Header Ads



தேசிய அரசியலில் முக்கிய இடம் கிடைத்துள்ளது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு - அப்துர் ரஹ்மான்

நல்லாட்சியை அரசியல் கோசமாக மாத்திரம் கொள்ளாது இலட்சியமாக கொண்டு செயற்படுவதாக தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாகவும் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அப்துர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த தேர்தலில் நல்லாட்சியை வலியுறுத்தி நாடு முழுவதும் நாம் பிரச்சாரங்களில் பங்கேற்றோம். தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய சக்திகளுடன் இணைந்து பணியாற்றினோம்.  அண்மையில் முதற்தடவையாக சந்திரிக்காவை கண்டுபேசினோம். பல விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம். சந்திரிக்கா, மைத்திரி, ரணில் ஆகியோரிடையே  இணக்கப்பாடு நிலவுவதை சந்திரிக்காவின் பேச்சில்   அவதானிக்கமுடியுமாக இருந்தது.

குறிப்பாக சந்திரிக்கா சிறுபான்மை சமூகங்கள் விடயத்தில் அதிகளவு ஆர்வம் கொண்டவராக காணப்படுகிறார். 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் தாண்டி சிறுபான்மை சமூகங்களுக்கு தீர்வு கிடைக்கச்செய்வதில் சாதகத் தன்மையுடன் காணப்படுகிறார்.  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இவ்விடயத்தில் அதிகளவு பற்றுடன் அவர் செயற்படும் வாய்ப்பு காணப்படுகிறது.

பிராந்திய ரீதியில் பணிகளையும் சேவைகளையும் ஆரம்பித்த நாம், இன்று தேசிய ரீதியில் செல்வாக்குச்  செலுத்த ஆரம்பித்துள்ளோம். தேசிய சக்திகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். நமது சமூகத்தைச் சார்ந்த அரசியல்வாதிகள் பதவிகளுக்கு அலைந்து திரிந்து கொண்டிருக்கையில் நாங்கள் நல்லாட்சி குறித்து பேசினோம். மைத்திரிபால சிறிசேனா பதவிக்கு வந்தவுடன் எமது அமைப்பையும் தேடி பதவிகள் வந்தன. என்னை பதவியேற்கும்படி வலியுறுத்தப்பட்டது.

எமக்கு பதவிகள் முக்கியமல்ல. இங்குதான் நாம் ஏனைய நமது அரசியல் வாதிகளுடன் வேறுபட்டு நிற்கிறோம். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவும் சிறுபான்மை சமூகங்கள் நன்மை பெறவும் பதவிகள் உதவுமேன்றால் அதுகுறித்து ஆராய்வோம்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் முக்கியமானது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் அதுகுறித்து முதற்கட்ட பேச்சுக்கள் நடைபெற்று முடிந்துள்ளன. விரைவில் 2 ஆம் கட்ட பேச்சுக்கள் ஆரம்பமாகும். அநேகமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது எனவும் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.