Header Ads



உணர்வு பூர்வமான அரசியலிலிருந்து, அறிவு பூர்வமான அரசியலை நோக்கி...!

-டாக்டர் I. L. M. றிபாஸ்-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் கண்ணீருக்கும் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்திருப்பதாக உணரப் படுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம் சமுகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி கேட்பாரற்ற கையறு நிலையினை கடந்த காலங்களில் அனுபவித்தது. பள்ளி வாயல்கள் தாக்கப்படுதல், தர்காக்கள் உடைத்தழிக்கப்படுதல், முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் சுவீகரிப்பு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல், ஹலால் உணவு சான்றிதழ் தடை , பர்தா அணிதலுக்கு எதிர்ப்பு,  சொத்தழிப்பு என தொடங்கி உயிர்ப்பலி வரை இந்த முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தாண்டவமாடியது, ஆயினும் கடந்த  அரசியல் அதிகாரம்  முஸ்லிம் சமுகத்தின் அழுகுரலுக்கு செவி சாய்க்காதது மட்டுமன்றி ஏளனத்தோடு கிண்டலும் செய்தது. 

ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக  பல முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும்  மாகான சபை பிரதி நிதிகள் என முஸ்லிம் சமுகத்தின் அரசியல் பலத்திற்கு எந்த குறையும் இருக்கவில்லை, அந்த அரசியல் தலைவர்களும் அரசுக்கு கொடுத்த அழுத்தத்தை விட தாம் அவ்வாறான அழுத்தத்தை கொடுப்பதாக மக்களுக்கு காட்டிக் கொள்ள மிக பிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள். ஒரு சில அரசியல் போக்கிலிகள் மிஹிந்த ராஜபக்ஷ அவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலுள்ள அசைக்க முடியாத சக்தியாக சித்தரித்து அதனை முஸ்லிம் சமுகம் நம்பவேண்டும் என பிரச்சாரமும் செய்தனர். 

இந்த அரசியல் பச்சோந்தித் தனங்களைக் கடந்து இறைவனின் சித்தம் வேறுமாதிரியாக இருந்ததனை நாம் தேர்தலில் கண்டோம். இந்த ஆட்சி மாற்றத்திற்காக இலங்கைத் தேசத்தின் சகல சமூகங்களும் பங்களிப்புச் செய்தன, யாருடைய பங்களிப்பும் குறைத்து மதிப்பிடப் படமுடியாத அளவிற்கு காத்திரமாக அமைந்திருந்தது. முஸ்லிம் சமுகம் தமது உணர்ச்சிப் பிரவாகங்களை இனவாத சக்திகளுக்கு எதிராக ஒன்று திரட்டி ஒற்றுமையுடன் வாக்குகளாக வெளிப்படுத்தியது, ஒன்றுபட்டிருத்தலுக்கான இறை அருளை நாம் கண்குளிர கண்டோம். இவ்வாறான சமூக ஒற்றுமையினைக் கூட மதிக்கத் தெரியாத  நயவஞ்சக அரசியல் கபடதாரிகள் இனவாதிகளுக்காக பல பொய்ப் பரப்புரைகளோடு முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிக்க முழு மூச்சுடன் பாடுபட்டனர்.  முஸ்லிம் சமூகத்தின் வறுமையினையும் அப்பாவித் தனத்தினையும் பாவித்து  வாக்குகளுக்காக சில்லறைகளை இலஞ்சமாக கொடுத்து அந்த மக்களிடமிருந்து மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிப்பதாக உறுதி மொழியும் வாங்கிக் கொண்டனர்.

இந்த சதி முயற்சிகளையெல்லாம் தாண்டி ஆட்சி மற்றம் வந்தாயிற்று. மக்களின் களிப்புகளும் ஓரளவிற்கு அடங்கியாயிற்று.  நூறு நாள் வேலைத் திட்டமும் அதற்கான முஸ்தீபுகளும் மிக தீவிரமாக முன்னெடுக்கப் படுகின்றன. அரசினை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக எந்த பிசாசுகளின் ஆதரவையும் கூட மறுதலிக்க முடியாத ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதாக பிரதமர் ரணில் தனக்கு நெருக்கமானவர்களிடம் சுட்டிக் காட்டுகின்றார். இந்த சூழலில் நாட்டை விட்டு தப்பியோட எத்தனிக்கும் ஊழல் பெருச்சாளிகளைக் கூட தப்பிச் செல்ல விடுவதற்கான காரணம் இவர்களிடம் குவிந்திருக்கும் பெருந்தொகைப் பணத்தைப் பயன்படுத்தி அரச இயக்கத்தினை நலிவுறச் செய்வற்கான சூழ்ச்சியில் இவர்கள் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்காக கூட இருக்கலாம். சிறந்த மதியூகியான ரணில் விக்ரமசிங்க அவர்களின் அரசியல் செயற்பாடுகளில் அவசரப்பட்டு  குறுக்கீடு செய்வது அவரது அரசியல் காய் நகர்த்தல்களுக்கு இடையூறாக அமைந்துவிடவும் கூடும்.

கட்சி தாவிகளையும், சந்தர்ப்பவாத அரசியல் நரிகளையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசுடன் சேர்க்கக் கூடாது என்கின்ற வாதம் பல தரப்பினராலும் முன்வைக்கப் படுகிறது. இந்த அரசியல் பச்சோந்திகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் சுரணையற்று ஆட்சியில் உள்ளோரோடு ஒட்டிக் கொண்டு எப்போதும் மந்திரிகளாக வலம்வருவது பல உண்மையான கட்சி விசுவாசிகளையும் பொது மக்களையும் விசனத்திற்கு உள்ளாக்குகின்றது, அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் ஒட்டுண்ணிகளான ஹிஸ்புல்லாஹ் அதாவுல்லாஹ் போன்ற சந்தர்ப்ப வாதிகளும் பசீர் சேகுதாவூத் போன்ற இரட்டை நிலைப்பாடு உள்ளோரும் எப்போதும் பதவியில் இருந்து கொண்டு பவிசாக வலம்வருவது பொதுமக்களால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறது. 

இந்த விசனங்களுக்கு அப்பால் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்; அதாவது இந்த அரசியல் கபடதாரிகளை தேர்தல்களின்போது நாம்தான் நமது வாக்குகளை பெருவாரியாக அழித்து தெரிவு செய்கிறோம். தேர்தல் வருகின்றபோது இவர்களை தெரிவுசெய்வதற்காக பல பாமரத்தனமான நியாயங்களை நாம் கற்பிதம் செய்து கொள்கிறோம்.  ஊருக்கு MP வேண்டும், தவறுகள் இருந்தாலும் ஏதாவது அபிவிருத்தி வேலைகள்  செய்கிறார்தானே, வேறு யார்தான் இருக்கிறார்கள் என்பது போன்ற  பல போலியான நியாயங்களோடு அதே   பேர்வழியை நாம் தொடர்ச்சியாக ஆதரிக்கிறோம், நேர்மையான அறிவுபூர்வமான தலைமைத்துவங்களை நாமாக தேடி தெரிவு செய்வதுமில்லை அப்படியான ஓரிரு நபர்கள் முன்வரும்போது அவர்களை நாம் ஆதரிப்பதும் இல்லை. இவ்வாறு  நாமே தெரிவு செய்து அனுப்புகின்ற நமது அரசியல் பிரதிநிதிகளை தற்போதய அரசு நிராகரிக்க வேண்டும், அவர்களுக்கு எந்த அரசியல் அந்தஸ்த்தும் கொடுக்கக் கூடாது  என நாம் எதிர்பார்ப்பதும் அதனை விமர்சிப்பதும் எவ்வளவு தூரம் சமயோசிதமானது என்பதனை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

தற்போது தற்காலிகமாகத் தோற்கடிக்கப்படுள்ள பேரினவாத சக்திகள் மீழ்   எழுவதற்கான தருணம் பார்த்து பதுங்கி இருக்கின்றன. நமது அரசியல் குள்ளநரிகளும் மக்களைக் கவரும் புதிய கோஷங்களுடன் தமது அரசியல் வியாபாரத்தை முன்னெடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழலில்தான்  ஒரு சில மாதங்களுக்குள் இன்னுமொரு பாராளுமன்ற தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம். இதன் போது நமது உண்மையான உணர்வுகளை  வெளிப்படுத்த நமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப் பட இருக்கிறது. அந்த தேர்தலின் போதும் நாம் முன் குறிப்பிட்ட வெற்று நியாயங்களோடு  நமது அரசியல் பச்சோந்திகளையே உணர்ச்சி வயப்பட்டு  மீண்டும் மீண்டும்  நாம் தெரிவு செய்வோமாயின் நமது அரசியல் எதிர்காலம் இன்னும் ஒருமுறை  பழைய இடத்திற்கே திரும்பிச் செல்லும். வாக்காளர்களின் பாமரத்தனத்தை மூலதனமாக்கி மீண்டும் அரியாசனம் ஏறுவதற்கு இந்த அரசியல் வியாபாரிகள் முழுமூச்சுடன் உழைப்பர், ஆயினும் அரசியல் விழிப்புணர்வுள்ள செயற்பாட்டாளர்களும் இளைஞர்களும் மிக அவதானத்துடனும் ஈடுபாட்டுடனும் மரியாதை மிக்க கண்ணியமான அரசியல் மாற்றத்திற்காக அறிவுபூர்வமாக  பாடுபட முன்வராத வரை நமது தலை எழுத்தை யார்தான் மாற்ற முடியும்? 


1 comment:

  1. மிக மிக முக்கியமான கருத்து. இக்கருத்தின் அடிப்படையில் முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் இளைஞ்சர்களும் மிகவும் வேகமாக செயற்பட வேண்டும்.

    Dr. றிபாஸ், உங்களை போன்றவர்கள் மேலும் களத்தில் இறங்கி மாற்று வழிகாட்டலை இனம் கண்டு, அரசியல் விபச்சாரிகளை மக்களுக்கு இனம் காட்டி அவர்களை ஓரம் கட்டி, நல்ல ஒரு தலைமைத்துவம் இனம் காணப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.