Header Ads



டெங்கு நுளம்பைக்கூட, மைத்திரிபாலவின் உடலில் அமர இடமளிக்க வேண்டாம் - டலஸ் அழகப்பெரும

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் உடலில் நுளம்புக்குக் கூட உட்கார முடியாதளவுக்கு அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதிக்கு கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; 

யார் மைத்திரிபால சிறிசேனவின் மேடைக்கு கல்லெறிந்தாலும் கொடிகளை கழற்றினாலும் அலுவலகத்திற்கு தாக்குதல் நடத்தினாலும் அல்லது சுவரொட்டியொன்றை கிழித்தாலும் அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கௌரவத்தையே கெடுக்கும்.  

இந்நிலையில் நாம் பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம்.  அதாவது தேர்தல் கடமைகள் தவிர அந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அணியினர் தவிர உங்களுக்கு முடியுமென்றால் மற்றைய சகல பொலிஸாரையும் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக பயன்படுத்துங்கள்.   

அதேபோல இராணுவத் தளபதியிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தேசிய பாதுகாப்பு விடயம் தவிர்ந்த இராணுவத்தினர் இருந்தால் இராணுவப் படைப்பிரிவாக இருந்தாலும் பரவாயில்லை மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக பயன்படுத்துங்கள். 

எமது வீடுகள் மீதும் வாகனங்கள் மீதும் சூடு நடத்தினர் என்ற செய்திகள்  தயாரிக்கப்படுகின்றன. கம்பியூட்டர் ஜில்மாட் என்ற செய்திகளும் தயாரிக்கப்படும். பொன்சேகாவின் தேர்தல் நடவடிக்கையின் போது ஹொரகொல்லாவுக்கு ஊடகவியலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது குண்டுத் தாக்குதல் நடத்தும் திட்டமும்  காணப்பட்டது. அதனை நாம் முறியடித்த சம்பவமும் உண்டு. அது நடந்திருந்தால் நிலைமை என்னவாயிருக்கும். 

இதனால் இது போன்ற உருவாக்கிய சம்பவங்கள் நடக்கலாம். 5 வருடங்கள் மைத்திரி பால சிறிசேனவின் அருகிலேயே நடமாடிய டெங்கு நுளம்பைக் கூட அவரின் உடலில் அமர இடமளிக்க வேண்டாம். அவருக்கு பாதுகாப்பை வழங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.