சல்மாவின் முயற்சியால் நிர்மானிக்கப்பட்ட பெண்களுக்கான தொழுகை மண்டபம்
மட்டக்களப்பு நகரில் முதல் தடவையாக பெண்களுக்காக நிர்மானிக்கப்பட்ட தொழுகை மண்டபம் நேற்று (6.1.2015)செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் இதனை திறந்து வைத்தார்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டிலும், முயற்சியினாலும் மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப்பள்ளிவாயல் வளாகத்தில் பெண்களுக்கான இத் தொழுகை மண்டபம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப்பள்ளிவாயலின் செயலாளர் எம்.ஸாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள் முக்கியஸ்தர்கள், உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நகருக்கு பல்வேறு வேலைகளுக்காக வரும் முஸ்லிம் பெண்கள் தமது தொழுகையினை உரிய நேரத்திற்கு நிறைவேற்றுவதற்காக தனந்தர்கள் சிலரின் நிதிப்பங்களிப்புடனும் மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆப்பள்ளிவாயல் நிர்வாகிகளின் உதவியுடனும் சுமார் 14 இலட்சம் ரூபா செலவில் இந்த தொழுகை மண்டபம் நிர்மானிக்க முடிந்ததாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.
இதனை நிர்மானிக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சல்மா இதன் போது மேலும் தெரிவித்தார்.

Post a Comment