Header Ads



வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பிரதமரின் கருத்து செயலுருவம் பெறுமா..?

(சத்தார் எம் ஜாவித்)  

சுமார் கால் நூற்றாண்டைத் தாண்டும் வடமாகாண முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு பதிய அரசு சரியான தீர்வினை அம்மக்களுக்கு வழங்குமா? என்ற ஏக்கத்துடன் இன்று சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். 1990ஆம் ஆண்டு வடக்கில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்குமான யுத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள்; வடமாகாண தமிழ் மக்களிடத்தில் சிறுகச் சிறுக  இனவாதத்தை தோற்று வித்து அதன் ஒரு அங்கமாக முழு வடமாகாண முஸ்லிம்களையும் வடமாகாணத்தை விட்டும் விரட்டியடித்து வடமாகாணம் தமிழர்களுக்கு மட்டும்தான் என்ற இன வாதச் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களாக இன்று வடமாகாண முஸ்லிம்கள் காணப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்கள். பாராளுமன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் என  பலவற்றைக் கண்ட வடமாகாண முஸ்லிம்கள் அந்தந்தத் தேர்தல்களில் எல்லாம் முஸ்லிம் சமுகத்தினை விரைவில் மீளக் குடியமர்த்துவோம் அதற்கான தீர்வினை விரைவில் மேற்கொள்வோம் என்ற நீலிக் கண்ணீர் வாக்குறுதிகள் எல்லாம் அம்மக்களை பல வழிகளிலும் ஏமாற வைத்ததுடன் சொல்லொனாத் துன்பங்களை 25 வருடங்களாக அனபவிக்கவும் வைத்து விட்டது என்பதே யதார்த்த நிலைமைகளாகும். இவ்வாறு 25 வருடங்களாக துன்பத்தில் துவண்டு வரும் முஸ்லிம் சமுகத்தின் நலன்களில் ஆட்சியில் பங்களிகளான கட்சிகளோ அல்லது அதனை பிரதி நிதித்துவப் படுத்துபவர்களோ மட்டுமல்லாது முஸ்லிம் சமுகங்களைச் சார்ந்த அரசியல் வாதிகளும் கூட கரிசனை காட்ட வில்லை என்றே கூறலாம். இவர்களின் இருப்புக்களைத் தக்க வைப்பதற்காக ஆடிய ஆட்டங்களுக்கும், போட்ட திருவுதாளங்களுக்கும் ஒட்டு மொத்தத்தில் முஸ்லிம் சமுகத்தை தெற்கில் ஒரு இனவாத்த தாக்குதலுக்கு இட்டுச் சென்றதே தவிர நிம்மதியையோ அல்லது சுய கௌரவத்தையோ கொடுக்க வில்லை. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் உரியவாறு முன்னெடுத்துச் செல்லப்பட்டிருந்தால் கடந்த மஹிந்த அரசில் இஸ்லாம் மீது பொதுபல சேனா போன்ற பெரும்பான்மை இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அடாவடித் தனங்களுக்கும் வடமாகாண முஸ்லிம்கள் என்ற வகையில் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியிருப்பர்.

வடமாகாண முஸ்லிம் சமுகம் தமது சொந்தப் பூமியில் தமது இருப்புக்களை நிலை நிறுத்தியிருந்தால் இஸ்லாத்திற்கு எதிரான விடயங்களை மேற்கொண்டவர்களுக்கு சர்வதேச ரீதியாக தமது எதிர்ப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தைரியமும் பலமும் இருந்திருக்கும் என்றாலும் வடக்கிலிலருந்து ஆயுத முனையில் முஸ்லிம் சமுகத்திற்கு ஏற்பட்ட இனவாதச் செயற்பாடுகளே தெற்கில் முழு முஸ்லிம் சமுகத்திற்கும் ஏற்பட்டது எனலாம்.

1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் துரத்தப்பட்டபோது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமேயாகும் அக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற் கொண்டிருந்தால் இன்று முஸ்லிம் சமுகம் இழந்திருந்த இழப்புக்களில் ஒரு பகுதியையே இழந்திருப்பதுடன் பெரும்பாலான இழப்புக்களில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பர். குறிப்பாக கிராமப் புறங்களை விடவும் நகர்ப்புறங்களை அரச படைகள் பாதுகாத்திருக்கலாம் ஆனால் அந்த அரசு படைகளைப் பாதுகாத்ததே தவிர மக்களைக் காப்பாற்றத் தவறியதன் வரலாற்றுத் தவறை முஸ்லிம் சமுகத்திற்கு இழைத்து விட்டனர்.

தற்போதைய மைத்திரிய அரசாங்கத்திலும் பங்காளிகளாக ரணில் விகரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர்  இருக்கின்றனர். இவ்வாறானதொரு நல்ல சந்தர்ப்பத்தில் 1990ஆம் ஆண்டு தமது கட்சி விட்ட வரலாற்றுத் தவறை முஸ்லிம் சமுகம் சார்பாக சீர்செய்வதற்கு நல்தொரு சர்தப்பம் தற்போது கிட்டியுள்ளது. அன்மையில் வடமாகாணத்திற்குச் சென்று பல முக்கிய நிகழ்வுகளில் பங்கு கொண்டதுடன் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் முஸ்லிம் சமுகம் சார்பாகவும் கலந்தரையாடியதுடன் பிரதமர் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பாக மீள் குடியேற்ற அமைச்சரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பது முஸ்லிம் சமுகத்தினால் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. கடந்த மஹிந்த அரசில் பிரதமராக இருந்த கலாநிதி டி.எம்.ஜெயரத்னவும் கூட வடமாகாணத்திற்குச் சென்றிருந்தார் ஆனால் அவரால் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ பயன் தரும் விடயங்களில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது போயிருந்ததையும் இந்த வேலையில் சுட்டிக்காட்டலாம்.

எனினும் முஸ்லிம்கள் மீதான தற்போதைய பிரதமரின் முயற்சிக்கு மீள்குயேற்ற அமைச்சர் குறிப்பாக அகதிகளாக இருக்கும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் அகதி மக்களின் நலன்கள் பாதிப்புறாத வகையில் நடவடிக்கை எடுப்பாரா? என்பதிலும்   பிரதமர் கோரிய அறிக்கை வெறும் எழுத்தில் மட்டும் தங்கியிருக்குமா? அல்லது செயலுருவம் பெறுமா? என்பதிலும் பல்வேறுபட்ட சந்தேகங்களும் முஸ்லிம் சமுகத்தில் தற்போது எழுந்திருக்கத்தான் செய்கின்றது. காரணம் கடந்த அரசாங்கங்களிலும் இவ்வாறான பல நூற்றுக் கணக்கான அறிக்கைள் கோரப்பட்டன   அதற்கும் மேலாக பல்வேறுபட்ட சமுக அமைப்புக்களாலும், சங்கங்களாலும் கூட கடந்த 25 வருடகாலமாக தேவையான அறிக்கைகள் அரசாங்கத்திற்கும், அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்ட போதிலும் ஒன்றும் இடம் பெறவில்லை  என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

வடமாகாண முஸ்லிம் சமுகத்தைப் பொருத்தமட்டில் காணிப் பிரச்சினைகள், பூரணமான மீள் குடியேற்றம், தொழில் வாய்ப்புக்கள், 1990ஆம் ஆண்டு இடம் பெயர்வின்போது இழந்த இழப்புக்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவு உள்ளிட்ட பல விடயங்கள் முக்கியமாகக் காணப்படுகின்றன. தற்போது வடமாகாணத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வில்லை, அத்துடன் தொழில் வாய்ப்புக்களுக்குரிய சலுகையுடனான கொடுப்பனவுகள், வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் என்பன உள்ளிட்ட கடன் திட்டங்களும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு காணல் நீரான விடயமாகவே காணப்படுகின்றது. பிரதமர் மேற்படி விடயத்தில் அதீத அக்கறை செலுத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகம் இனியும் வறுமையில் வாழாது தமது சொந்தப் பூமியில், சொந்தக் காலில் நிற்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர் பார்க்கின்றனர். அதற்கான வழியை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் அரசாங்கத்திற்கே உள்ளது. மஹிந்த அரசில் மீள் குடியேற்ற அமைச்சராக றிஷாட் பதியுதீன் இருந்த போதிலும் முற்று முழுதாக அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அவரால் ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டது. அவர் இடம்பெயர்ந்து அகதிகளாக இருந்த இடங்களில் ஒருசில வேலைகளைச் செய்ததுடன் காசிமியா புரத்தில் தாராபுர மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தது போன்ற விடயங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ஏனைய பகுதி மக்களால் இன்று வரை பல விமர்சனங்களுக்கான விடயங்களாகவும் பேசப்பட்டு வருகின்றது.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடக்கில் அதிகமான தமிழ் மக்களுக்கு அமைச்சராக இருந்து செய்தாரே தவிர முஸ்லிம் சமுகம் அவர் அமைச்சராக இருந்தபோது எதிர் பார்த்த பலனை அடையவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பாதிக்கப்பட்ட மக்களால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்தன. எனினும் தமிழில் உள்ள ஒரு பலமொழி போல் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்கள் அதுபோல் அவர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது இன்னும் கொஞ்சம் முஸ்லிம் சமுகத்தில் அக்கறை செலுத்தியிருந்தால் இன்று முஸ்லிம் சமுகம் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பர் என்ற புத்தி ஜீவிகளின் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டியுள்ளது. என்ன செய்வது அமைச்சர் றிஷாட் தெரிந்தோ தெரியாமலே சில குறைபாடுகளை விட்டிருக்கலாம் என்றாலும் அவர் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இனியும் முஸ்லிம் சமுகம் மீது விட்டு விடாது தற்போது இருக்கும் அமைச்சுப் பதவியை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லிம் சமுகத்திற்கும் தமது சேவையை குறிப்பாக இடம் பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு மேற்கொண்டால் அது இடம் பெயர்ந்த மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுக்கலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் தற்போது பிரதமர் ரணில் விக்ரம சிங்க வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் எடுத்துள்ள அக்கறைக்கு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி, போதமின்றி தமது ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி 25 வருடங்களாக அகதிகளாக துன்பப்படும் மக்களின் வாழ்வில் ஒளியூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். மேற்படி விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்று சேராவிட்டால் கடந்தகால துன்பியல் அவலங்களே தொடருவதற்கான நிலைமைகள் தோன்றலாம். ஒவ்வொரு அரசியல் வாதிகளும் விடும் பிழைகளின் மறுவடிவமே அந்த மக்களை துன்பியல் நிலைமைகளுக்கு அல்லது வறுமை நிலைமைகளுக்கு இட்டுச் செல்லும் எனலாம். கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசின் ஒன்பது வருடகாலத்தில் மக்கள் பட்ட அவலங்களை நாம் நல்ல உதாரணங்களாக அல்லது படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம். அக்காலத்தில் மக்கள் தமது வாழ்வாதார விடயங்களில் தாராளமாகவே பாதிக்கப்பட்டதுடன் அதிகமான கஷ்டங்களையும் எதிர் கொண்டிருந்தனர். குறிப்பாக பொருட்களின் விலைகள் விசம்போல் ஏறியதால் மக்கள் வறுமை நிலைமைகளுக்கு பின்தள்ளப்பட்ட உண்மைகளை தற்போது மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு புதிய யுகம் தோன்றியுள்ளது.

புதிய அரசு பாரிய அபிவிருத்தித் திட்டங்களைக் குறைத்து இடம் பெயர்ந்த அகதி மக்களின் இருப்புக்களை உறுதி செய்து அவர்களை யுத்தத்திற்கு முன்னர் எப்படி தமது சொந்தக்காலில் நின்று வாழ்ந்தார்களோ அதேவிதத்தில் வாழ்வதற்கான சூழ் நிலைமைகளை தோற்று வித்து அதன் பின்னர் இலங்கையின் அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போதே மக்கள் உண்மையான சந்தோசங்களை அல்லது அபிவிருத்திகளின் பயன்களை அடைவர். புதிய அரசு வடமாகாண மக்களின் உடல், உள யதார்த்த நிலைமைகளை அறிந்து தமது அபிவிருத்திகளைச் இட்டுச்செல்ல வேண்டும். அதற்கான முதல் கட்ட வேலையாக மீள்குடியேற்றம் என்பது முக்கியமானதாக காணப்படுகின்றது அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே முற்று முழுதாக பாதிக்கப்பட்ட வடமாகாண அகதி முஸ்லிம்களின் விடயத்தில் இனியும் விதண்டாவாதங்கள் காட்டி, அரசியல் ஏமாற்றங்களைச் செய்யாது சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களுக்கு அமைவாக அம்மக்களின் நீதி, நியாயங்கள் நிலைபெற சரியான ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக செயற்பாடுளை முன்னெடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையும் கடப்பாடுகளாகவும் காணப்படுகின்றது.  

No comments

Powered by Blogger.