Header Ads



எகிப்தில் 183 இஹ்வானிய உறவுகளுக்கு, மரண தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்

பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்ததாக குற்றச் சாட்டுக்கு உள்ளான தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் 183 ஆதரவாளர்கள் மீதான மரண தண்டனையை எகிப்து நீதிமன்றம் நேற்று 02-02-2015  உறுதி செய்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஜனாதிபதி முஹமது முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் கர்தசா நகரில் 16 பொலிஸ் அதி காரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலேயே இத்தனை பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த டிசம்பரில் 188 பேர் மீதான பூர்வாங்க தீர்ப்பை நீதி மன்றம் வழங்கி இருந்தது. நேற்றை தீர்ப்பில் இருவர் மீதான குற்றச் சாட்டுகள் அகற்றப்பட் தோடு மேலும் ஒருவரது தண்டனை 10 ஆண்டு சிறையாக குறைக்கப் பட்டது.

மேலும்; குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இருவர் ஏற்கனவே இறந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்ட இந்த மரண தண்டனை தீர்ப்பு எகிப்தில் ஒரே நேரத்தில் பாரிய எண்ணிக்கையிலானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது சம்பவமாக பதிவானது. மனித உரிமை அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் வெளியிட்டன.

முன்னதாக 2014 ஏப்ரலில் எகிப்தில் 683 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதித்தது சர்வதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

No comments

Powered by Blogger.