வெளிநாடுகளில் தொழில்புரிவோர் அனுப்பும் பணத்தை, தபால் நிலையமூடாக பெற நடவடிக்கை - அமைச்சர் ஹலீம்
வெளிநாட்டில் தொழில் புரிவோர் குடும்பங்கள் வங்கிகள் மூலமே பணம் மீளப் பெறுகின்றனர். இதற்குப் பதில் தபால் நிலையம் மூலம்மீளப் பெறும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக முஸ்லிம் விவகார தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
(16.2.2015) மல்வத்தை மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள சித்தார்த்த தேரர், மல்வத்தை பீடத்தின் அனுநாயக்கத் தேரர் வண.நியங்கொட விஜித மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் ஆகியோரைச் சந்தித்து தமது எதிர்கால நடவடிக்கை தொடர்பாக அலோசணைகளைப் பெற்றுக் கொள்ளச் சென்ற போது அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வரலாற்று ரீதியாக இலங்கை முஸ்லீம்களுக்கும் சிங்கள பௌத்தர்ளுக்குமிடையே பல்வேறு தொடர்புகளும் சமூக இணக்கமும் காணப்பட்டது. 1960ம் ஆண்டு முதல் மறைந்த அமைச்சர் ஏ.சீ.எஸ்.ஹமீத் அவர்கள் அரசியலில் பிரவேசித்தது முதல் கண்டி மாவட்டத்திலும் சிங்கள- முஸ்லீம் உறவுகள் மேலும் வலுப்பட்டன. ஆனால் எதிர்பாராத விதமாக மிக அண்மித்தகாலத்தில் ஒருசிலரால் ஏதோ தப்பபிபிராயங்கள் பரப்பப்பட்டு வந்த போதும் பழைய மரபுகளை அறிந்தவர்கள் அதனைப் பெரிது படுத்தவில்லை. இருப்பினும் புதிய தலைமுறைக்கு அது பற்றித் தெரியாது. எனவே எங்கு பிழை நடந்துள்ளது என்பதை தேடிப் பிடித்து அதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது சமூகம் சாhந்த ஒரு பொறுப்பாகும். எனவே நான் மனமுவந்து ஏற்றுள்ள முஸ்லிம் சமய விவகார அமைச்சு மூலம் முஸ்லீம் சமூகங்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கு நான் முக்கிய பங்காற்றுவேன்.
எனது தொகுதியாகிய ஹாரிஸ்பத்துவ தொகுதி இன, மத, சாதி பேத மற்ற ஒரு தொகுதி, காலம் சென்ற அமைச்சர் ஏ.சீ.எஸ்.ஹமீத் அவர்கள் 39 வருடம் தொடர்நது அரசியல் செய்த தொகுதியும், அவரை அடுத்து என்னையும் அதே மக்கள் மாகாண சபை, பாராளு மன்றம் என அனுப்பிய தொகுதியாகும். அதே போல் அக்குறணைப் பிரதேச சபைத் தலைவராக இருந்து காலம் சென்ற எம்.எஸ்.எம்.சுலைமான் சிங்கள –முஸ்லிம் ஒற்றுமைக்காக பிரதேச ரீதியாகப் பங்களிப்புச் செய்த ஒருவர். இப்படிப்பலர் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் இருந்து உதயமாகி மேற்கொண்ட சேவையே இன்று வரை நிலைத்திருப்பதுடன் இன ஒற்றுமையையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.
தபால் முறையை நவீன மயப் படுத்தி அதன் சேவைகளை துரிதப் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். குறிப்பாக வெளிநாட்டில் தொழில் புரிவோர் வங்கிகள் மூலமே பணம் அனுப்பு கின்றனர். இதனை தபால் நிலையம் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு திட்டத்தை நடை முறைப் படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தபால் நிலையங்களுக்கு குறிப்பிட்ட இலாபம் கிடைப்பதோடு பொது மக்களுக்கும் தமது கிராமங்களில் இலகுவாக சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
அஸ்கிரிய மகா நாயக்கத் தேரர் நல்லாசி வழங்கும் போது மக்களுக்கு சிறந்த சேவை செய்தால் மக்கள் என்றும் எம்முடன் இருப்பர். தங்களது அரசியல் குருவான ஏ.சீ.எஸ்.ஹமீத் காட்டிய முன் மாதரி தங்களிடம் இருப்பதால் அவரைப் போன்று மேலும் பிரகாசிக்கலாம். முஸ்லிம் என்ற வகையில் இலங்கையில் மிகப் பெரிய ஒரு பதவியாக அமைச்சர் பதவியைக் கருதலாம். இருப்பினும் அதற்கு மேல் நாட்டுக்காக மேற்கொள்ளும் சேவை மிகப் பெரிதாக இருக்கும். எனவே நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு பெருந்தகையாக வேண்டுமென வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.

Post a Comment