Header Ads



சரத் பொன்சேக்கா குறித்து மைத்திரிக்கு அச்சமா..?

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சுற்றிச் சர்ச்சைகள் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அவருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி பீல்ட் மார்ஷல் என்ற இராணுவப் பதவிநிலைப் பட்டம் அளிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

பாதுகாப்பு அமைச்சு இதற்கான நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு அந்தப் பட்டத்தை வழங்குவதற்கு அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. வெறுமனே பீல்ட் மார்ஷல் பட்டத்தை அவருக்குக் கொடுப்பதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்தில், பீல்ட் மார்ஷலாகப் பணியாற்றும் ஆசையும் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்த்து, அந்தப் பட்டத்தை வழங்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாகவும், அதற்கு அரசாங்கத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. அவ்வாறு இராணுவத்துக்குள் மீண்டும் உள்ளீர்க்கப்பட்டால், அவர் இராணுவத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் கொண்டவராக மாறிவிடுவார் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனராம்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததுமே, மூன்று நட்சத்திர ஜெனரலாக இருந்த லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவி உயர்வு வழங்கினார். அதுவரைக்கும்,சேவையில் இருந்த இராணுவத் தளபதிகள் எவருமே,நான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவி வகித்ததில்லை. இலங்கையின் இராணுவ வரலாற்றில் சேவையில் இருந்த போதே ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்ட முதல் தளபதி என்ற பெருமையைப் பெற்றிருந்தார் ஜெனரல் சரத் பொன்சேகா.

அப்போதைக்கு அவருக்கு அந்த பதவி உயர்வு திருப்தியளிக்கவும் செய்தது. ஏனென்றால்,இலங்கை இராணுவத் தளபதிகளின் உயர்நிலைப் பதவியாக லெப்.ஜெனரல் பதவியே இருந்து வந்தது. முதல்முறையாக ஜெனரல் பட்டத்தை எட்டிய இராணுவத் தளபதி என்ற பெருமை இலங்கை இராணுவத்திலேயே தனக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதையிட்டு அவர் திருப்திபட்டுக் கொண்டார். என்றாலும், அவர் அரசியலில் இறங்க முடிவு செய்த பின்னர்,எல்லாமே தலைகீழாக மாறியது.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்,மஹிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட அவர்,எவ்வாறு புகழின் உச்சிக்கு சென்றாரோ, அதேபோல வேகமாக கீழ் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இராணுவ நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளுக்கமைய ,சரத் பொன்சேகாவிடம் இருந்து,ஜெனரல் பட்டம் பறிக்கப்பட்டது. இராணுவத் தளபதியாக இருந்தவர் என்ற பெருமையைக் கூட அவர் இழந்தார்.

இலங்கை இராணுவத்தில் சரத் பொன்சேகா என்ற பெயரே இல்லாமல் செய்யப்பட்டது. அந்தளவுக்கு அவரது பெயரை வரலாற்றில் இருந்து அழிக்க நடவடிக்கை எடுத்திருந்தார் மஹிந்த ராஜபக்ச. அதுமட்டுமன்றி ,சரத் பொன்சேகாவை அடுத்து இராணுவத் தளபதியாக பதவியேற்ற இப்போதைய கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவையும்,ஜெனரலாகப் பதவி உயர்த்தினார் மஹிந்த ராஜபக்ச. இதன் மூலம்,இலங்கை இராணுவத்தில்,சேவையிலிருந்த போது ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரி என்ற பெருமையும் சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்தளவுக்கும், ஜெனரல் சரத் பொன்சேகா புலிகளுக்கு எதிரான போரைத் திட்டமிட்டு வழிநடத்தியிருந்தார்.

ஆனால்,ஜெனரல் ஜகத் ஜயசூரியவோ,வன்னிப் படைகளின் தளபதியாக மட்டும் பதவியில் இருந்தார்,அவரை சரத் பொன்சேகா வெறும் டம்மியாகவே வைத்திருந்தார். தன்னால்,ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தவரை, மஹிந்த ராஜபக்ச இராணுவத் தளபதியாக்கி,ஜெனரல் பட்டத்தையும் கொடுத்து, தன்னைக் கீழ்நிலைப்படுத்தி விட்டதாகவே சரத் பொன்சேகா உணர்ந்தார். இதனால்,மீண்டும் ஜெனரல் பட்டத்தை மீளப்பெறுவதை அவர் ஒரு பெரிய விடயமாகக் கருதவில்லை. அது இலங்கை இராணுவத்தில்,”ஒரே ஒருவர்” என்ற பெயரையும் புகழையும் கொடுக்காது என்பது அவருக்குத் தெரியும்.

ஜெனரலாக இருந்து விட்டால் தனக்கு நிகராக இன்னொருவர் அமர்ந்திருப்பார் என்பதை அவர் அறிவார். இதனால் தான், ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு முன்னதாக , சில நிபந்தனைகளை அவர் முன்வைத்தார். இராணுவத்தில் இழந்துப்போன அனைத்து கௌரவங்களும் மீளக்கிடைக்க வேண்டும் என்பதுடன் ,பீல்ட் மார்ஷல் பட்டத்தையும் தரவேண்டும் என்று கோரியிருந்தார். அந்த முன்நிபந்தனைகளுக்கு அமையவே ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர். சரத் பொன்சேகாவை குற்றச்சாட்டுக்கள் அனைத்தில் இருந்தும் விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஜெனரல் பட்டத்தையும் அளிக்க உத்தரவிட்டார். 

ஆனாலும், அதையிட்டு சரத் பொன்சேகாவினால் திருப்தி கொள்ள முடியவில்லை. ஏனென்றால், தனக்கு நிகராக இன்னொருவர் இருப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில்,இராணுவத் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற தயா ரத்நாயக்கவுக்கும், புதிய அரசாங்கம் ஜெனரலாகப் பதவி உயர்வை வழங்கியது. அவரும், தனது பதவிக்காலத்தின் கடைசி நாளை ஜெனரலாகவே கழித்திருந்தார். இப்போது, இலங்கை இராணுவத்தில் சேவையில் இருந்த போது ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 3ஆகி விட்டது.

இந்த “மூன்றில் ஒன்றாக” இருப்பதை சரத் பொன்சேகா விரும்பவில்லை. அதுவும், தனக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் இருவருடன் அந்தப் பெருமையைப் பங்கிடுவதை அவர் விரும்பவில்லை. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சரத் பொன்சேகா பங்கேற்கவில்லை.அதற்கான காரணத்தையும் அவரே கூறியிருந்தார். ஜெனரல் ஜகத் ஜயசூரியவும், லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவும் பங்கேற்கும் நிகழ்வுகளில் தான் பங்கேற்றமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தயா ரத்நாயக்க தனக்கு எதிராக பொய்ச் சாட்சி கூறியவர் என்ற கோபம் சரத் பொன்சேகாவுக்கு இருக்கிறது. அதனால் தான்,அவர்கள் இருவருடனும் ஜெனரல் பட்டத்தின் பெருமையைப் பங்கு போட அவர் தயாராக இல்லை. இந்தநிலையில், பீல்ட் மார்ஷல் பட்டத்துக்காக அவர் அரசாங்கத்தை மறைமுகமாக வலியுறுத்தத் தொடங்கினார். எனினும் தான் அதனைக் கோரவில்லை என்றும் ,தந்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் பேட்டி ஒன்றில் அண்மையில் சரத் பொன் சேகா குறிப்பிட்டிருந்தார்.

என்றாலும், பீல்ட் மார்ஷல் பட்டத்தை உடனடியாக தந்து விடமுடியாது என்றும், அது இலங்கை இராணுவத்தில் இல்லாத ஒன்று என்பதால் ,புதிய செயல்முறைகள் உருவாக்கப்படவேண்டும் என்றும்,சரத் பொன்சேகாவே குறிப்பிட்டிருந்தார். அதுவே பீல்ட் மார்ஷல் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியது. பீல்ட் மார்ஷல் என்பது எந்தவொரு இராணுவ அதிகாரிக்கும் இருக்கக் கூடிய கனவு தான், ஏனென்றால் அது உலகின் அதிஉயர்ந்த இராணுவ பதவிநிலை. இலங்கையில் அந்தப் பதவி இதுவரை உருவாக்கப்படவேயில்லை.

உலகில் நான்காவது பெரிய இராணுவத்தை வைத்துள்ள இந்தியாவில் கூட,இரண்டே இரண்டு பேர் மட்டும் தான்,பீல்ட் மார்ஷல் பதவி உயர்வை பெற்றுள்ளனர். அதுவும் அவர்கள் ஆற்றிய அசாத்தியமான திறமைக்களுக்காக, ஓய்வு பெற்ற பின்னரே அவர்களுக்கு அந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஒருவர் பீல்ட் மார்ஷல் காரியப்பா, அடுத்தவர் பீல்ட் மார்ஷல் சாம் மானக்ஷா. அமெரிக்க இராணுவத்தில் இந்த பதவி நிலையே கிடையாது. ஆனாலும் புகழ்பெற்ற இரண்டாம் உலகப் போர்க்கால அமெரிக்கத் தளபதியான ஜெனரல் மக் ஆர்தருக்கு பிலிப்பைன்ஸ் இந்த பதவியை வழங்கியது.

இப்போதும் கூட,உலகம் முழுவதும்,சுமார் 25 பேர் வரையில் தான் இந்த பீல்ட் மார்ஷல் பதவியைப் பெற்றுள்ளனர். அத்தகைய பெருமைக்குரிய ஒரு பதவியைப் பெறுவதே சரத் பொன்சேகாவின் விரும்பமாக உள்ளது. ஆனாலும்,அவர் மீண்டும் இராணுவத்தில் இருந்தபடியே அந்தப் பதவியைப் பெற முயற்சிப்பது தான் சிக்கலானது. ஒருவேளை, இனிவரும் காலத்தில் எந்த தளபதிக்காவது அந்தப் பட்டத்தை கொடுத்து விட்டால் தனது நிலை கீழ் இறங்கிவிடுமே என்ற கவலைப்படுகிறார் போலும், எவ்வாறாயினும்,சரத் பொன்சேகா அரசியலிலும்,இராணுவத்திலும்,தன்னை முன்னிலைப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் வந்தபடியே தான் உள்ளன.

அவர் பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு முயன்றபோது,அதனை மஹிந்த ராஜபக்ச தடுத்து விட்டார்.மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைப்படி, ஜயந்த கெட்டகொட எம்.பி பதவியை விட்டு விலக மறுத்துவிட்டதால்,அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. இப்போதைய அரசுக்குள் அவர் செல்வாக்குச் செலுத்த முனைந்தாலும் அங்கும் சிக்கல்கள் வரத்தான் செய்கின்றன. கடந்த மாத நடுப்பகுதியில்,தனக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் ஏழு பேரை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க மைத்திரிபால சிறிசேனவின் மூலம் நடவடிக்கை எடுத்திருந்தார் சரத் பொன்சேகா.

இராணுவ வழக்கத்துக்கு முரணாக, ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்த உத்தரவை தான் அப்படியே செயற்படுத்தியதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க கடந்த வாரம் கூறியிருக்கிறார். சரத் பொன்சேகாவினால், மைத்திரிபால சிறிசேனவும் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல,பீல்ட் மார்ஷல் விவகாரத்திலும் அரசாங்கத்துக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனால் சரத் பொன்சேகாவின் பரிந்துரையில்,இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் கெப்பிட்டிவலன்ன அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆக,சரத் பொன்சேகாவின் தலையீடுகளை அரசாங்கம் வேண்டா வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கியுள்ளது.இந்த நிலையில்,அவர் பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பெற்றாலும்,கூட, அவர் அரசியலில் கடும் சவால்களையே சந்திக்கக்கூடும்.

- சுபத்ரா-

No comments

Powered by Blogger.