ஹக்கீமும், அதாவுல்லாவும், ஹரீஸும் சில யதார்த்தங்கள்..!
-நவாஸ் சௌபி-
கரையோர மாவட்டம் - கட்சி மாறுவதற்கான ஆயுதம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் - முஸ்லிம் காங்கிரஸின் கனவு
சாய்ந்தமருது பிரதேச சபை - தேர்ல்கால காய்ச்சால்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாட்டின் ஆட்சிக்கு ஒரு முடிவு கிடைக்கப்பெற்ற போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் உள்ளார்ந்த பிரச்சினைகள் இன்னும் முடிவில்லாமல் தொடர்கிறது. பிரதி அமைச்சர் கோரிக்கைகளும் முதலமைச்சர் இழுபறிகளும் என்று பதவிக்கான கட்சிப் போராட்டங்கள் மக்களை மறந்த நிலையில் நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவினை அறிவிப்பதற்கிடையில் அது தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஆலோசனை கேட்பதற்கும் உலமாக்கள் சந்திப்பு இடம்பெற்றது, கட்சியின் உயர்பீட கூட்டங்கள் பல கூட்டப்பட்டது, கட்சியின் அரசியல் பிரமுவர்கள் கொழும்பு கண்டி என்று அழைக்கபட்டு பல சந்திப்புக்கள் பேசப்பட்டது.
ஆனால் இது இவ்வாறு இருக்க மைத்திரி வெற்றி பெற்ற பிறகு உருவான 100 நாள் வேலைத்திட்டத்தைக் கொண்ட மிகச் சொற்பமான இந்த மூன்றுமாத காலத்திற்கு ஒரு அமைச்சுப் பதவியை எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற ஆலோசனையைப் பெற அதற்கான கருத்துக்களைக் கேட்க உலமாக்கள், உயர்பீடம், அரசியல் பிரமுவர்கள் யாரும் தேவையில்லாமலும் அதற்கான அவசியமில்லாமலும் ஹக்கீம் தன் அமைச்சைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஹக்கீமின் இத் தன்மை ஒன்றை மட்டும் நன்கு வெளிப்படுத்துகிறது அதாவது இக்கட்டானதும் மிகவும் பிரச்சினையானதுமான சந்தர்ப்பங்கள் அரசியலில் ஏற்படுகின்ற போது அதனை பலரின் தலைகளிலும் சுமத்துவதற்கு இவ்வாறான உலமாக்கள், உயர்பீட ஏற்பாடுகளைச் செய்வதும் பின்னர் பதவி அதிகாரம் என்று வருகின்ற போது அதற்கான முடிவினை தனக்குள் மட்டும் வைத்துக்கொண்டு கட்சியின் தலைமைத்துவ வித்துவத்தைக் காட்டுவதும் ஹக்கீமின் அரசியல் கலை. இந்தக் கலையில் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.
மஹிந்தவின் ஆட்சியில் அமைச்சராக இருந்ததில் ஏற்பட்ட சவால்களையும் அனுபவங்களையும் கொண்டு இனி அமைச்சுப் பதவிகளை எடுக்கப்போவதில்லை அதனால் சரணாகதி அரசியல் செய்யும் நிலை ஏற்படுகிறது என்றும் அமைச்சுப் பதவிகளுக்காக நாங்கள் ஆலாய்ப் பறப்பவர்கள் இல்லை என்றும். முஸ்லிம் காங்கிரஸ் இதன்பிறகு பதவிகளுக்கா ஓடிப்போகாது என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இதற்கு முன் பலதடவை அமைச்சுப் பதவியை இந்த சமூகத்திற்காக தூக்கி எறிந்திருக்கிறது என்றும் அமைச்சுப்பதவியை மிகவும் அற்பமாக நினைத்துப் பேசிய அதே ஹக்கீம் இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டார்.
மைத்திரியின் ஆட்சியில் எந்த உடன்படிக்கைகளும் கோரிக்கைகளும் முன்வைக்காமல்தான் தேர்தலுக்கான ஆதரவை மக்களோடு மக்களாக முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியது. அதன்பால் மைத்திரியின் வெற்றிக்கு முஸ்லிம் காங்கிரஸ் பெரும் பங்களிப்புச் செய்யாவிட்டாலும் (செய்ததாக அவர்கள் சொல்ல முடியாது-அதற்கு மக்களே சாட்சி) முஸ்லிம் சமூகம் இந்த ஆட்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது. இதன்டிபடி இந்த ஆட்சியில் தங்களுக்கான அரசியல் நியாங்களைத் தேடிக்கொள்ளும் உரித்து முஸ்லிம் சமூகத்திற்கு உண்டு.
இதற்கமைய இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடங்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கான சாதகமான விடயங்கள் என்ன? அதேபோல் இந்த 100 நாள் திட்டத்தை நிறைவேற்றுவதனால் முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் இழக்கின்ற விடயங்கள் என்ன? என்பது பற்றி எல்லாம் ஆராய்ந்து அதற்கு மாற்றமான யோசனைகளை மைத்திரி ஆட்சிக்கு முன்வைப்பதும் முஸ்லிம் சமூக் குறித்து அடையாளம்காணப்பட்ட காணி, நிர்வாக, மதவிவவகாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு நடடிவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளை கையளிப்பதும் முஸ்லிம் காங்கிரஸுக்குள்ள தார்மீகப் பொறுப்பும் கடமையும் ஆகும்.
இதற்கான முயற்சிகளையும் அதற்கான நடவடிக்கைகளையும் இருக்கின்ற இந்த 100 நாட்களுக்குள் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளாமல் அதுதொடர்பான எந்த அக்கறைகளும் இல்லாமல் இறுதியாக மஹிந்த அரசிடம் தாங்கள் விடாப்பிடியாக கேட்டுப்பிடித்த கரையோர மாவட்டம் முதல் கரிமலையூற்றுப் பள்ளிவரையான எத்தனையோ விடயங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் இந்த அமைச்சுப்பதவியைப் பெற்று நிற்பதுபோல் ஹக்கீம் நிற்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
இதன்படி பார்த்தால் கரையோர மாவட்டம் என்பது கட்சி மாறுவதற்கான ஒரு ஆயுதமாகவே தெரிகிறது.மாறாக அது முஸ்லிம் காங்கிரஸால் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் ஒரு தீர்வாக அமையாது.இதில் வேடிக்கை என்னவென்றால் கரையோர மாவட்டத்தை உடனே பெற்றுத்தாருங்கள் என்று முஸ்லிம் மக்கள் எந்த முனைப்பும் எடுக்காத ஒரு தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தாமாகவே அதனை ஒரு பூதமாகத் தோண்டி எடுப்பதும் பின் அதுவே அதனை ஒரு குழியில் போட்டு மூடிவைப்பதும் போதுமானதாக இருக்கிறது. இதையே முஸ்லிம் காங்கிரஸ் தன்னை ஒரு உரிமைத்தவ கட்சி என்பதற்கு அடையாளமாக வைத்திருக்கிறது.
உண்மையில் கொள்கைக்காக அரசியல் செய்வதை ஜே.வி.பி யிடமிருந்தும் உரிமைக்காக அரசியல் செய்வதை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சிக்கு இவ்விரு கட்சிகளும் மிகப்பெரும் பங்களிப்புச் செய்த போதிலும் அவை அமைச்சுப்பதவிகளுக்கு மைத்திரியிடம் எந்த கைநீட்டுதலையும் செய்யவில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கையாலாகாத கட்சி என்பதை மைத்திரி அரசிடமும் நிரூபித்துவிட்டது.
அதுமாத்திரமல்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் 2012 இல் கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவு வழங்கியதும் அதன் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்குள் முதலமைச்சர் கனவு ஊசலாடத் தொடங்கிவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவு வழங்கியதற்காக முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கான சம்மதத்தினை மஹிந்த தெரிவித்தும் அதற்கு யாரை நியமிப்பது என்று கட்சிக்குள் ஏற்பட்ட போட்டி ஒரு காரணமாக கூறப்பட்டு நஜீப் ஏ. மஜீத் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டாலும் ஹக்கீம் நினைத்திருந்தால் பொருத்தமான ஒருவருக்கு அதனைக் கொடுத்து கிழக்கு மாகாண ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்ய முயற்சிக்கவில்லை. இறுதியாக ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆதரவினை வழங்குவதற்கும் மஹிந்த குறிப்பிட்ட முதலமைச்சரை நியமிக்க பெயரை தாருங்கள் என்று கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின அப்போதுகூட அவர் அதற்கான முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலை இவ்வாறு இருக்க 2012 இல் இரண்டாவது இடத்திற்கு அதிகப்படியான ஆசனங்களைப்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸை அழைத்தபோது முதலமைச்சரை தங்கள் பக்கம் தருகிறோம் என்று வலிந்து அழைத்துக்கொண்டது அதற்கும் முதலமைச்சர் ஒரு பொருட்டல்ல என்று அந்த அழைப்பினை ஹக்கீம் மறுத்துவிட்டார்.
ஆனால் தற்போது கிழக்குமாகாணத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் கடந்த வியாழக்கிழமை 15 ஆம் திகதி சந்தித்த வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சரை மட்டும் தங்களுக்கு தருமாறு கேட்டிருக்கிறது. இதற்கு ஹக்கீம் எந்த சம்மதமும் தெரிவிக்காது இருந்தாலும் இறுதியில் இந்நிலை முடிவாகுமாக இருந்தால், இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் பெறக்கூடாது என்ற உள்நோக்குடன்தான் ஹக்கீம் இருக்கின்றார் என்பதும் மேலும் வலுவாக நிரூபிக்கப்படும்.
ஏனெனில் மஹிந்த முதலமைச்சரை பெற்றுக்கொள்ள கூறிய போதும் அதனை பெறாமலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சரை விட்டுக்கொடுத்த போதும் அதனையும் ஏற்காமலும் இருந்துவிட்டு இப்போது முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரஸுக்கு தரமுடியாது என்ற உத்தரவாதம் கூறப்பட்ட நிலையில் அதனை சம்மதிப்பவராக ஹக்கீம் இருந்தால் இதில் அவருக்குள்ள ஒரேஒரு பிரச்சினை முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க கூடாது என்பதைத் தவிர வேறில்லை என்றுதானே எடுக்க வேண்டும்.
இவ்வாறு தன் கட்சி சார்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதில் ஹக்கீம் எதிர்நோக்கும் சவால்கள் என்ன? எதற்காக ஒரு முதலமைச்சரை தன் கட்சி பெற்றுவிடக் கூடாது என்பதில் இவ்வளவு அவதானமாக காய்நகர்த்துகிறார். தலைமைத்துவ அச்சமா? யாருக்கு கொடுப்பது என்ற தயக்கமா? இதில் உள்ள அரசியல் காரணங்கள் என்ன என்பதையாவது ஹக்கீம் வெளிப்படுத்துவாரா?
மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்குரிய பதவியாகப் பார்க்கப்படுவதிலும் பார்க்க அது கிழக்கு முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு பதவியாகப் பார்க்கப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியலுக்கு வேராக இருக்கின்ற இடம் கிழக்கு மாகாணம்தான். எனவே அந்த மக்களின் அரசியல் உரிமையாக இந்த முதலமைச்சர் பதவியைப் பெற்றுக்கொடுக்க கட்சி சார்ந்த நலன்களுக்கும், தலைமைத்துவ சுயநலன்களுக்கும் அப்பால் முஸ்லிம் காங்கிரஸ் முன்வர வேண்டும்.
ஆனால் இன்றுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இதனை நிறைவேற்றாமல் முதலமைச்சர் பதவியை பெறக் கூடாது என்பதில்தான் குறியாக இருக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும் முதலமைச்சர் என்பது ஒரு கனவாகவே இருக்கும்.
அடுத்து ஜனாதிபதித் தேர்தல்காலத்தில் அற்கான பிரச்சாரம் முடிவடைகின்ற இறுதி 5 ஆம் திகதிவரையான நாள்வரை கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து இறுதியில் கிடைக்காது போன ஒரு விடயமாக சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கை சாய்ந்தமருது மக்களை அரசியல் ரீதியாக ஏமாற வைத்துவிட்டது.
ஆனாலும் யார் செய்வது என்பதைவிடவும் யாராவது இதனை சாய்ந்தமருது மக்களுக்கு செய்ய வேண்டும் என்று கருதுகின்ற அவசியமான ஒரு அதிகாரத் தேவையாக சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கை இருந்துவருகிறது. முஸ்லிம் காங்கிரஸ் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை அக்கட்சிக்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அளித்துவருகின்ற சாய்ந்தமருது மக்களுக்கு ஒரு தனியான பிரசேத சபையை பெற்றுக்கொடுப்பது முஸ்லிம் காங்கிரஸ் சுயமாக நிறைவேற்ற வேண்டிய ஒரு மக்கள் தேவையாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதுவில் நடந்த போது அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபையை பெற்றுக்கொடுப்பதில் எங்களுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை அதனை நானே முன்னின்று இந்த மக்களுக்காகப் பெற்றுக்கொடுப்பேன் ஆனால் கல்முனை நகர் துண்டாடப்படக் கூடாது என முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவிடம் கால்களைப் பிடித்துக் கேட்கின்றேன் என மிகப் பகிரங்கமகா வேண்டி நின்றார்.
இவ்வாறு ஹரீஸ் பேசிய பேச்சுக்கள் வெறும் தேர்தல்காலப் பிரச்சாரமாக இல்லாமல் இஹ்லாசான ஒரு பேச்சாக இருந்தால் அதனை இந்த ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக சாய்ந்தமருது மக்களுக்கு அவரே முன்னின்று பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் ஹரீஸ் இதனை தான் மேடையில் பேசியது போன்று செய்வாரா? சாய்ந்தமருதுவுக்கு ஒரு பிரதேச சபை பெற்றுக்கொடுக்கப்படுவதில் ஒருபோதும் கல்முனை நகர் துண்டாடப்பட வாய்ப்பில்லை என்ற நியாயத்தினையாவது ஹரீஸ் புரிந்துகொள்வாரா?
ஆனாலும் தலைவர் ஹக்கீமிடம் சாய்ந்தமருது பிரதேச சபை விடயத்தைக் கூறினால் அதற்கு அவர் அது ஒரு தேர்தல் கால காய்ச்சல் என்று பதில் அளித்து சிரிக்கும் நிலைமையும் கடந்தகாலங்களில் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நினைவோடு வைத்திருக்க வேண்டி இருக்கிறது.
இப்படி முஸ்லிம் காங்கிரஸ் சமூக அரசியல் செய்கின்றோம் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில் இதுவரை ஹக்கீமின் தலைமையில் சமூகத்திற்காக சாதித்த சமூக வெற்றிகள் என்ன? என்ற பட்டியலை முஸ்லிம் காங்கிரஸ் தொகுத்து தன்னை நிறுத்துப்பார்க்க வேண்டும்.
இவை இவ்வாறு இருக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் மைத்திரிக்கு ஆதரவாக அளிக்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் மீதான வெறுப்புணர்வுகளுடன்தான் பெரும்பான்மையான வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இதனை எதிர்வருகின்ற ஒரு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களும் ஒரு பாடமாக மக்களிடமிருந்து படிக்கலாம்.
இதன் வெளிப்பாடாக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் எங்கு கேட்டாலும் அப்பகுதி மக்கள் மஹிந்தவைப் போன்று அவரையும் தோற்கடிக்க வேண்டும் என்று அதற்கும் தயாராக இருப்பதாக இப்போதுள்ள சந்திக் கதைகள் பேசப்படுகின்றன. அவ்வாறான ஒரு பாடத்தை கிழக்கு மக்கள் ஹக்கீமுக்கு புகட்டுவார்களா? அல்லது யாவற்றையும் மறந்து தங்கள் தோள்களின் மீது அவரை இன்னும் தூக்கிச் சுமப்பார்களா?

பழையன போய் புதியன வர வேண்டும்.
ReplyDelete