முஸ்லிம் கவுன்சிலின் வேண்டுகோள்
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதும் அதற்கு முன்பும் பின்பும் முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புடன் நடந்த கொள்வதில் அக்கறை காட்டவேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா விடுத்துள்ள வேண்டுகோளில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை வரலாற்றில் முக்கியமானதும் தீர்க்கமானதுமான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. (வாக்குரிமை) பெற்ற சகல முஸ்லிம்களும் தமது பெறுமதியான வாக்குகளை காலையில் சென்று தாம் விரும்பிய அபேட்சகருக்கு வாக்களிக்குமாறு பணிவாக வேண்டுகின்றோம். வாக்குரிமை எமது பிறப்புரிமையாகையால் அதில் அலட்சியப்போக்கை காட்ட வேண்டாமென வேண்டுகின்றோம்.
பொதுவாக தேர்தல் காலங்களில் தீய சக்திகள் குழப்பங்களை விளைவிக்க முற்படுவதுண்டு. இச்சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் இவற்றில் சிக்கிக் கொள்ளாது கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களை இன மோதல்களாகப் பயன்படுத்த சில சக்திகள் முயற்சிக்கலாம் அதற்கு நாம் ஒரு போதும் காரணகர்த்தாக்களாக செயற்படக் கூடாது.
தேர்தல் காலங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பள்ளிவாசல் நிருவாகிகள் தம் மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கி அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தோல்வியுற்றவர்களை பழிவாங்கும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் எவரும் சம்பந்தப்படாமல் அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலை நீதியாகவும் அமைதியாகவும் நடத்த அதிகாரிகளுக்கு தேவைப்படும் சகல விதமான ஒத்துழைப்புகளையும் வழங்க தயக்கம் காட்ட வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர்
என்.எம். அமீன்
04-01-2014

Post a Comment