பழம் நழுவி பாலில் வீழ்ந்துள்ள நிலையில், காயைப் பறித்துக் கடித்து ருசிக்க முயல்வதா..?
(மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். அதனையடுத்து நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கமும் அமைக்கப்பட்டு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர்.
தேர்தல் வெற்றிக்கான மாபெரும் பங்களிப்பை தமிழ் மக்களும் அடுத்தாக முஸ்லிம் மக்களும் வழங்கியிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே இந்த வெற்றிக்கு வீதியை அல்ல பாதையை அமைத்துக் கொடுத்த்து. அதனை புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் அதே போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மலையகத்தில் திகாம்பரம், ராதா கிருஷ்ணன் மற்றும் மனோ கணேசன் அஸாத் சாலி ஆகியோரின் கட்சிகளின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு துணையாக நின்றன.
அமைச்சரவையில் பங்கு கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுத்து விட்ட நிலையில் பிரதானமானதும் தேசிய ரீதியிலானதுமான இரு முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன முதற்கட்டமாக இரு அமைசச்ரவை அந்தஸ்துள்ள அதுவும் மிகப் பெறுமதியான அமைச்சுகளைப் பெற்றுள்ளன. அது அவர்களின் செல்வாக்குக்கான சான்றிதழ்கள்தான்.
இந்த இரு கட்சிகளும் தலைமைகளும் இந்த விடயத்தில் மிக்க திருப்தி கொண்டனவாகவே காணப்படுகின்றன. ரிஷாதின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அமீர் அலிக்கு பிரதியமைச்சு ஒன்று விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தவறும் பட்சத்தில் விரைவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை அந்தக் கட்சிக்குள் உள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த வரையில் கடந்த ஜனாதிபதியின் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சு பொறுப்புகளை அந்தக் கட்சி பெற்றிருந்தது. ஆனால், தற்போதைய அமைச்சரவையில் ஒரேயொரு அமைச்சு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் கட்சித் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். அவரது இந்த தூரநோக்கான தன்மை பாராட்டுக்குரியது. இன்னொரு அமைச்சோ அல்லது பிரதியமைச்சர்களோ தனது கட்சிக்குத் தேவை என்பதில் அவர் உறுதியாக இருந்தாலும் அதனை அவர் உடனேயே வழங்குமாறு அழுத்தம் பிரயோகித்து பெற விரும்பாத தன்மையே அவரிடம் காணப்படுகிறது.
ஒரு நல்லாட்சிக்கான அரசாங்க இயந்திரத்தில் தொய்வுகள், தொடர்பு அறுப்புகள் ஏற்படாத வகையில் அவர் இந்த விடயத்தைக் கையாள்கிறார். எமது கட்சிக்கு மேலும் பதவிகளைத் தாருங்கள் என்று இப்போதே கேட்கும் போது அது ஒரு முகச்சலிப்பான அல்லது சுழிப்பான விடயமாகப் போய் விடலாம் என்பது அவருக்குத் தெரியும்.
இதேவேளை, அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த விடயத்தில் அவசரத்தன்மையைக் காடடிக் கொண்டிருக்கின்றனர். இது ஓர் அரசியல் சாணக்கியமான நகர்வு அல்ல. கட்சித் தலைமையின் நிதான போக்கின் காரணத்தை இவ்வாறானவர்கள் புரிந்து கொண்டு பொறுமை காப்பவர்களாக இல்லை என்பது சற்று வேதனையான விடயமே.
இரு சிறுபான்மை இனக் கட்சிகளின் ஆதரவுடனேயே இப்போதைய ஜனாதிபதியும் நல்லாட்சி அரசும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதற்குப் பரோபகாரமாக அந்தக் கட்சிகள் மிகையாக அல்லது ஒரேயடியாக தமக்கு அனைத்தும் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து அவை கிடைத்ததுமான இரு விடயங்களும் இடம்பெறுமானால் முன்னளா் ஜனாதிபதியை ஆதரித்த சிங்கள மக்களும் சிங்கள இனவாத அரசியல்வாதிகளும் எவ்வாறு விமர்சிப்பார்கள்? அதன் விளைவுகள்தான் என்ன? இவ்வாறனவைகள் இடம்பெற்றால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அதன் எதிரொலிகள் எவ்வாறெல்லாம் அமையுமென்பதனை அரசாங்கமும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் நன்கு புரிந்துள்ள நிலையில் அதற்கேற்ப செயற்படுகினறன. ஆனால் இந்த விடயத்தை முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளாமல் தலைமையைக் கோபித்துக் கொள்வது எந்த வகையில் நியாயமானது? அது கூடாது. தனிப்பட்ட சில நலன்களை அவசரமாக சிலர் அடைய முயற்சிப்பதால் முழு முஸ்லிம் சமூகமும் நீண்டகால பின்னடைவையும் பாதிப்பையும் சந்திக்கும் அல்லவா?
இந்த அவசரத்தனத்தில் எட்டப்படும் முடிவுகளின் விளைவுகள் விரைவில் இடம்பெறவுள்ள தேர்தலில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த சக்தியையும் பலவீனமடையவும் செய்யலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயற்பட்ட சிங்கள சக்திகளே முஸ்லிம் மக்களுக்கு இன்றைய ஜனாதிபதி வழங்குவனவற்றைக் கண்டு வெறுப்பும் அதிருப்தியடைந்து, பழைய ஆட்சியாளர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்கும் மனநிலைக்கு அவர்களை இட்டுச் செல்லவும் இத வாய்ப்பாக அமைந்து விடலாம். அவ்வாறதொரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டால் முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கு என்பது செல்வாக் காசாக “உள்ளதும் போச்சுடா லொல்ல கண்ணா“ என்ற நிலைமைதான் ஏற்படும். எனவே இந்த விடயத்தில் அவசர குடுக்கைகளாக செயற்படுவோர் நிதானம் தவறக் கூடாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தற்போது தேசிய அரசியலில் உயர்ந்த கௌரவம் கிடைத்துள்ளது. இதனைப் பாதுகாத்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் அதன் தலைமை மட்டுமல்ல அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் கரிசனையுடன் செயற்படுவதே முக்கியம். பழம் நழுவி பாலில் வீழ்ந்துள்ள நிலையில் காயைப் பறித்துக் கடித்து ருசி பார்க்க முயற்சிப்பது அரசியல் மடைமை, அறியாமை.
இன்றைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் மக்களும் வாக்களித்தமைக்கான காரணங்கள் கடந்த அரசாங்க காலத்தில் அந்த சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அநியாங்களுக்காவே. எனவே, அவற்றிலிருந்து ஒட்டு மொத்த சமூகம் எழுந்திருப்பதற்கு தேவையானவற்றை பெறுவதில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். இதனை விடுத்து உதவி மந்திரி பதவிகள் உடன் எங்களுக்கு வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்பது சமூகம் சார்ந்த நலன் அல்ல.
இரண்டு பிரதிமையச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதனை விட இந்த நாட்டில் வாழக் கூடிய முழு முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கக் கூடிய பொதுவான பிரச்சினைகளில் ஒன்றுக்கேனும் தீர்வை பெற்றுக் கொள்வதே மேன்மையானதும் எமது வெற்றிக்கு உரித்தானதாகும். இதனை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்
அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு தற்போது கிடைப்பெற்றுள்ள அமைச்சு பொறுப்பு சக்திமிக்கது. அத்துடன் தற்போதைய அமைச்சரவை சகாக்கள் அனைவரும் ஹக்கீமுடன் மிகுந்த புரிந்துணர்வுடனும் நெருக்கத்துடனும் செயற்படுகின்றனர். இவ்வாறானதொரு நிலைமை கடந்த கால அமைச்சரவையில் ஹக்கீமுக்கு இருக்கவில்லை. இதற்கான சக்தியினை மக்கள் இப்போது ஹக்கீமுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். அதனை அவர் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கான ஒத்துழைப்பினை கட்சி முக்கியஸ்தர்கள் அவருக்கு வழங்க வேண்டும்.
இரண்டு பிரதியமைச்சு பதவிகளையும் கல்முனை கரையோர மாவட்டத்தையும் எங்களுக்குத் தாருங்கள் என்று இன்றைய அரசிடம் கேட்டாலும் உடனடியாக கிடைக்கப் போவது இரு பிரதியமைச்சு பதவிகளே தவிர கரையோர மாவட்டமும் சேர்ந்து அல்ல. ஆனால், எந்த அமைச்சு பதவிகளையும் கேட்காமல் முழு சமூகமும் சார்ந்த ஏதாவது ஒன்றை மட்டும் முன்வைத்தால் மாற்று வழியின்றி அதனை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய நிலையே ஏற்படும்.
அன்று முஸ்லிம் காங்கிரஸுக்கான அரசியல் அதிகாரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் கூட காணப்படவில்லை. ஆனால் இன்று அவை காலடிக்கே வந்து விட்டன. அதனைப் பயன்படுத்துவதும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதும் கட்சியைப் பொறுத்த விடயம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விடுவார்களானால் அதற்கான பதிலை முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் வழங்குவர் என்பது மட்டும் நிச்சயம்.

Post a Comment