மீண்டும் ஓர் அமாலி உயிர்மாய அனுமதியோம்..!
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி)
-மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகம், சவூதி அரேபியா-
அண்மையில் இலங்கையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதை செய்யப்பட்ட நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டு தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஊடகங்களில் பிரதான இடத்தை பிடித்திருந்தமை நாமனைவரும் அறிந்ததே!
சமூகத் தளத்தில் பண்பாட்டு விழுமியங்களை கற்றுக்கொடுக்க வேண்டிய பாடசாலைகள், தனியார் வகுப்புக்கள், கல்லூரிகள், கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் என கல்விப் போதனை செய்யக்கூடிய நிலையங்களில் பகிடிவதை என்ற போர்வையில் அரங்கேறும் அநாகரிகங்கள் படித்தவர்களுக்கு பொருத்தமானதா? என்ற கேள்விக்கான விடை புரியாத புதிராகவே இருக்கின்றது.
பொதுவாக 'பகிடி' என்ற சொல் மனித மானத்துடன் அவனது சுய ஆளுமையுடன் கட்டவிழ்த்துவிடப்படுகின்றதோர் கடுஞ்சொல்லாகும். அது மட்டுமல்லாது மனித உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி குடிக்கின்ற உயிர்க்கொள்ளியாகும். இவ்வாறு பாதி;க்கப்படுகின்ற மாணவர்கள் பலர் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டது தாங்காது தனது தைரியமற்ற உள்ளத்தினை திடப்படுத்தாது தன் கல்வியை இடை நிறுத்தவோ அல்லது முற்றுப் புள்ளி இடவோ முற்படுகின்றனர்.
தவிர இவ்வாறான நிகழ்வுகளினால் தங்களது மானம் மறியாதைகளை மானசீகரீதியாக மதிக்கின்றவர்கள் அதற்கே களங்கம் ஏற்படுவதாக கருதுகின்ற பட்சத்தில் விரக்தியின் விளிம்;பு நிலைக்கு சென்று தம் உயிர்களை மாய்த்துக்கொள்கின்ற ஈனச்செயல் வரை முன்னேறுவதை நாம் அறிகின்றோம்.
பல கஷ்டங்களைத் தாண்டி பகலிரவு விழித்திருந்து பெற்றோர், உற்றார், நண்பர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இவ்வாறான முடிவுகளைத் தேடிக்கொள்ளும் இவர்களின் சாபம் யாரைச் சென்றடையும்?
மேலும் வதை என்ற சொல் நோகடித்தல், துன்புறுத்தல், சித்திரவதை செய்தல் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற போதிலும் அதுபற்றி சிந்திப்பதற்கு எமது உள்ளம் அவகாசம் கொடுப்பதில்லை. பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை 'மிருக வதை' கூடாது என பதாதைகளை தூக்கி பாதை ஓரங்களிலும் பாராளுமன்றங்களிலும் போராடுகின்ற நிலையில் மனித வதைகளுக்கு எதிராக சட்டத்தை கையிலெடுக்காது சம்பந்தப்பட்டவர்கள் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை எங்கே சென்று முறையிடுவது? இவ்வாறு பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்ற உள்ளங்கள் ஏராளம்! ஏராளம்!
முன்பொரு காலம் பகிடிவதை கூச்ச உணர்வை நீக்கி பின்வாங்கும் இயல்பினை மாற்றி சமூகமயமாதலினை இலக்காகக் கொண்டு அமுல்ப்படுத்தப்பட்டு வந்தது என நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. அன்று இதனை ஒரு வகையில் ஏற்றுக்கொண்டாலும் இன்று அதன் படிமுறைகளில் பாதகமான செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதனை யாரும் மறுக்க முடியாது.
புனித இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்களும் ஈமானிய பலவீனம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இவ்வாறான அநாகரீக காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதுதான் எம்மை கவலையில் ஆழ்த்துகிறது. தாம் படிக்கின்ற கல்விச் சூழலில் தமது அழகிய முன்மாதிரியால் மாற்று மதத்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தின் தூதை கொண்டு செல்ல முற்படாது தனது இழி நடத்தைகளினால் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தவறான பதிவுகளை இடுவதுதான் துரதிஷ்டமான ஒரு விடயமாகும்.
இத்தகையவர்கள்; பின்வரும் அல்-குர்ஆன் வசனத்தை தமது சிந்தனைக்கு எடுப்பது பொருத்தம் எனக் கருதுகிறேன்.
'எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்கு பிரதியாகவோ அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தினை தடை செய்வதற்காகவோ தவிர அநியாயமாக மற்றொருவரை கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார். (சூரா மாயிதா-32)
இன்று பகிடிவதை என்ற போர்வையில் வார்த்தைகளால் மாத்திரமன்றி அத்துமீறி அடி தடி என உடல்ரீதியான வதைகளையும் விதைக்கும் மனித அரக்கர்களும் இருப்பதுதான் கசப்பான உண்மையாகும்.
புகிடிவதைகள் இடம்பெறுவதற்கு பல காரணங்கள் இருந்த போதும் அவற்றுள் பின்வருபவற்றை முதன்மைப்படுத்தலாம்.
1. பகிடி என்ற வார்ததையின் அர்ததம் விளங்காது அதன் தாக்கத்தினை தன்னளவில் வைத்து சிந்திக்காமை.
2. தனக்கு முன் சென்றோரின் செயற்பாட்டை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றமை.
3. தன் ஏற்கனவே பகிடிவதையால் பாதிக்கபட்டமை காரணமாக பழி தீர்க்கும் எண்ணத்தில பிறர் துன்பத்தில் இன்பம் பெற நாடுகின்றமை
4. தன் சகபாடிகளின் தவறான கருத்துக்களும் தூண்டுதல்களும்.
5. தமது சமய சமூக காரணிகளை மதிக்காமை போன்ற இன்னும் பல காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இஸ்லாம் ஒரு படி மேலே சென்று மனித தொடர்பாலைப் பற்றி பிரஸ்தாபிக்கின்றது. அது மனிதனது அடிப்படை உரிமையுடன் இணைந்த சகல உரிமைகளையும் உலகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
'விசுவாசிகள் ஒரு கூட்டத்தார் பிரிதொரு கூட்டத்தாரை இழிவாக கருத வேண்டாம். ஏனெனில் இழிவாக கருதிய இவர்களை விட இழிவாக்கப்பட்ட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்ற பெண்களை இழிவாக கருத வேண்டாம். ஏனெனில் இழிவாக கருதிய இவர்களை விட இழிவாக்கப்பட்ட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம. இன்னும் உங்களிடையே குறை கூறிக்கொண்டிருக்க வேண்டாம். (அன்றியும் கெட்ட புனைப் பெயர்களைக் கொண்டு (ஒருவருக் கொருவர் பட்டப் பெயர்) சூட்டிக் கொள்ளாதீர்கள். ஈமான் கொண்ட பின்னர் தீய பெயரா(ல் அழைப்பதா)னது மிகக் கெட்டதாகும்.' (சூரா ஹூஜராத்-11)
எனவே இஸ்லாத்தின் போதனைகளை உள்வாங்கி அதனை நடைமுறைப்படுத்தி இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றவர்களாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹூத்தஆலா சூரா மாயிதாவின் அதே 32 வது வசனத்தில் 'எவர் அதனை (ஆத்மாவை) வாழ வைக்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்' என ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்வு எமது நன்னடத்தையில் உள்ளதாக தெளிவுபடுத்துகிறான்.

இவரின் மரணத்திற்கான காரணமானவர்களை சட்டத்தின் முன் நிருத்த வேண்டும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
ReplyDelete