Header Ads



''தங்கையை காட்டி, அக்காவை கொடுக்க ஐ.தே.க. முயல்கிறது'

19ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தை 09, 10 ஆம் திகதிகளில் மேற்கொள்வதை ஐ.ம.சு.மு. அடங்கலான எதிர்க் கட்சி கள் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலை வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின் அதனடிப்படையில் கட்சித் தலைவர்களை காட்டியே விவாத திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே 19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் 19 ஆவது திருத்தத்தை 9 ஆம், 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுப்பதற்கு எதிர்க் கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்படும் 19 ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக மேலும் பல திருத்தங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர் மறைவாக மேற்கொள்ளும் இந்த முயற்சியை எதிர்க் கட்சிகள் முழுமையாக எதிர்ப்பதாகவும் இது பாராளுமன்ற பொறுப்பில் தலையீடு செய்வதாகும் எனவும் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

19ஆவது திருத்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது. ஆனால் சபை முதல்வர் அலுவலகம் 12 பக்கங்களை கொண்ட புதிய திருத்தங்களை முன்வைத்துள்ளது. இது அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவுக்கு முரணானதாகும். இது பாராளுமன்றத்திற்குரிய பொறுப்பாகும். அரசின் இந்த முயற்சி குறித்து எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னர் அதனை ஆராய்ந்து மீண்டும் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டியே 19ஆவது திருத்தத்தை விவாதத்திற்கு எடுக்கும் திகதி முடிவு செய்யப்பட வேண்டும். 9 ஆம், 10 ஆம் திகதிகளில் 19 ஆவது திருத்தத்தை விவாதத்திற்கு எடுக்கும் முயற்சியை கைவிடுமாறு நாம் கட்சித் தலைவர் கூட்டத்தில் கோரினோம்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதை நாம் எதிர்க்கவில்லை. திருத்தங்களை மறைத்து மேற்கொள்ளும் ஐ.தே.க. முயற்சியையே எதிர்க்கிறோம். வத்தமானியில் அமைச்சரவை பிரதானி ஜனாதிபதி என்று உள்ள போதும் பின்னர் வெளியிடப்பட்ட திருத்தத்தில் அமைச்சரவை பிரதானி பிரதமர் என்று மாற்றப்பட்டுள்ளது. இவற்றை மாற்றுவதற்குத் தேவையான திருத்தங்களை நாம் முன்வைக்க இருக்கிறோம்.

தேர்தல் முறுசீரமைப்பையும் 19 ஆவது திருத்தத்தையும் ஒன்றாக மேற்கொள்ள முடியாவிட்டால் சில சிறுதிருத்தங்களை செய்து 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற நாம் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போதும் தேர்தல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னரே 19 ஆவது திருத்தம் செல்லுபடியாகும் என திருத்தம் செய்ய முடியும். நாம் 19 ஆவது திருத்தத்தை எதிர்க்கவில்லை. 100 நாள் திட்டத்தில் வாக்களித்தவற்றை நிறைவேற்றுமாறு கோருகிறோம்.

உச்ச நீதிமன்ற வியாக்கியானம் இன்னும் வழங்கப்படவில்லை. அதுவரை 19 ஆவது திருத்தத்தை விவாதிக்க திகதி நிர்ணயிக்க முடியாது.

ஐ.தே.க. தான் இதில் அவசரம் காட்டுகிறது. சில திருத்தங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும். உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தின் பிரகாரமே எமது கட்சியின் ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த கூறியதாவது,

அரசியலமைப்பு திருத்தத்தை தாமதப்படுத்தும் நோக்கம் எமக்கு கிடையாது. 49 எம்.பிகள் இருக்கும் கட்சிக்கு பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகள் வைத்திருக்க நாம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஐ.தே.க.வுக்கு தேவையான வகையில் அரசியலமைப்பை திருத்த இடமளிக்க முடியாது. ஐ.ம.சு.மு. ஒத்துழைப்பு இன்றி 2/3 பெரும்பான்மை கிடைக்காது. உச்ச நீதிமன்ற வியாக்கி யானத்தை 225 எம்.பிகளும் ஆராய வேண்டும் என்றார்.

சு.க. செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது,

தங்கையை காட்டி அக்காவை கொடுக்க ஐ.தே.க. முயல்கிறது. நாம் ஐ.தே.க.வின் வாலாக செயற்படவில்லை என்றார்.

1 comment:

  1. அனுரா பிரியதர்ஷன யாப்பா கூறிய அக்கா, தங்கை உதாரணம் பெண்களை கேவலப் படுத்தும் ஒன்றுதான். பெண்கள் தொடர்பான சிந்தனை மாற்றம் சகல தரங்களிலும், தரப்புக்களிலும் அவசியம்.

    அக்கா, தங்கை உதாரணம் சொல்ல, பெண்கள் ஒன்றும் போகப் பொருட்கள் அல்ல, அவர்களும் சக ஜீவன்களே.

    ReplyDelete

Powered by Blogger.