Header Ads



எந்த அரசியல்வாதியும் 'மலாய்க்கத்துமார்கள்' இல்லை...!

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.

பேசும் தருணத்தில் பேசாமலும், பேசாமலிருக்கும் தருணத்தில் பேசியும் முஸ்லிம் சமூகத்தை மென்மேலும் பிரச்சினை மிகுந்த சமூகமென பிற சமூகத்தில் அடையாளப்படுத்தும் விதண்டாவாதங்களில் இருந்தும், இஸ்லாத்திற்கு முரணான நடத்தைக் கோலங்களில் இருந்தும் எமது அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் துரிதமாக விடுபட்டு தூர சிந்தனையுடன் செயற்பட வேண்டும். 

நாட்டில் இன்று என்ன நடக்கிறது என மக்கள் விழி பிதுங்கித் தவிக்கின்றனர். இன்றைய அரசியல் மக்களை தீராத குழப்பத்தில் ஆழ்த்தி, ஒரு புரியாத புதிராக காணப்படுகிறது. ஒரு பக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயற்பாடுகளை நகர்த்திச் செல்கிறார், மறுபக்கம் பிரதமர் வேறு ஒரு கோணத்தில் முடிவுகளை எடுக்கிறார். இடையில் மக்கள் குழப்பிப் போய்த் தவிக்கின்றனர். 

நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார் என பிரித்தறிய முடியாத படி இன்றைய அரசியல் நிலவரங்கள் ‘அச்சாறாகி’ சேறுபடிந்து காணப்படுகிறது. ஒரு சின்னத் தீவிற்குள் இத்தனை பிளவுகளா என வெளி நாட்டு இராஜ தந்திரிகள் எம்மை நோக்கி கேள்வி கேட்கின்றனர்.

இந்த இக்கட்டான தருணத்தில் எமது முஸ்லிம் சமூகத்தினர் அவதானத்துடன் கூடிய அரசியலை முன்னெடுக்க வேண்டுமே தவிர மக்களை தூண்டிவிடும் முயற்சிகளில் இறங்கக் கூடாது. 

அண்மைய சம்பவங்கள் ’சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ எனும் பழமொழியை மெய்ப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடும்போக்குவாதிகளின் வாய்களுக்கு நாமே மென்று விழுங்க ‘அவல்’ கொடுப்பது போல அரசியல் பேசக்கூடாது. கொஞ்சக் காலம் ’அசிங்கமாகி’ அடங்கிப் போயிருந்த அடிப்படைவாதக் காவிகள் இன்று தாங்கள் சிங்கங்கள் என கர்ச்சிக்கிறார்கள். 

இதற்கு யார் காரணம்..? நன்றாக சிந்திக்க வேண்டும். யாரும் உணர்ச்சி மேலிட்டு தன் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், பேசுகின்றவர்களை அதிகம் பாதிக்கப்படப் போகின்றவர்கள் காட்டிலும் மேட்டிலும் இதர இனத்தவர்களுடன் கலந்து இருக்கின்ற எமது ஈமானிய உறவுகள் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். 

பேருவளை,தர்ஹா நகர்,அளுத்கம வன்முறைகளுக்கு இன்னும் ஒழுங்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த வீர வசனங்கள் மக்கள் மத்தியில் எடுபட மாட்டாது. தர்ஹா நகர்,மற்றும் அளுத்கமயில் ஷஹீதான எமது அன்புச் சகோதரர்களின் படுகொலைகளுக்கு இன்னும் எந்தவிதமானா சட்ட நகர்வுகளையும் முன்னெடுக்காத நிலையில், வெளிநாடொன்றில் கொள்ளையிலும் அதனோடு தொடுத்த கொலையிலும் ஈடுபட்ட இலங்கையர்கள் இருவர்களைக் காப்பாற்ற எமது முஸ்லிம் தலைவரொருவர் செல்வதாக அறியக் கிடைத்தது. உள் நாட்டில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பல தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றுக்கு முதலில் நீதியினை பெற்று விட்டு வெளி நாட்டு விவகாரங்களை பார்த்துக் கொள்வது மிகவும் சிறப்பென நான் நினைக்கிறேன்.

அரசியல் குற்றவாளிகள் மலிந்திருக்கும் நாடு இலங்கை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை எனலாம். எந்த அரசியல்வாதியும் இன்று வானத்தால் இருந்து இறங்கிய ’மலாய்க்கத்துமார்கள்’ இல்லை. குறைந்தபட்சம் எல்லோரும் குற்றங்கள் செய்திருக்கிறார்கள். 

எனவே, குற்றங்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் போர்வையில் நாங்கள் நாட்களை நகர்த்தக் கூடாது.நூறு நாள் வேலைத்திட்டத்தில் இன்னும் பல ஆரோக்கியமான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய தேவையும் கடப்பாடும் இந்த நல்லாட்சிக்கு நிறையவே இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு எட்டப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

ஒற்றுமையே எமது அசைக்கமுடியாத பலமாகும்.அன்றிலிருந்து இன்று வரை நான் இதையே பேசி வருகிறேன். எமது பாரம்பரிய தலைவர்களும் அதனையே எமக்கு போதித்து தந்து விட்டு மறைந்திருக்கிறார்கள். 

எனவே அன்புள்ள நண்பர்களே, பொறுமையோடும் தூர நோக்கோடும் சிந்தித்து எமக்காகவும் எமது எதிர்கால சந்ததியினருக்காகவும் ஆரோக்கியமான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, முஸ்லிம் சமூகத்தின் நலன்களை மென்மேலும் வெற்றிக் கொள்ள ஒற்றுமையாய் கரம் கோர்ப்போம்.

1 comment:

  1. அப்படியானால் நீங்க ஜின்னா?

    ReplyDelete

Powered by Blogger.