துரிதமாக மாறிக்கொண்டிருக்கும் இலங்கையில், முஸ்லிம்களின் இலக்கு எதுவாக இருக்கவேண்டும்..?
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது கடந்த கால கசப்புணர்வுகள், துயரங்களுக்கெல்லாம் ஓர் விடியல் கிடைத்த சந்தோசத்தில் இருப்பது மகிழ்ச்சியான விடயமே. எமது ஒற்றுமையுடன் கூடிய அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு ஒரு விடிவு கிடைத்ததாகவே, இஸ்லாமிய இயக்கங்களாயினும், சமூகசேவை அமைப்புக்களாயினும், முஸ்லிம் அரசியல் சார்ந்த அமைப்புக்களாயினும் இன்று இந்த அரசியல் மாற்றத்தினூடே தமது கருத்தை கூர்மையாக்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஜனநாயக ரீதியான போராட்டமே எமது எதிர்கால இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாகக் கூடியது என்று எம்மில் பலர் நம்பிக்கைகொள்ளுமளவு இந்தமாற்றம் உள்ளது என்றால் அது மிகையாகாது. எனினும் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் எதிர்காலமும் எழுச்சியும் முஸ்லிம் அரசியலினூடாக மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பது முற்றுமுழுதான உண்மையாகாது.
எமது இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியல் ரீதியான பங்களிப்பு காலா காலமாக பல்வேறுபட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அவை அக்காலப்பகுதியில் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்ததோடு, முஸ்லிம்கள் எதிர்கொண்ட சவால்களை சமாளிக்கக் கூடியவைகளாக செயற்பட்டன. இந்த முஸ்லிம் அரசியலின் புதியதொரு வடிவமாகவே நாம் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றப்பாட்டைக் கருதக்கூடியதாக உள்ளது. மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் முஸ்லிம் சமூகத்திற்காய் தோற்றுவிக்கப்பட்ட இந்த அரசியல் கட்சி அக்காலப் பகுதியில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு முகம்கொடுகக் கூடியதாகவும், அக்கால அரசியலின் கிங் மேகர்ஸ்களாகவும் செயற்பட்டார்கள். எனினும் இந்த அரசியல் முன்னெடுப்பினால் இஸ்லாத்திற்கும், முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்பட்ட அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியதாகவோ, நீண்ட காலத்தில் எமது இருப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகவோ இருக்கவில்லை என்பதே யாதார்த்தமாகும். இத்தகைய முஸ்லிம் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் எதிரொலியையே இஸ்லாமபோபியாக்களின் தோற்றுவிப்பினூடாக நாம் அண்மைக்காலங்களில் கண்டுகொண்டோம். முஸ்லிம்களின் அரசியல் ரீதியான போராட்டம், இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நூறு சதவீத இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவவில்லை என்பதே, நாம் எமது வரலாற்றிலிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினையாகும்.
எமது வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொண்ட படிப்பனையோடு நாம் எமது அடிப்படைகளை நோக்கி நகரவேண்டிய தேவையை முன்னெப்போதையும் விட அதிகமாக உணரத்தலைப்பட்டவர்களாக உள்ளோம். நாம் இலங்கையர்களோ, அல்லது பிற தேசத்தவர்களோ எங்கே இருப்பவர்களாயினும் சரியே நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எமது வாழ்கையின் அடிப்படை நோக்கத்தை மிக அவசரமாகவும் ஆழமாகவும் உணரத்தலைப்பட்டுள்ளோம். முஸ்லிம் என்பவன் யார், அவன் இவ்வுலகத்திலே எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டுள்ளான் போன்ற அடிப்படை விடயங்களை முஸ்லிம் சமூகம் மிக ஆழமாக மீள் பரிசிலனைக்குட்படுத்தி அதன்பால் எமது செயற்பாடுகளை நகர்த்துவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகவும் அவசியமாகவும் இருக்கின்றது.
குறிப்பாக அல்லாஹ்வின் மார்க்கத்தை இப்பூமியிலே பரப்புகின்ற அதன் எழுச்சியிலே பங்களிப்பு செய்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள், தமது நோக்கங்களையும் செயற்பாடுகளையும் பரீசிலனைக்கு உட்படுத்தி தமது பணிகளை மீள்ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையில் உள்ளன. அல்லாஹ்வின் மார்க்கத்தை இப்பூமியிலே வாழவைப்பதை தமது நோக்காகக் கொண்டு தமது பணிகளை முன்னெடுக்கின்ற இஸ்லாமிய இயக்கங்களினதும் அமைப்புக்களினதும் வரலாற்றை நோக்குவோமாக இருந்தால் ஏறத்தால 1940 களின் ஆரம்பங்களில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் தமது பணிகளை முஸ்லிம் சமூகத்தோடு மாத்திரம் சுருக்கிக் கொண்டுள்ளமை நாம் கண்கூடாகக் கண்ட யதார்த்தமான உண்மையாகும்.
அண்மைக்காலங்களில் எமது சமூகம் சந்தித்த பாரிய சவால்களைத் தொடர்ந்து பல்வேறுபட்ட முக்கியஸ்தர்கள் கூறிய விடயம் தான் அந்நிய சமூகத்துடனான ஊழ-நஒளைவiபெஃசகவாழ்வு. எம்மில் அதிகமானோர் இணைந்து வாழ்வதினூடாக சமாதானத்தையும், அரசியல் மற்றும் ஜனநாயக ரீதியான முன்னெடுப்புக்களினூடாக எமக்கான உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று கருதினர். எனினும் அல்குர்ஆனினதும் சுன்னாவினதும் ஒளியில் நோக்குகின்றபோது முஸ்லிம்களின் வாழ்வின் இலக்கு சகவாழ்வா? அல்லது இஸ்லாத்தை எத்திவைப்பதா? என்பதை எம்மால் அறிந்துகொள்ளமுடியும்.
முஸ்லிம்களின் அடிப்படை வழிகாட்டியான அல்குர்ஆனின் நிழலினூடே முஸ்லிம்களின் வாழ்வின் அடிப்படை இலக்கு அல்லாஹ்வின் தீனை எத்திவைப்பதேயாகும் என்ற பேர்உண்மையை நாமனைவரும் மீண்டும் எமது மனதில் புதிப்பித்துக்கொள்ளவேண்டும். எந்தளவுக்கெனில் இஸ்லாத்தை இவ்வுலகில் பரப்புரை செய்வதையே நோக்காகக் கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தமது செயற்பாடுகளை தூய இலக்கின்பால் நகர்த்த வேண்டிய அவசியத்தை இக்காலப்பகுதியில் அவசரமாக நாம் உணர்கின்றோம். இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக ஆரம்பகாலங்களிலே மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களினால் இலங்கை இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு முஸ்லிமல்லாதோர் மத்தியில் இஸ்லாத்தின் செய்தியை முன்னெடுத்து செல்வதே அதிகமாக வலியுறுத்தப்பட்டது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.
இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையில் இஸ்லாமிய புணருத்தானப் பணியை (இஸ்லாஹ்) முன்னெடுக்க வழங்கும் முக்கியத்துவத்தை விட அந்நிய மதத்தவர்களுக்கிடையே இஸ்லாத்தை எத்திவைப்பதற்கு (தஃவா) தமது அதிகளவான வளங்களை மிக அவசரமாக பயன்படுத்த வேண்டியதே இன்றைய தேவையாகும். இதுவே முஸ்லிம்களினதும் இஸ்லாமிய இயக்கங்களினதும் இவ்வுலக வாழ்வின் நோக்கமாகும்.
இஸ்லாத்தை முஸ்லிமல்லாதோர் மத்தியில் எத்திவைப்பதே எமது சமூகத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழிமுறையாகும். இதனூடாகவே முஸ்லிமின் இவ்வுலகவாழ்வின் அடைப்படை நோக்கத்தை அடைந்து கொள்ளமுடியும். ஜனநாயக அரசியல் வழிமுறையில் பயணிப்பதினூடாகவே எமது சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என்று நம்புவது, ஒரு போதும் அல்குர்ஆனின் போதனையாக இருக்கமுடியாது.

Post a Comment