Header Ads



'இலங்கை முஸ்லிம்களிடத்தில் ஜிஹாத்' - இயலாமையின் குற்றச்சாட்டுக்கள்...!

-நவாஸ் சௌபி-

இலங்கை முஸ்லிம்களை ஜிஹாதுடன் தொடர்புபடுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என்பது புதிதான ஒன்றல்ல. இவ்வாறு இலங்கை முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாக குற்றம் சுமத்துகின்றவர்களின் பட்டியலில் இன்று இந்தியாவும் தன் பெயரைப் பதித்திருக்கிறது.

இலங்கையின் வடபகுதியில் ஜிஹாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதையும்  அவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கைஅரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். (நன்றி: ஜப்னா முஸ்லிம் - 04.04.2015)

இந்தக் கருத்தை கவனத்தில் எடுக்காது புறங்கையால் தட்டிவிடலாம் போலிருந்தாலும், மேற்படி இந்திய அதிகாரியின் கருத்துக்கு ஜால்றாதட்டுவது போல் பொதுபலசேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே'ஜிஹாத்தைதடைசெய்ய இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அதனை ஏற்று ஒரு அறிக்கையினை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.

'இந்திய உளவுப் பிரிவினருக்கு முன்பதாகவே இலங்கையில் ஜிஹாத் முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்குவதாக எச்சரிக்கைவிடுத்தோம். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்களும் கண்களை மூடிக்கொண்டே உள்ளனர். இலங்கைக்குள் மெதுவாக ஊடுருவிய முஸ்லிம் ஜிஹாத் தீவிரவாதம் இன்று நாடுமுழுவதும் வியாபித்துவிட்டது. இன்று அவ்வியக்கம் இந்தியாவை அழிப்பதற்கும் தாக்குதல்களை நடத்தவும் திட்டங்களைத் தீட்டிவருவதாகவும் இங்கு அவ்வியக்கத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் இந்தியஉளவுப் பிரிவினர் எமது நாட்டுக்கு அறிவித்துள்ளனர்' (நன்றி: வீரகேசரி– 07.04.2015)

இவ்வாறு இந்திய அதிகாரி வெறும் கையால் முழம் போட்டதைஅத்திபாரமாக வைத்து அதில் பெரும் சுவரைக் கட்டி எழுப்புவதாக மேற்படி அறிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. விதானகே கூறுவது போன்று இலங்கை முஸ்லிம்கள் எதற்காக இந்தியாவைத் தாக்கத் திட்டமிட வேண்டும்? அப்படி இந்தியாவைத் தாக்கும் அளவிற்கு இலங்கை முஸ்லிம்கள் பலம் பெற்றிருந்தால் இதுவரை இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த எத்தனையோ அழித்தொழிப்புகளுக்கு எதிராக அல்லவா அவர்கள் முதலில் பதிலடிகொடுக்க வேண்டும்? அப்படி ஏதாவது ஒன்று எங்காவது நடந்திருக்கிறதா? கதை அளப்பதிலும் ஒரு நியாயமிருக்க வேண்டும். ஆனாலும் இப்படி இலங்கை முஸ்லிம்களை ஜிஹாத்துடனும் தீவிரவாதத்துடனும் தொடர்புபடுத்தி சிறுசிறு புள்ளிகளை வைப்பதும் பின் அதைவைத்து பெரும் கோலம் போடுவதுமாக இந்தக் கட்டுக்கதை முற்றுப்பெறாமல் தொடர்ந்து கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன என்றுதான் இலங்கை முஸ்லிம்கள் விழிப்புக் கொள்ளவேண்டி இருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களை நாட்டின் எதிரிகளாக சித்திரிப்பதற்கு சிங்கள பௌத்தவாத அமைப்புக்களான பொதுபலசேனா மற்றும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவை அண்மைக்காலமாக கையிலெடுத்திருக்கும் ஒரு ஆயுதமாக இலங்கை முஸ்லிம்களின் ஜிஹாத் விவகாரம் இருந்துவருகிறது. இது அவர்களது இயலாமையின் குற்றச்சாட்டாகவே தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரி தனது கண்டுபிடிப்பாக கூறிய வடக்கில் முஸ்லிம்களின் ஜிஹாத் என்பது சிங்கள பௌத்தவாத அமைப்புக்களின் இயலாமையோடு அவரது அறியாமையும் கலந்த ஒரு செய்தியே ஆகும்.

இந்திய அதிகாரி ஒருவருக்கு வடக்கில் ஜிஹாத் செயற்பாடுகள் இருப்பதாக கூறமுடிகிறது என்றால் இந்த விடயம் வடக்கிலுள்ள இராணுவப் படைகளுக்கோ அல்லது புலனாய்வுப் பிரிவினர்களுக்கோ தெரியாமலா இருந்திருக்கும். அதிலும் குறிப்பாக வடக்கிலுள்ள இராணுவ பலம்பற்றி யாரும் குறிப்பிட்டுச் சொல்லவா வேண்டும். அண்மையில் சிங்கள வார இதழ் ஒன்றுக்கு செவ்வியளித்த இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்கள் வடக்கிலிருந்து இராணுவமோ படைமுகாம்களோ அகற்றப்படாது என்று உறுதியளித்துக் கூறியதோடு பின்வரும் கருத்தையும் அதற்கு காரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.  

'வடக்கு கிழக்கில் படையினர் விழிப்பு நிலையில் இருக்கின்றனர். நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எந்தவொரு தீவிரவாத செயல்கள் விடயத்திலும் சகிப்புத்தன்மை காட்டப்படமாட்டாது' (நன்றி : தினக்குரல் - 04.04.2015) 

மேற்படி இராணுவத் தளபதியின் பதில் அன்றைய நேர்காணல் கேள்விக்கு வழங்கிய பதிலாக மட்டுமல்லாது இன்றைய இந்திய அதிகாரி மற்றும் டிலந்த விதானகே போன்றவர்களின் ஜிஹாத் குற்றச்சாட்டுக்குப் பொருத்தமான ஆதாரத்தைக் கொண்ட ஒருபதிலாகவும் நிமிர்ந்துநிற்கிறது.

ஏனென்றால் வடக்குகிழக்கில் நிலைமைகளைமிகவும் உன்னிப்பாகஅவதானித்துவருகின்ற இராணுவத்தினருக்குவடக்கில் ஜிஹாத் செயற்பாடுகள் இருந்திருந்தால் நிச்சயம் தென்பட்டிருக்கும் அல்லதுஎப்படியாவதுஅவர்களால் அதுகண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அதுஅவர்களுக்குஅகப்படாது இருக்கிறதுஎன்றால் அதன் உண்மை,வடக்கில் மாத்திரமல்ல இலங்கையின் எப்பாகத்திலும் முஸ்லிம்களிடத்தில் ஜிஹாத் செயற்பாடுகள் இல்லைஎன்பதாகும். 

இதனை மிகவும் ஆதரபூர்வமாகவும் உத்தியோகபூர்வமாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு கடந்த வருடம் அறிவித்தும்விட்டது. இதுபற்றி கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிக சூரிய : 

'ஜிஹாத் அமைப்பினர் இலங்கையில் இல்லை இதற்கான எவ்வித சாட்சியங்களையும் படையினர் பெறவில்லை' என மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். (நன்றி : ஜப்னா முஸ்லிம் - 22.06.2014)

கடந்தவருடம் ஜுன்; மாதம் 15 ஆம் திகதிய அளுத்கம சமபவத்தை திட்டமிட்டு நடத்திய பொதுபல சேனாவின் செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் நோக்குடன் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கடந்த 2014 ஜுன் 20 ஆம் திகதி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இலங்கையில் ஜிஹாத் அமைப்பினர் செயற்படுவதாக குற்றம் சுமத்தியதற்கு பதில் கூறுவதற்கே பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிக சூரிய மேற்படி விளக்கத்தை அளித்திருந்தார்.

அளுத்கம சம்பவத்தின் பின் சிங்கள பொளத்த கடும்போக்கு அமைப்புக்கள் இலங்கை முஸ்லிம்களை ஜிஹாத் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கும் அரசியலைச் செய்துவந்தனர். இதனை மிகவும் வன்மையாக எதிர்த்து அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர ஊடக அறிக்கை ஒன்றைவிடுத்திருந்தார்.

'இந்த நாட்டில் ஜிஹாத் அமைப்புக் கிடையாது. அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவே ஜிகாத் இருப்பதாக இட்டுக்கட்டுகிறது. அமைச்சர்களான சம்பிக்கரணவக்க, வீமல் வீரவன்ஸ ஆகியோர் நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களை இனங்காண வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சுக்கே செல்ல் வேண்டும். தற்போது நாட்டில் ஜிஹாத் அமைப்பு இருப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். அவ்வாறு இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் காணப்படுவதாயின் முஸ்லிம் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பிக்குகள் கொல்லப்படுகின்றனர், கட்டுநாயக்காவில் ரோஷான் சானக்க கொல்லப்பட்டார், சிலாபத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டனர் இதனையெல்லாம் ஜிஹாத் அமைப்பா செய்தது?'(நன்றி : வீரகேசரி– 25.06.2014)

இதுபோன்று ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க முஸ்லிம் சமூகம் குறித்த அவரது அபிப்பிராயத்தை பின்வருமாறு தெரிவித்துமிருந்தார்  : 

'முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமாக நடந்துகொண்டார்கள் ஆகையினால் அவர்களது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் அதனை முறியடிக்கவும் யாருக்கும் இடமளிக்கமுடியாது' (நன்றி : ஜப்னா முஸ்லிம் - 30 மே 2014)

இப்படி சிங்கள பெரும்பான்மை அரசியலுக்குள் இலங்கை முஸ்லிம்கள் குறித்த நேர்மையான எண்ணப்பாடுகள் பல இருந்த போதிலும் சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை புதிதுபுதிதாக உருவாக்கும் பகை உணர்வையே தொடர்ந்தும் வளர்த்துவந்தார்கள். அவர்கள் ஜிஹாத்துடன் மட்டும் நின்றுவிடாமல், இலங்கை முஸ்லிம்கள் அறபு நாடுகளில் போர் பயிற்சி பெறுவதாகவும், இலங்கையில் வெளிநாட்டு இஸ்லாமியத் தீவிரவாதிகள் இயங்கிவருவதாகவும் இருவிதமான குற்றச்சாட்டுகளையும் அதனோடு சோத்துக்கொண்டார்கள்.

இது தொடர்பாக சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரோஹன குணரட்ன அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டுமிருந்தார் :

'இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது இது ஒட்டுமொத்த பிராந்திய வலயத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் பிராந்திய வலய பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து இந்த தீவிரவாத சக்திகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது' (நன்றி : ஜப்னா முஸ்லிம் - 04 மே 2014)

இதுபோன்று பாராதிய ஜனதாகட்சியினர் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருவதாகவும் புதிதான ஒருகுற்றத்தை முன்வைத்தார்கள். 

கடந்த 2014 மே மாதத்தில் சிங்கள இணையத்தளம் ஒன்றும், 'இலங்கையின் முஸ்லிம் இளைஞர்களுக்கு பலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு என்பன போர் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இப்பயிற்சிகளைப் பெற 30 பேர் கொண்ட இலங்கை முஸ்லிம் இளைஞர் குழு லெபனானுக்குசென்றுள்ளது' எனவும் தகவல் வெளியிட்டது. (நன்றி : ஜப்னா முஸ்லிம் - 04 மே 2014)

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கான மறுப்பு அறிக்கைகளை உடனுக்குடன் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிக சூரிய முன்வைத்தமை இதுவிடயத்தில் முஸ்லிம்கள் அடைந்த தற்காலிக ஆறுதலாகவும் அதுவே இவ்வாறானவர்களுக்கு நிரந்தர ஆதரமாகவும் இருக்கிறது. 

இது தொடர்பாக ருவான் வணிக சூரிய விடுத்த ஊடகச் செய்திகள் வருமாறு :

'முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருவதாக பாராதிய ஜனதாகட்சி குற்றம் சுமத்த்தியுள்ளது இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. இலங்கைமிகச் சிறிய ஒரு நாடு எவரின் கண்களுக்கும் தென்படாது இரகசியமான முறையில் தீவிரவாதப் பயிற்சிகளை அளிப்பது சாத்தியப்படாது. மேலும் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கே இடமில்லாத நிலையில் வேறு தரப்பினருக்கு எவ்வாறு பயிற்சி பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்' (நன்றி : ஜப்னா முஸ்லிம் -  04 மே 2014)

'இலங்கiயில் அல்-கைதா அமைப்போ ஏனைய பயங்கரவாத அமைப்புக்களோ தளங்களைக் கொண்டிருக்கவில்லை. இலங்கையில் பயங்கரவாத குழுக்கள் செயற்படுவது தொடர்பில் இராணுவமோ, பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகளோ எந்த தகவல்களையும் பெறவில்லை. (நன்றி : ஜப்னா முஸ்லிம் -  27 ஜுலை 2014)

இப்படி இலங்கை முஸ்லிம்கள் மீதான ஜிஹாத் மற்றும் ஏனைய பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை அவைஉண்மைக்குப் புறம்பானவை என இலங்கையின் இராணுவபடை மற்றும் புலனாய்வு பிரிவுகளின் அறிக்கைகளை வைத்து பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நிரூபித்திருக்கிறார்.

இலங்கையில் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகள் இருக்கிறதா? இல்லையா? என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் படைகளுமே சட்டத்தின் முன் நிரூபித்துக் காட்ட வேண்டும் அவையே ஆதாரபூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் அப்படியான ஒன்று இலங்கை முஸ்லிம்களிடத்தில் இல்லவே இல்லை என்று அறிவித்த பிறகும், இன்னும் எதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர முனைகிறது? தேசிய ஐக்கியத்திற்கும் சமூக ஒருமைப்பாட்டுக்குமான தற்போதைய அரசின் நல்லாட்சியில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள்.

2 comments:

  1. This BBS and other Buddhist idiots still funded by their friends and masters, they have been working for 24/7 against muslims, be strong with your media news to eradicate the venomous minded snakes. they never succeeded on their baseless attempts.

    ReplyDelete
  2. ஜப்னா முஸ்லிம் சில உண்மைகளை வெளியிட முயலாமல், பின்வாங்குகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.