மன்னர் அப்துல்லாஹ்வின் ஸதக்கத்துல் ஜாரியாவை, அக்கறைப்பற்று மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள்...!
சுனாமியால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டில் அல்லல்படும் எமது உறவுகளுக்கென மறைந்த சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் ’ஸதக்கத்துல் ஜாரியா’ எனும் அடிப்படையில் நன்கொடை வழங்கிய அக்கரைப்பற்று நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் இந்த நல்லாட்சியிலாவது குறித்த பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
சவூதி அரசின் நிதி ஒதுக்கீட்டில்,அண்மையில் காலமான மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் துரிதமாக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளும் யாருக்கும் பிரயோசனமின்றி இன்று பற்றைக்காடுகளாய் மாறியிருக்கின்றன.
நுரைச்சோலையில் கேட்பார் யாருமின்றி சீரழியும் இந்த 500 வீடுகளும் சவூதி மன்னராலும்,மக்களாலும்ஏழை மக்களுக்கு வழங்கவென பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு உன்னதமான ‘ஸதக்கத்துல் ஜாரியா’ ஆகும்.
எனவே, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வீடின்றி பல அவதிகளை எதிர் நோக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.
அன்று இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு கொடுக்க விடாது நீதிமன்றம் வரை சென்று முட்டுகட்டையாக இருந்தவர்கள் இன்று முஸ்லிம் கட்சிகளுடனும் தலைவர்களுடனும் தோழமையாக இருக்கின்றார்கள்.
இந்திய அரசாங்கம் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கிய 50,000 வீடுகளும் எவ்வித இடையூறுகளுமின்றி வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், சவூதி அரசின் நிதி ஒதுக்கீட்டில் 9 வருடங்களுக்கு முதல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 500 வீடுகளையும் முஸ்லிம்களுக்கு வழங்குவதில் நாங்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர் நோக்கிக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அம்பாறை நுரைச்சோலை 500 வீட்டுத் திட்டம் தொடர்பாக நான் அன்றைய அரசுடன் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தி அந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க என்னாலான முழு முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
ஆனால் அந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமயவினால் வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவினால் தனியொரு இனத்துக்கு என அல்லாது சகலருக்கும் அந்த வீடுகளை வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது
அன்று ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்தவரும் இன்றைய அரசின் முக்கியஸ்தருமான சம்பிக்க ரணவக்க இந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க விடாது பல இடையூறுகளை விளைவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது அவ்வாறிருக்க, இந்த நல்ல சகுனத்தை பயன்படுத்தி குறித்த நுரைச்சோலை 500 வீடுகளையும் முஸ்லிம் மக்களுக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியப்பாடு நிறையவே இருக்கிறது.
இதுவொரு இடைக்கால அரசாங்கமாகும். இதில் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் செயற்திறன் மிக்க அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கமைய இக்காலகட்டத்தில் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினை மற்றும் நாட்டில் முஸ்லிகளுக்கு இருக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கு முடியுமானவரை துரித தீர்வுகளை பெற்றுக் கொள்ள இக்காலகட்டத்தை எல்லோரும் பயன்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.
பாராளுமன்றம் கலைந்தால், சகல அதிகார்ங்களும் புஷ்வாணமாகி விடும். அதன் பின்னர் மக்களின் முன் மண்டியிடும் சூழல் ஏற்பட்டு விடும். ஆக, மக்களுக்கு நன்மைகள் செய்திருப்பின் மக்கள் மறுபடியும் வாக்குகளால் நன்றிக்கடன் செலுத்துவது உறுதியாகும்.
எனவே, இனவாதம் துரத்தப்பட்டு மக்கள் அபிமானம் பெற்ற ஒரு ஆட்சி நிலவும் இக்காலத்தில் நுரைச்சோலையில் பாழடைந்து கொண்டிருக்கும் 500 வீடுகளையும் உரிய மக்களுக்கு வழங்குமாறு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.
.jpg)
Post a Comment