மைத்திரி பற்றிய நல்லெண்ணம், ஜெனிவாவில் மஹிந்தாவுக்குக் கவசமாகுமா..?
-நஜீப் பின் கபூர்-
மூன்று தசாப்தங்களுக்கு மேல் நீடித்த போருக்கு 2009 ல் முற்றுப் புள்ளி வைத்து, அந்தப் பிரிவினைப் போராட்டத்திற்குத் தலைமைத்துவம் கொடுத்த விடுதலைப் புலிகளின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தீர்த்துக் கட்டியதால் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஹீரோ அந்தஸ்து. சிலர் அவரை துட்டகைமுனு மன்னனின் மறு அவதாரமாகக் கூட எடுத்துப் பேசினார்கள்-பார்த்தார்கள். இந்தச் செல்வாக்கு ராஜபக்ஷக்கள் குறைந்தது இந்த நாட்டில் கால் நூற்றாண்டுகளாவது அரசியல் அதிகாரத்தில் நீடித்து நிலைத்திருக்க வாய்ப்பைக் கொடுக்கும் என்று பரவலாக எதிர் பார்க்கப்பட்டது.
இலங்கை அரசியலில் தனக்கு எதிராக கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பலம் வாய்த அரசியல் எதிரிகள் எவரும் கிடையாது என்று ராஜபக்ஷக்கள் நம்பிக்கையாக இருந்தது. அரசியலில் தனது பணயம் தனிக் குதிரை ஓட்டம் என்பது அவர்களது எண்ணமாகவும் இருந்தது. உள்நாட்டில் அப்படியானதொரு பின்புலமே இருந்து வந்தது என்பதும் யதார்த்தம். எனவே பதவியைத் தொடர யாப்பு குறுக்கே வந்து நின்றதால், ராஜபக்ஷ அரசியல் யாப்பில் கைவைத்தார். அதில் தனக்குத் தேவையானவாறு திருத்தங்களையும் கொண்டு வந்து மூன்றாவது முறையாகவும் பதவியில் அமர எண்ணினார் மஹிந்த.
தனது அரசியல் இருப்பு மிக உறுதியாக-வலுவாக இருக்கின்றது என்று கணக்குப் போட்ட ராஜபக்ஷ, தனக்குப் பிறகும் இந்த நாட்டின் ராஜபக்ஷக்கள் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக தனது அரசியல் வாரிசாக மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவையும் அதற்காகத் தயார் பண்ணி அதிகார ஆசனத்தில் நிறுத்த பல நடவடிக்கைகளை செய்து வந்தார். இது எந்தளவுக்கு அட்டகாசமாக இருந்தது என்றால், ஆளும் தரப்பில் இருந்த மூத்த அரசியல்வாதிகள்கூட சின்னப் பையன் நாமலிடத்தில் தலைகுனிந்து நின்றார்கள். தமது இந்த நிலை பற்றி இப்போது அவர்கள் பகிரங்கமாகவே பேசி வருகின்றார்கள்.
இப்படியான நம்பிக்கைகள் செல்வாக்குகளை நம்பி இரண்டு வருடங்கள் முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை செய்தார். தேர்தல் களத்தில் தனக்கு எதிரான போட்டியாளராக தனது செயலாளரே களத்தில் குதித்ததால் ராஜபக்ஷ அதிர்ந்து போனார். என்றாலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் தனது பக்கமே இருப்பார்கள். அத்துடன் அரசியல் பலமும், பணமும், கூடவே அரச ஊடகங்கள், மற்றும் கனிசமான தனியார் ஊடகங்களும் தனது பிடியில் இருப்பதால் ராஜபக்ஷ இந்த முறையும் போட்டி இருந்தாலும் இறுதி வெற்றி தனக்கே, சிங்கள சமூகம் தன்னைக் கைவிடாது என்று நம்பி இருந்தார்.
மக்கள் தீர்ப்பு ராஜபக்ஷக்கு மாற்றமாக அமைந்தது. எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தகர்ந்த நிலையில் படையினர் தரப்பின் துணையுடன் பதவியை நீடித்துக் கொள்ள முடியுமா என்று கூடிப் பேசிப் பார்த்தால், அது கூட சரிப்பட்டு வராது என்ற நிலையில் மனிதன் மாளிகையிலிருந்து வெளியேறி இருக்கின்றார். இப்போது சட்ட ரீதியில் பதவிக்கு வந்த அரசுக்கு அதிகாரங்களைக் கையளிக்காது தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டு. இப்போது அந்த சதி விவகாரம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றது.
2010 க்குப் பின்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் ராஜபக்ஷக்கள் மக்களிடத்தில் மின்சாரக் கதிரை பற்றிய கதைகளைச் சொல்லி, அதன் மூலம் அனுதாப வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்து வந்திருக்கின்றார்கள். 2015 வரை அந்த முயற்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்று வந்திருக்கின்றார்கள். 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்ஷவும் அவரது கையாட்களும் தேர்தலில் தோற்றுப்போனால் ஜெனிவாவுக்குத் தன்னை இழுத்துக் கொண்டு போய் விசாரிப்பார்கள் என்று ஒப்பாறி வைத்துப் பார்த்தார்கள்.
ராஜபக்ஷவினதும் அவர்களது கையாட்களினதும் இந்தப் பிரசாரம்-ஒப்பாரி தேர்தலில் எந்தத் தாக்கங்களையும் செலுத்தியதை காண முடியவில்லை. வழக்கத்திற்கு மாறாக கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலை விட சிங்கள மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதிகளில் கூட பல்லாயிரக் கணக்கான வாக்குகள் அதிகமாக இந்த முறை எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிக்குக் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜபக்ஷவுக்கு இருந்த ஹீரோ அந்தஸ்த்தும் தற்போது பறிபோய் இருக்கின்றது.
இப்போது ராஜபக்ஷக்கள் பல்லிழந்த சிங்கமாக உள்நாட்டில் இருந்தாலும், அவர் மூலம் தமக்குப் பாராளுமன்றக் கதவுகளைத் திறந்து கொள்ள முனையும் வங்குரோத்துக் அரசியல் கட்சிகளை வைத்திருக்கும் விமல் வீரவன்ச, வாசுதேவ நணயக்கார, தினேஷ் குனவர்தன, உதய கம்மன்பில போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் எவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அல்ல என்பது குற்றிப்பிடத்தக்கது.
உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் அப்படிப்போய்க் கொண்டிருக்கின்ற போது. ஜெனிவா சீசன் தற்போது துவங்க இருக்கின்றது. எனவே ராஜபக்ஷ ஜனாதிபதி ஆசனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும் ஜெனிவாவில் அவருக்கு எதிரான போர்காலக் குற்றங்கள் என்ற விவகாரம் இன்னும் குப்பைக் கூடைக்குள் போய்விட வில்லை. அது விசாரணை என்ற நிலையில்தான் இருக்கின்றது. இந்தக் கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கின்ற நேரம் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் தரப்பில் கருத்துத் தெரிவிக்கும் பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக், ராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் அவர் மீதான போர்க் குற்றங்கள் விசாரணை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
2010 க்குப் பின்னர் போர் காலக் குற்றங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்ட போது அவற்றை ராஜபக்ஷ அரசு காதில் போட்டுக் கொள்ளவோ கண்டு கொள்ளவோ இல்லை. 2014 மார்ச் கூட்டத் தொடரில் இலங்கையில் நடந்த போர் காலக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமையகள் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் 2012, 2013, 2014, களில் போர் காலக் குற்றங்கள் தொடர்பான ஜெனிவாவில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 2012ல் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பில் பூச்சாண்டி காட்டி ஜெனிவா நடவடிக்கைகளை திசை திருப்ப முனைந்தது. இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு அன்று ஜெனிவா மனித உரிமைகள் அமைப்புக்கூட ஏமாந்து தோற்றுப் போய் விட்டது என்பதுதான் கட்டுரையாளன் கணக்கு. இதனை நம்பிய மனித உரிமைகள் அமைப்புக்கூட கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான சிபார்சுகளை அமுல்படுத்துமாறு அன்று இலங்கையைக் கேட்டுக் கொண்டது. இலங்கையே தயாரித்த இந்தக் குறைந்த பட்ச நடவடிக்கைகளைக்கூட அரசு அன்று அமுல்படுத்த முனையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ராஜபக்ஷ இருந்த கதிரையில் அவருடைய அரசியல் எதிரியாக கடந்த தேர்தலில் போட்டிக்கு வந்த மைத்திரி அமர்ந்து இருக்கின்றார்.தற்போதய நாட்டில் இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் விடயத்தில் மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் கூட இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் வருகின்ற மார்ச் 26, 27, திகதிகளில் நடைபெற இருக்கின்ற மனித உரிமைகள் அமைப்பில் 28 வது கூட்டத் தொடரில், மனித உரிமைகள் அமைப்பின் செயலகத்தினால் இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்ட போர்காலக் குற்றங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது என்று தெரியவருகின்றது. இந்த அறிக்கையில் இலங்கை இராணுவமும் புலிகளும் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்கள் அடங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. என்றாலும் நாட்டுக்கு வெளியில் இருந்து இந்தத் தகவல்கள் திறட்டப்பட்டதால் அறிக்iயில் அடங்கி இருக்கின்ற விடயங்கள் தொடர்பான நம்பகத் தன்மையில் பல சந்தேகங்கள் இருக்கின்றது.
இன்று நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற அரசு மக்களுக்குக் கொடுத்த 100 நாள் வாக்குறுதி விடயத்தில் தனது கவனத்தை முழுதாக செலுத்திக் கொண்டிருக்ன்ற ஒரு சந்தர்ப்பம். அத்துடன் வருகின்ற ஜூன் பொதுத் தேர்தலில்தான் ஒரு நிலையான ஆட்சி இந்த நாட்டில் அமைய இருக்கின்றது. எனவே 2015 செப்தெம்பர் வரை இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதைத் தாமதப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இந்த பின்னணியில்தான் தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்ற அறிவிப்புப் வெளியாகி இருக்கின்றது.
இந்த அறிக்கை சொல்கின்றபடி வெளியிடப்பட்டு அதில் ராஜபக்ஷ மீதும் இராணுவ அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படால் வருகின்ற பொதுத் தேர்தல் மேடைகளில் அதுதான் பேசு பொருளாக அமையும். இதனால் ராஜபக்ஷக்கள் மீது மக்களிடத்தில் அனுதாபங்கள் ஏற்பட்டு மீண்டும் ராஜபக்ஷக்கள் அரசியல் ரீதியாக எழுர்ச்சிபெறவும் ஏதுவாக அமைய இடமிருக்கின்றது. எனவே மைத்திரியில் சர்வ கட்சி அரசு என்ற எண்ணக்கரு இதனால் தவிடுபொடியாகவும் இடமிருக்கின்றது. இன்று உலக அரங்கில் தோன்றி இருக்கின்ற உக்ரைன், மற்றும் ஐரோப்பாவில் முஸ்லிம் அடைப்படைவாதிகளின் பெயரால் நடாத்தப்படுகின்ற வன்முறைகள், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பலப்பரீட்சை போன்ற விடயங்கள் மேற்கு நாடுகளுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற நிலையில் இலங்கை விவகாரத்தில் அவை குறிப்பிவது போல் இன்னும் கடும் போக்குடன் நடந்து கொள்ள முடியுமா என்ற நிலை அவற்றிற்கு ஏற்பட்டிருக்கின்றது.
மேலும் கடந்த 2014 இருந்த நிலையை விட உலக நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிக் கொள்ள முனையும் தற்போதய இலங்கை அரசுக்கு இந்த நாடுகள் போர் காலக் குற்றங்கள் தொடர்பில் கடும் போக்கை மேற்கொண்டு ராஜபக்ஷாக்களை மீண்டும் உள்நாட்டில் ஹீரோக்களாக வளர்த்து விடுகின்ற நடவடிக்iகைகளை மேற் கொள்ளுமா என்றும் எண்ணத்தோன்றுகின்றது. இதற்கிடையில் தற்போதய அரசம் ராஜபக்ஷவுக்கோ இராணுவத்துக்கோ சர்வதேச விசாரணை என்ற விடயத்தை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதுடன், உள்நாட்டில் நியாயமான விசாரணையொன்றை நடாதத் தயாராக இருப்தாவும் புதிய அரசு அறிவித்திருக்கின்றது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள் போர்கால குற்றங்கள் என்ற விடயத்தை வைத்து எவ்வளவு தூரம் அழுத்தங்களை பிரயோகிக்கும் என்றும் கேட்கத்தோன்றுகின்றது இப்படிப் பார்க்கின்ற போது இந்த முறையும் ராஜபக்ஷவுக்கு காலம் கை கொடுத்திருக்கின்றது. மைத்திரி வெற்றி மஹிந்தவுக்கு ஜெனிவாவில் போர்க்குற்றங்கள் விவகாரத்தில் வெற்றியாக அமைந்து விட்டதோ என்பதனைப் பார்க்க இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டி இருக்கின்றது. எமது இந்த வாதத்திற்கு ஆதாரமாக அமெரிக்கா பிரதிநிதி நிஷா பிஸ்வாசிடம் தமிழர் தேசிய கூட்டமைப்பு போர்காலக் குற்றங்கள் தொடர்பான யோசனைகளை இந்த முறை ஜெனிவா அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு அவர் இசைவாகப் பதில் வழங்கவில்லை.
கடந்த 10ம் திகதி நிவ்யோர்க் டைம்ஸ் சிறிது காலத்திற்கு இந்த அறிக்கையை வெளியிடுவதை ஜெனிவா மனித உரிமைகள் அமைப்புத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கருத்துப்பட செய்தி வெளியிட்டு இருக்கின்றது. என்றாலும் இப்படியாக இந்த விவகாரத்தில் மென்போக்கை கடைப்பிடிப்பது காலத்தால் ராஜபக்ஷக்களுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் இயற்கை மரணம் எய்தி விடவும் தாராளமாக இடமிருக்கின்றது என்று வாதிடுவோரும் இருக்கின்றார்கள்.
.jpg)
Post a Comment