும், விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த வழக்கில் தடா கோர்ட்டு பிறப்பித்த மரண வாரண்டும் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கருணை மனுவை தள்ளுபடி செய்ததும் யாகூப் மேமன் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகவில்லை என்றும் கூறினர். எனவே இந்த திருத்தம் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர், யாகூப் மேமன், மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தாக்கல் செய்த கருணை மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அதையடுத்து, நேற்று காலை யாகூப் மேமன் சார்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்தார். யாகூப் மேமன் மனு குறித்து நேற்று இரவு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. யாகூப் மேமன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்வது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜனாதிபதியை சந்தித்து மத்திய மந்திரிசபையின் முடிவை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து யாகூப் மேமனின் இறுதி கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இது பற்றிய தகவல் நேற்று இரவு வெளியானது.

யாகூப் மேனனை நாக்பூர் சிறையில் இன்று காலையில் தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், மேலும் ஒரு இறுதி வாய்ப்பாக, அவரது வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை அவர்களின் இல்லத்தில் நேற்று நள்ளிரவு சந்தித்து மனு கொடுத்தனர். யாகூப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நிராகரித்த நிலையில், அபெக்ஸ் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அதிகாரிகள், யாகூப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற குறைந்தபட்சம் 14 நாட்கள் அவகாசம் தரவேண்டுமென்று வழக்கறிஞர்கள் தங்கள் மனுவில் கோரினர்.

முதலில் மூத்த நீதிபதி எச்.எல் தத்துவின் இல்லத்துக்குச் சென்ற அவர்கள், பின் நீதிபதி மிஸ்ராவின் இல்லத்திற்குச் சென்று அங்கிருந்து நேரடியாக, சில கி.மீ தொலைவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு சென்றனர். பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின்னர், 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தலைமையில் கோர்ட்டு நம்பர் 4-ல் மனு விசாரணைக்கு வந்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு நள்ளிரவிலேயே திறக்கப்பட்டது. 

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த வழக்கிற்காகத்தான் அது நள்ளிரவிலேயே திறக்கப்பட்டது.

கடைசி முயற்சியும் தோல்வி... 

அதிகாலை தொடங்கி சுப்ரீம் கோர்ட்டில்ல் நடைபெற்ற பரபரப்பான விசாரணையில் யாகூப் மேனனின் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் முதலில் தனது வாதங்களைத் தொடங்கினார். “கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், மேமனின் புதிய கருணை மனுவை குறுகிய நேரத்தில் குடியரசு தலைவர் நிராகரித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ஆனந்த், கருணை மனு நிராகரிப்பு உத்தரவு நகலை பெற யாகூப் மேமனுக்கு உரிமை உள்ளதென்று நீதிமன்றத்தில் வாதாடினார்.

எதிர்தரப்பில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “ யாகூப்பை தூக்கிலிடும் தீர்ப்பு ஏப்ரல் மாதமே எழுதப்பட்டுவிட்டது. ஏகப்பட்ட கருணை மனுக்கள் அமைப்பையே தவறாக்குகிறது. குடியரசுத் தலைவருக்கு செய்வதற்கு வேறு பல வேலைகள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிரதிநிதிகள் மனு கொடுத்தால் அமைப்பு எப்படி செயல்படும்.?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். மேலும், யாகூப் தரப்பு சட்ட நடைமுறையை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துவதாகவும், தண்டனையை இழுத்தடித்து யாகூப்பை சிறையிலேயே வைக்க முயற்சி மேற்கொள்ளபடுகிறதென்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, அதிகாலை 5 மணியளவில் யாக்கூப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். 90 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையில், யாகூப் மேமன் தரப்பில் எடுக்கப்பட்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, யாகூப் மேமனை நாக்பூர் சிறையில் தூக்கிலிடுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டது.

தூக்கிலிடப்பட்டார்

இதனைத் தொடர்ந்து யாகூப் மேமனு நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடுவதற்கு முன்னதாக யாகூப் மேமன் உடல்நிலையை சிறைத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அவருக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 7:00 மணிக்கு முன்னதாக யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். யாகூப் மேமன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்து உள்ளனர். யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதையொட்டி நாக்பூர் சிறையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் யாகூப் மேமன் வீட்டிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. யாகூப் மேமன் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது தொடர்பாக இன்று மாநில சட்டசபையில், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ள யாகூப் மேமனின் முழுப்பெயர் யாகூப் அப்துல் ரசாக் மேமன் என்பதாகும். யாகூப் மேமன் 1962-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி பிறந்தார். அதே தேதியில் அவர் தூக்கில் போடப்பட்டு உள்ளார். 

No comments

Powered by Blogger.