Header Ads



எமது சமூகத்தை கறிவேற்பிலையாக பயன்படுத்திவிட்டு, வீசி எறிந்ததை நாம் உணர்ந்து கொண்டோம்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான றிஷாத் எம்பி ஆற்றிய உரையின் தொகுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில் அவருடன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும். இனவாத அமைச்சர்கள் என்னைப்பற்றிய விஷமத்தனமான பிரசாரங்களையும் அபாண்டமான பழிகளையும் அவதூறுகளையும் சுமத்தி வருகின்றனர்.

அதேபோன்று அற்ப பதவிக்காக அரசுடன் ஒட்டுண்ணிபோல் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஊதுகுழலாக செயற்பட்டு வருகின்றனர். முஸ்லிம் சமூதாயத்தின் நலன் கருதியே அகில இலங்;கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணிக்கு ஆதவளிக்கின்றது. எனினும் விஷமத்தனமான பிரசாரங்கள் மூலம் என்னையும் என்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களையும் பிரிக்க எத்தனிக்க சில சதிகாரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

சொகுசு வாழ்க்கைக்கோ பட்டம் பதவிகளுக்கோ நான் ஆசைப்பட்டிருந்தால் அமைச்சர் பதவியையும் அதிகாரங்களையும் வசதி வாய்ப்புகளையும் தூக்கியெறிந்துவிட்டு பொது எதிரணியில் இணைந்திருக்க மாட்டேன்.

அகதி முகாமில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம் காலப்போக்கிலே பல்லாயிரக்கணக்கில் பெருகி இன்று பாரிய விழுதுகளுடன் பலமான ஓர் இயக்கமாக வேர் ஊன்றி நிற்கின்றது. இறைவனின் துணையால் குறுகிய காலத்தில் நாம் பெற்ற வளர்ச்சியும் அதனால் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களையும் கண்டு காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் தடுமாறி நிற்கின்றன. என்னை அரசியல் அரங்கிலிருந்து ஓரம் கட்டிவிடலாம் என சிலர் பகற்கனவு காண்கின்றனர். நான் தனி மனிதனாக பொது எதிரணியில் இணையவில்லை. ஒரு பலமான சக்தியாகவே நாம் எதிரணியுடன் இணைந்தோம். அதன்பின்னர் தான் அரசியல் அரங்கில் திடுதிப்பென பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற அறிவிப்பு வெளியான பின்னரே பல அரசியல்வாதிகள் விழிப்படையத் தொடங்கினர். அவர்களது அரசியல் பயணத்தில் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. பொதுபலசேன, இராவண பலய போன்ற இனவாத சக்திகளின் அட்டூழியங்களால் அரசின்மீது வெறுப்புணர்வும் கோபமும் கொண்டிருந்த முஸ்லிம்கள் ஒரே குடையின்கீழ் பொது எதிரணியில் சங்கமமாவதற்கு அரசிலிருந்து நாம் வெளியேறியமையே வித்திட்டது என்று கூறினால் அதில் தவறொன்றுமில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற எடுத்த முடிவு ஒரு தன்னிச்சையானதோ அல்லது சுயநலம் கொண்டதோ அல்ல. மட்டுமன்றி அது ஒரு தனிமனிதன் எடுத்த முடிவுமல்ல. கட்சியின் உயர்பீடத்தை முறைப்படிகூட்டி, பல சந்தர்ப்பங்களில் தீவிரமாக ஆராய்ந்து ஜனநாயக விழுமியங்களைப் பேணி நாம் இந்த முடிவை மேற்கொண்டோம். எனினும் பதவி, சுகபோகங்களில் வேட்கைகொண்ட எங்களில் ஒருசிலர் மஹிந்தவுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டனர். அதுவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கட்சிக் கூட்டங்களில் சாக்குப்போக்குகளைக்கூறி கலந்து கொள்வதை தவிர்த்துக்கொண்டார். கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கவேண்டுமென உலமாக்கள், கட்சித்தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தபோது, தனக்குள்ளே அவர் முடிவெடுத்து மஹிந்தவுக்காக காத்தான்குடியில் கட் அவுட்களை கட்டிய கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றன.

நாம் சமுதாயத்தின்மீது கொண்ட கவலையால் பதவி பட்டங்களை துறந்து வெளியேறியபோது ஹிஸ்புல்லா, சஹீட் போன்றவர்கள் பதவிக்கும் வசதியான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு மஹிந்தவுடன் ஒட்டிக்கொண்டனர். கட்சியில் இருக்கின்ற காலத்தில் கனவான்களாக காட்சி தந்த இவர்கள் இப்போது அரசில் இருந்து கொண்டு தாறுமாறாக விமர்சிக்கின்றனர். பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்ட கதையாகத்தான் இது இருக்கிறது. நாம் இறைவனை முன்னிறுத்தியே வெளியேறியதால் ஆட்சியில் அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டு அரசு நிலைகுலைந்தது எவர் வெளியேறினாலும் 'றிஷாத் வெளியேறமாட்டார்' என்று பலர் அடித்துக்கூறியபோதும் நாம் சமூதாய நலன்கருதி அதைப் பொய்ப்பித்தோம்.

அத்துடன் எமது அரசியல் பயணத்தில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த சம்பவங்களும் இடம்பெற்றிருப்பது எமது எதிர்கால பயணத்திற்கு படிப்பினையாக அமைந்திருக்கின்றது.

2005, 2010 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் இந்த ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவந்தவர்களில் நாங்களும் காரணகர்த்தாக்களே. ஆயுத அதிகாரத்தையும் துச்சமென மதித்து வடக்கில் குறிப்பாக வன்னியில் காடுமேடுகளைக் கடந்து கொடூர வெயிலிலும் கொட்டும் மழையிலும் நாம் அலைந்து திரிந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்குகளை சேகரித்துக் கொடுத்திருக்கின்றோம். இது மஹிந்தவுக்கு தெரியாவிட்டாலும் இறைவனுக்கு வெளிச்சம். எனினும் காலப்போக்கில் அதிகார மமதை அவரின் கண்களை மறைத்தது. பௌத்த பேரினவாதிகளின் வலையில் சிக்கிக்கொண்ட அவர் முஸ்லிம்களை கணக்கில் எடுக்கவேயில்லை. ஒரு பொருட்டாக கருதவும் இல்லை.

எமது சமூகத்தை கறிவேற்ப்பிலையாக பயன்படுத்திவிட்டு வீசி எறிந்ததை நாம் உணர்ந்து கொண்டோம் தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு, கிராண்ட்பாஸ் பள்ளி  அட்டூழியங்கள், பெஷன்பக், நோலிமிட் மீதான காடையர்களின் தாக்குதல்களை அவர் கண்டும் காணாததுபோல நடித்தார். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். அமைச்சரவைக்கூட்டங்களில் இனவாத சக்திகளின் கொட்டங்களை அடக்குமாறு நானும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கோரிக்கை விடுத்தபோது எம்மீது அவரது கோபக்கனல் வீசியது.

முஸ்லிம் சமூதாயத்தின் பிரதிநிதிகளான எங்களை கிள்ளுக்கீரையாகவே அவர் நினைத்தார். மாறாக பொதுபலசேனா, ராவண பலசேன போன்ற இயக்கங்களை இவரும் இவரது சகாக்களுமே நீருற்றி வளர்க்கின்றனர் என்ற உண்மையை காலப்போக்கில் அறிந்து கொண்டோம். ஆட்சித்தலைமையுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பட்டபோதெல்லாம் அவர் எம்சமூதாயத்தின்மீதே பழியைப் போட்டார். இனவாத இயக்கங்களின் ஊற்றாக இந்த அரசு இருக்கின்றது என்று தெரிந்தும் நாம் இறைவன்மீது பாரத்தைச் சுமத்தி பொறுமை காத்தோம்.

தர்காநகர், அளுத்கம போன்ற இடங்களில் மூஸ்லிம்கள் மீது அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது பொலிசாரை வேடிக்கை பார்க்க வைத்த இந்த ஜனாதிபதி, மூஸ்லிம் எம்பிக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் எதுவுமே நடைபெறவில்லை.  அறுதிப்பெரும்பான்மை என்ற பாராளுமன்றத்தின் பலமும் நிறைவேற்று அதிகாரம் என்ற மமதையும் அவரை ஆட்கொண்டிருந்தது.

யுத்த வெற்றியும் அவரின் கண்களை மறைத்திருந்தது. முஸ்லிம் சமூகத்தை 'வந்தான் வரத்தான்களாக' கருதும் பொதுபல சேனாக்கள் எம்மீது அவதூறுகளை பரப்பியபோது வாளாவிருந்த இந்த ஆட்சியாளர்கள் இப்போது எமது காலடிக்கு வந்து வாக்குப்பிச்சை கேட்கும் அளவிற்கு இறைவனின் நாட்டம் இருக்கின்றது. இந்த அரசுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நாம் அப்போதே எண்ணியிருந்தோம். இப்போதுதான் உரிய தருணம் கிடைத்திருக்கின்றது. சந்தர்ப்பத்தை கோட்டை விட்டால் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின்பின்னர் பொது எதிரணியின் நல்லாட்சிக்கான அம்சங்களில் நாம் கவரப்பட்டோம். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை மக்களான தமிழர் முஸ்லிம்களை பாரபட்சமின்றி நடத்துவாரென்ற உறுதியான நம்பிக்கையில் நாம் வெளியேறினோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெறுமனே ஒரு சிலருடன் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய இடங்களிலுள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடனும் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடனும் சேர்ந்தே பொது எதிரணிக்கு சென்றோம். நாம் ஒரு பலமான சக்தி என்பதை அவர்களுக்கு வெளிக்காட்டினோம். ஆட்சி அதிகாரம் இறைவன் தருவது. அதற்காக எமது  சமூகத்தை பாழாக்கமுடியாது. நாம் எதிரணிக்கு சென்றபோது தங்களால் புதிதாக வழங்கப்பட்ட எம்பி பதவியையும் எடுத்துச் சென்றுவிட்டதாக ஜனாதிபதி குற்றஞ்சாட்டுகிறார்.

எம்பி பதவி, ஜனாதிபதி எமக்குத் தந்த பிச்சையல்ல. பொதுத்தேர்தலில் நாம்பட்ட கஷ்டங்களுக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குறுதி தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது அமீர் அலியை எம்பியாக்கி பிரதியமைச்சராக்கி தருவோம் என்று கல்குடா பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னிலையில் பஷில் ராஜபக்ஷ மீண்டும் அளித்த வாக்குறுதியை இப்போதுதான் நிறைவேற்றியுள்ளார்கள். அந்த வகையில் அஸ்வரை விலக்கச் செய்து அமீர் அலிக்கு எம்பி பதவி தந்தனர். அதுவும் தேசியப்பட்டியலில் முஸ்லிம் ஒருவரை கழற்றி இன்னொரு முஸ்லிமுக்கு கொடுப்பதன் மூலம் மோதல்களை உருவாக்குவதே இந்த ஆட்சியாளர்களின் கபடநோக்காயிருந்திருக்கின்றது. அஸ்வர் தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்து வருகின்றார். ஆலோசகர் பதவி என்ற எலும்புத்துண்டையாவது இருக்கும் சொற்பநாட்களில் காப்பாற்றி கொள்ளலாம் என்ற எண்ணமே அது.

முஸ்லிம் சமூதாயம் கஷ்டத்தில் விழுந்து கிடந்தபோதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு துதிபாடிய அவர், அந்த சமூதாயத்தின்மீது பற்றுக்கொண்டு உழைக்கும் எங்கள் மீது வசைபாடி வருகின்றார்.

நான் அரசியல் வாழ்வில் அமைச்சராக பணியாற்றிய காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று பாராதே உழைத்திருக்கின்றேன். யுத்தக்கொடூரத்தில் சிக்கி வன்னியிலிருந்து வெளியேறிய மக்களை வவுனியா மெனிக்பாமில் தற்காலிகமாக குடியேற்றி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து நிம்மதியான சூழலை உருவாக்கி கொடுத்துள்ளேன். தென் இலங்கையில் சிங்கள பிரதேசங்களில் நடந்த அனர்த்தங்களின்போதெல்லாம் அடுத்த கணமே அங்கு விரைந்து அவர்களுக்கு உதவியுள்ளேன். நான் சார்ந்த முஸ்லீம் சமூகத்திற்கும் என்னாலான உச்சக்கட்ட உதவிகளை நல்கியிருக்கிறேன்.

எதிர்வரும் காலங்களிலும் இறைவனின் நாட்டத்தால் என்உதவியை தொடர்ந்தும் மேற்கொள்வேன்.

இந்த நாட்டிலே நல்லாட்சியொன்று மலரவேண்டும். அந்த ஆட்சியை கொண்டு வருவதற்காகவே நான் இப்போது உங்கள் முன் நிற்கின்றேன். எனவே எதிர்வரும் 8ம் திகதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும் என நான் உரிமையுடன் கோரிக்கை விடுக்கின்றேன்.   

2 comments:

  1. Unmayaha irunthal Allah athadku kooly tharuvaan

    ReplyDelete
  2. Dear Sir, i request you please make a one party for muslims please be together all like TNA than we can show our power greatly

    ReplyDelete

Powered by Blogger.