மைத்திரியும், மஹிந்தவும் மோதுகிறார்கள்..!
-நஜீப் பின் கபூர்-
14ம் திகதி நடைபெறுகின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் குழுக் கூட்டத்தில் மைத்திரி - மஹிந்த பலப் பரீட்சை நேரடியாகவோ மறைமுகமாகவோ இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பரவலாகக் காணப்படுகின்றது.
பதவிகளுக்கு ஆட்களை தெரிவு செய்யும் நிலை வந்தால் இது பகிரங்கமாக வெளிப்படும் என்று தெரிகின்றது. இன்று நடந்த கட்சி முக்கியஸ்தர்கள் சந்திப்பில் பதவிகள் தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இணக்கப்பாடு என்ற நிலை இருந்தாலும். பதவிகளுக்கு தெரிவுகள் நடைபெறும் நிலையில் இந்த பலப்பரீட்சை தோன்றும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் ராஜிதவை முக்கிய பதவிக்கு அமர்த்த மைத்திரி தரப்பு முனைந்தால் அது மைத்திரியின் கரத்தைக் கட்சிக்குள் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்து விடும். எனவே ராஜிதவை தோற்கடித்து மைத்திரிக்கு எச்சரிக்கை விடுவதற்கும் சிலர் இரகசிய சந்திப்புக்களை நடத்தி வருவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்ற விடயம் அனேகமாக இந்தக் கூட்டத்தில் தீர்மானம் செய்வதற்கு வாய்ப்புக்கள் குறைவாக இருக்கின்றது. தேர்தலுக்குப் பின்னர் அது பற்றி தீர்மானம் என்பது மைத்திரி தரப்பு விருப்பாக இருக்கின்றது.
ராஜபக்ஷவின் பெயரை இதற்கு உச்சரிக்கவும் சிலர் தயாராக இருக்கின்றார்கள். இதனை சந்திரிகா ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். நாளைய 14.02.2015. கூட்டத்திற்கு சந்திரிகா வந்தால் நீண்ட காலத்துக்குப் பின்னர் அவர் சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக அது இருக்கும்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக கொண்டு வந்தால் கட்சிக்குள் நெருக்கடி நிலை தோன்ற இடமிருக்கின்றது. அப்படி ஒரு நிலை வந்தால் மீண்டும் மைத்திரி மாற்று நடவடிக்கைகளை எடுக்கக் கூடும்.
எப்படியும் முழுநாடும் நாளை நடைபெறும் சுதந்திரக் கட்சிக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றது.
கட்சிக்குள் ஐக்கியத்தைக் காப்பற்ற முடியுமா அல்லது தனி வழியில் போகலாமா என்ற விவரங்கள் நாளை மாலை தெரியவரும்.

Post a Comment