Header Ads



எங்களுடன் சண்டையிட விரும்பினால், அடுத்த தாக்குதலை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருங்கள் - அல்கொய்தா

''சர்ச்சைக்குரிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, எங்களுடன் சண்டையிட விரும்பினால், அடுத்த தாக்குதலை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருங்கள்,'' என, வளைகுடா நாடுகளுக்கான அல் கொய்தா இயக்க தளபதி ஹரித் அல் நாதாரி எச்சரித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை, அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 'சார்லி ஹெப்டே' பத்திரிகை அலுவலகத்தை தாக்கி, 12 பேர் உயிரைப் பறித்த சயீது சகோதரர்கள், தம்மார்டின் என்கோல் என்ற சிறிய நகரில் உள்ள அச்சகம் ஒன்றில் புகுந்து, அங்கிருந்த கிடங்கு மேலாளரை பிணைக்கைதியாக பிடித்தனர். இதன்பின், அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தி சயீது சகோதரர்களைக் கொன்றனர்.

சயீது சகோதரர்கள் அச்சகத்தில் நுழைந்த நேரத்தில், அங்கிருந்த லிலியன், 26 என்ற கணினி வரைகலை நிபுணர் தப்பித்து, மேல்மாடியில் உள்ள கேன்டீனில், பாத்திரங்கள் கழுவும் தொட்டிக்கடியில் மறைந்து கொண்டுள்ளார். அத்துடன், அங்கிருந்தபடி, அவர் தன் மொபைலில், ஆயுததாரிகளின் உரையாடலை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பியுள்ளார்.

அதன் அடிப்படையிலேயே, அதிரடிப் படையினர், திடீரென அச்சகத்தில் நுழைந்து, சயீது சகோதரர்களை சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதேபோல், வின்சன் பகுதியில், கோஷர் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த ஆயுததாரி காலிபெலி, நான்கு பேரை சுட்டுக் கொன்று விட்டு, ஐந்து பேரை பிணைக்கைதியாக பிடித்துக் கொண்டார்.

அப்போது, மூன்று வயது சிறுவன் உட்பட, ஐந்து பேர் தப்பித்து பெரிய குளிர் பதனப் பெட்டிக்குள் ஒளிந்து கொண்டுள்ளனர். குளிரை தாங்க முடியாமல் தவித்த சிறுவனுக்கு, அவனது தந்தை தன், 'கோட்'டை கழற்றி போர்த்தி உள்ளார். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, அந்த பெட்டியில் அவர்கள் முடங்கி கிடந்தனர். அதே சமயம், அவர்கள் காலிபெலியின் நடவடிக்கைகள் பற்றி, வெளியில் இருந்த போலீசுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்தனர். இதுவும், போலீசுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது.

இதற்கிடையில், காலிபெலியும் ஒரு தவறு செய்துள்ளார். பத்திரிகை அலுவலகத்திற்கு மொபைலில் தொடர்பு கொண்ட அவர், சயீது சகோதரர்களை தாக்கினால், தான் பிணைக்கைதிகளை ஒவ்வொருவராக கொல்லப் போவதாக கூறி மிரட்டி உள்ளார். இந்த பேச்சின் முடிவில், அவன் மொபைல் போன் இணைப்பை துண்டிக்க மறந்து விட்டார்.

இதுவும், அவனது நடவடிக்கையை அதிரடிப் படையினர் மோப்பம் பிடிக்க உதவியுள்ளது. சரியாக, மாலை, 5:00 மணிக்கு, தொழுகை செய்வதற்காக, காலிபெலி மண்டியிட்டு அமர்ந்து போது, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்த அதிரடிப்படையினர், பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து, காலிபெலியை சுட்டுக் கொன்றுள்ளனர். இருப்பினும், காலிபெலியின் காதலி ஹயத் பொமிடின் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அதிரடிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாரீஸ் நகரில் இரண்டு நாட்களாக நடந்த இந்தச் சம்பவங்களில், எட்டு பத்திரிகையாளர்கள், இரண்டு போலீசார், பொதுமக்களில் நான்கு பேர் மற்றும் மூன்று ஆயுததாரிகள் என, 17 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, 'சார்லி ஹெப்டே' பத்திரிகை மீதான தாக்குதலுக்கு, ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இதுதொடர்பாக, 'அசோசியேட்டட் பிரஸ்' நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், 'முகமது நபியை அவமரியாதை செய்ததற்கு, பழி வாங்கவே இந்த நடவடிக்கை. மறைந்த ஒசாமா பின்லேடன் கூறிச் சென்றபடி, இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் எந்த செயலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். பாதுகாப்பு காரணங்கள் கருதி, சார்லி ஹெப்டே தாக்குதலுக்கு காலம் தாழ்த்தி பொறுப்பேற்றுள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை பேரணி: பயங்கரவாதத்தை கண்டித்து, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பேரணி, பாரீசில் இன்று நடைபெறுகிறது. இதில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொள்ள உள்ளார். மேற்கத்திய நாடுகள் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் வடகொரியா, கியூபா ஆகிய நாடுகளும், பிரான்ஸ் தாக்குதலை கண்டித்துள்ளன. இஸ்ரேலும், ஈரானும் எதிரெதிர் துருவங்களாக உள்ள போதிலும், இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.