Header Ads



மஹிந்த ராஜபக்ஸ, தனது வீட்டிலிருந்து என்ன செய்கிறார்..? (நேரடியாக கண்டது)

இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்டன் இல்லத்துக்கு தினசரி அவரைப் பார்க்க வருகை தரும் மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி அவரைக் காண மக்கள் குழுக்களாக பஸ்களில் வருகை தருகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்த ஒரு தலைவர் அவர். நிச்சயமாக போரை வெற்றி கொண்டதுக்கான பெருமையை கோருவதற்கான ஒரு தலைவர் அவர்தான், அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மணித்தியாலங்களுக்குள் மக்கள் மஹிந்தவை ஒரு சாதாரண பிரஜையின் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

ஐந்தாவது ஜனாதிபதி பதவியிலிருந்து, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் ஓய்வுபெற வேண்டியவரானார். இதுதான் அரசியல் இயல்பு. வழக்கம் போல தோல்வி எங்களுக்கு பல முக்கிய பாடங்களைப் போதிக்கிறது. கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கையில் பிரபலமாக அவர் திகழ்ந்துள்ளார். அலரி மாளிகையில் வசித்தபடி தன்னை சுற்றி மக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் புடைசூழ உலகை வலம் வந்து கொண்டிருந்தார். தோல்வியடைந்து ஒரு மாதத்தின் பின்னர் அவர் தனது ஓய்வை எப்படிக் கழிக்கிறார் என்பதைக் காண்பதற்காக தங்காலையில் இருந்த அவரிடம் விஜயம் செய்தோம்.

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது தன்னை ஒரு சாதாரண கிராம வாசி என்று கூறிய அவருக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் மரியாதைக்கு ஆதாரம் தேவையானால் நிச்சயமாக ஒருவர் வார இறுதி நாட்களில் தங்காலைக்கு வருகை தர வேண்டும். கொழும்பிலிருந்து காள்ட்டனுக்கு திரும்பி வந்த முதல்நாள் மக்கள் அழுது கொண்டு அவரது வீட்டுக்கு முன்னால் குவிந்தார்கள். அதனால் அவர் தனது வீட்டின் ஒரு ஜன்னலின் அடித்தட்டின் மேல் ஏறி நின்று அவர்களுடன் பேச வேண்டியதாயிற்று. இன்னும் கூட வார இறுதி நாட்களில் சுமார் 50 பேரூந்துகள் நிறைந்த மக்கள் அவரைக் காண்பதற்காக தங்காலைக்கு வருகிறார்கள்.

நாட்டின் நான்கு மூலைகளிலும் இருந்து வருகை தருபவர்களுக்காக இப்போது அந்த வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது.நீங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். இல்லையென்றால் நாங்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டோம். காள்ட்டனுக்கு வருகை தந்த வயதானவர்கள் சொல்கிறார்கள். அதேவேளை மற்றொருவர் உங்கள் எதிரிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கை செய்தோம். ஆனால் நீங்கள் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்.

மஹிந்த மனமுடைந்து போயிருக்கலாம். ஆனால் காள்ட்டன் பங்களாவில் ஒரு சாய்மானக் கதிரையில் சாய்ந்தவாறே மக்களை வரவேற்பது, நேரத்துக்கு நேரம் அவரை வணங்கும் வயதான பெண்களின் தலையை தடவுவது மற்றும் குழந்தைகளை முத்தமிடுவது போன்ற செயல்களை அவர் செய்வதைக் காணமுடிகிறது. இப்போது உங்களுடன் பேசுவதற்கு எனக்கு நேரமுள்ளது. முன்னர் எனக்கு நேரமிருக்கவில்லை. இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. சுதந்திரமாக இருப்பது அற்புதமாக உள்ளது. எந்த நேரத்திலும் வாருங்கள் என்னுடன் பேசலாம் என்று அவர் மக்களிடம் சொல்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை எப்போதும் மக்கள் சூழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதும் அது அப்படித்தான் உள்ளது. அவர் தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை. அவர்தனது ஜீப் வண்டியில் தனது நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்கிறார். கடந்த காலத்தில் செய்ததைப் போல அவர் கடலில் குளிக்கிறார். எந்த வித பாதுகாப்புமின்றி தங்காலை நகரில் நடந்து செல்கிறார் இப்படித்தான் அவரது அயலவர்கள் அவரது ஓய்வைப் பற்றி வர்ணிக்கிறார்கள்.

தான் அரசியலில் இருந்து வெளியேறப் போவதில்லை மற்றும் எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாகச் சொல்லி அவர் வாக்காளர்களைத் திருப்தி செய்கிறார். மக்களின் முடிவில்லாத கேள்விகளுக்கு திறந்த மனதுடன் மஹிந்த பதில் சொல்கிறார். கடந்த காலங்களில் நான் உதவி செய்த பணக்கார வியாபாரிகள்தான் என்னை காண வருவார்கள். இப்போது சாதாரண மக்கள் என்னைக் காண வருகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமானவர்கள். நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அரசியல் ரீதியாக என்னைப் படுகொலை செய்ய முடியாது. எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமானால் அவர்களின் முகத்துக்கு நேராக நான் பதில் சொல்வேன்.

அவர் தனது வேதனைகளை மக்களின் முன்னால் விளக்கிறார். அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்த போது நான் அவரை ஏசியதாக சந்திரிகா சொல்கிறார். அவர் என்னுடன் பேசவேயில்லை. மூன்று தடவைகள் அவருக்கு நான் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினேன். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது. அவர் மக்களுடன் கலந்து அவர்களுடன் சுதந்திரமாக பேசிக் கொண்டிருந்ததால், தங்காலையில் உள்ள அவரது காள்ட்டன் பங்களாவை விட்டு நாங்கள் அமைதியாக வெளியேறினோம்.

வாசனா மற்றும் சுனந்தா (தமிழில் எஸ். குமார்)

1 comment:

  1. பதவியிலிருந்தபோது கொடூரமானவர்களுக்கு அழிச்சாட்டியம் புரிய இடம் கொடுத்தையெல்லாம் இன்று அவர் தோல்வியடைந்ததும் ஓய்வுகொள்ளும் முறையை வைத்து மறந்துவிடத்தான் முடியுமா என்ன..?

    ஹிட்லரின் இறப்பும் ஒருவித தன்னிரக்கமானதுதான். அதற்காக அவர் ஆணையிடும் நிலையில் இருந்தபோது புரிந்த கொடூரங்களை மன்னிக்க முடியுமா..?

    மக்கள் நமது பலவீனத்தை வைத்து அரசியல் நடாத்தும் கபட எண்ணம் மகிந்தவுக்கு நிறையவே உள்ளது.

    ஆற்றுமுதலை அகிம்சை பேசினால் நமது ஆட்டுக்குட்டிகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

    ஆம், சகலரும் எச்சரிக்கையாக இருந்தாக வேணடிய தருணமிது.

    ReplyDelete

Powered by Blogger.